“10 நாட்களாக அப்பா ஐசியூவில் இருந்தாரு... அவருக்கு இதனை அர்ப்பணிக்கிறேன்..” - மோசின் கான் நெகிழ்ச்சி

“நான் என்னை அமைதிப்படுத்த முயற்சிசெய்துகொண்டே, ஸ்கோர்போர்டை பார்க்காமல், கடைசி 6 பந்துகளை நன்றாக வீசிவிட்டு வந்தேன்”
Mohsin khan
Mohsin khan PTI

நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுகள் கிளைமேக்ஸை நெருங்கியுள்ளன. பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் ஆளாக ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 18 புள்ளிகளுடன் முன்னேறியுள்ள நிலையில், மீதமுள்ள மூன்று இடங்களை பிடிப்பதற்கான போட்டாபோட்டி தற்போது நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் வரும் ஞாயிற்றுக் கிழமையுடன் முடிவடைய உள்ள நிலையில், இந்தப் போட்டி ரேஸில் முந்தும் முனைப்பில் உள்ள முக்கிய அணிகளான லக்னோ மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான 63-வது லீக் போட்டி நேற்று லக்னோ ஏகானா மைதானத்தில் நடைபெற்றது.

LSG team
LSG teamPTI

மிகவும் பரபரப்பான இந்த ஆட்டத்தில், க்ருனால் பாண்ட்யா தலைமையிலான லக்னோ அணி 5 ரன்கள் வித்தியாசத்தில், மும்பை அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னோ அணி 15 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3-ம் இடத்தில் நல்ல ரன் ரேட்டுடன் (+0.304) உள்ளது. அதேநேரத்தில், பிளே ஆஃப் வாய்ப்பை நெருங்கும் நிலையில் இருந்த மும்பை அணி, இந்தப் போட்டியில் தோல்வியை தழுவியது. அடுத்து வரும் ஆட்டத்தில் வெற்றிபெற்றாலும், மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்தே பிளே ஆஃப் செல்லும் இக்கட்டான நிலைக்கு அந்த அணி சென்றுள்ளது.

இந்நிலையில், கடைசி ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து வெற்றியைத் தேடி தந்த இடதுகை மித வேகப்பந்து வீச்சாளர் மோசின் கான், கடும் அழுத்தத்தில் இருந்தபோதும் இதனை சாதித்தது குறித்து உருக்கமாக தெரிவித்துள்ளார். போட்டிக்குப் பின் அவர் கூறியதாவது, “வலையில் (நெட் பிராக்டிஸ்) என்ன பயிற்சி மேற்கொண்டேனோ, அதனைதான் களத்தில் செயல்படுத்தினேன். க்ருனால் பாண்ட்யா என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோதும் கூட, அதேயே தான் கூறினேன். ரன்கள் உயர்ந்துகொண்டிருந்தபோதும், கடைசி ஓவருக்காக எந்த மாற்றங்களையும் செய்யவில்லை. நான் என்னை அமைதிப்படுத்த முயற்சிசெய்துகொண்டே, ஸ்கோர்போர்டை பார்க்காமல், கடைசி 6 பந்துகளை நன்றாக வீசிவிட்டு வந்தேன். அதேபோல் முதல் 2 பந்துகளை ஸ்லோயராக வீசினாலும், பந்து ரிவர்ஸ் ஸ்விங்காவதை அறிந்து யார்க்கர்களை அதிகமாக வீசினேன்.

கடந்த ஆண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பின் காயமடைந்து, ஒரு வருடத்திற்குப் பிறகு தற்போது விளையாட வரும்போது மிகவும் கடினமான காலமாக தெரிந்தது. மேலும், எனது தந்தை உடல்நிலை பிரச்சனை காரணமாக கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் ஐசியூ-வில் இருந்தநிலையில், நேற்று தான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இந்த வெற்றியை அவருக்கு அர்ப்பணிக்கிறேன். இந்த ஆட்டத்தை என் தந்தை பார்த்திருப்பார். கடந்த போட்டியில் மோசமாக ஆடிய போதும் என்மீது நம்பிக்கை வைத்து களமிறக்கிய கௌதம் கம்பீர், விஜய் தாஹியா உள்ளிட்டோருக்கு கடமைப்பட்டுள்ளேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com