PBKS vs LSG | பிரப்சிம்ரன், ஸ்ரேயாஸ் அசத்தல்.. லக்னோ அணியை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி!
18வது சீசனாக 2025 ஐபிஎல் தொடர் தொடங்கி நடைபெற்றுவருகிறது. முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்து இரண்டாவது சுற்று போட்டிகள் நடந்துவருகின்றன. 2 போட்டிகளில் விளையாடி இரண்டையும் வென்றுள்ள ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
இந்நிலையில் இன்றைய மிகப்பெரிய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.
171 ரன்கள் அடித்த லக்னோ அணி..
லக்னோவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியில் மிட்செல் மார்ஸ் 0, ரிஷப் பண்ட் 2, மார்க்ரம் 28 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேற 35 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது லக்னோ அணி.
எப்போதும் அணியை மீட்டு எடுத்துவரும் அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என விளாசி 44 ரன்கள் அடித்து அசத்தினார். மறுமுனையில் 3 சிக்சர்களை பறக்கவிட்ட ஆயுஸ் பதோனி 41 ரன்கள் அடிக்க லக்னோ அணி மீண்டு எழுந்தது.
ஆனால் சரியான நேரத்தில் பூரனை யுஸ்வேந்திர சாஹல் வெளியேற்ற, பதோனியை அர்ஷ்தீப்பும், டேவிட் மில்லரை மார்கோ யான்சனும் அவுட்டாக்க பஞ்சாப் அணி கம்பேக் கொடுத்தது.
இறுதியாக வந்து 2 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என பறக்கவிட்ட அப்துல் சமாத் 27 ரன்கள் அடித்து லக்னோ அணியை 171 ரன்கள் என்ற டோட்டலுக்கு அழைத்துச்சென்றார்.
இதனையடுத்து 172 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி 16.2 ஓவர்களிலேயே 177 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியில் தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் 34 பந்துகளில் 3 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் விளாசினார். கேப்டன் ஸ்ரேயான் 30 பந்துகளில் 52 ரன்களும், வதேரா 25 பந்துகளில் 43 ரன்களும் எடுத்து களத்தில் நின்றனர். ஸ்ரேயாஸ் தலைமையிலான பஞ்சாப் அணி அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் வென்று இரண்டாவது இடத்தில் உள்ளது.