நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து கே.எல்.ராகுல் விலக வாய்ப்பு? - வெளியான தகவல்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற இன்னும் ஒருமாதமே உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான கே.எல்.ராகுலின் காயம், அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
KL Rahul
KL RahulTwitter

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான கே.எல்.ராகுல், நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு தலைமை தாங்கி வருகிறார். கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி பெங்களூரு அணிக்கு எதிராக லக்னோ ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடந்தப் போட்டியில், முதல் இன்னிங்சின் இரண்டாவது ஓவரில் பீல்டிங் செய்தபோது கே.எல்.ராகுல் காயமடைந்தார். அந்த ஓவரின் கடைசிப் பந்தை பெங்களூரு கேப்டன் டூ பிளசிஸ் அடிக்க, பந்து பவுண்டரியை நோக்கி பாய்ந்தது. அதை தடுக்கும் முயற்சியில் வேகமாக ஓடியபோது கே.எல்.ராகுலின் வலது தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு தரையில் சரிந்து விழுந்து, வலியால் துடித்தார். காயம் காரணமாக அவரால் எழுந்து நடக்க முடியாமல் போனநிலையில், அணியின் பிசியோ மற்றும் ரிசர்வில் இருந்த சக வீரரின் உதவியுடன் மைதானத்தை விட்டு பெவிலியனுக்கு திரும்பினார்.

பின்னர், அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்லும் வகையில், தனது காயத்தையும் பொருட்படுத்தாமல் லக்னோ பேட்டிங்கின்போது கடைசி வீரராக அவர் களமிறங்கினார். எனினும், லக்னோ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியிடம் தோல்வியை தழுவியது. இதனைத்தொடர்ந்து இன்று லக்னோ ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் சென்னை அணிக்கு எதிரானப் போட்டியிலும் கே.எல்.ராகுல் பங்கேற்கவில்லை. இதனால் க்ருணால் பாண்டியா அணியை வழிநடத்திய நிலையில் மழை காரணமாக போட்டி பாதியிலேயே கைவிடப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இந்தநிலையில், கே.எல்.ராகுல் காயம் அடைந்துள்ளதால், மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்பாரா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் அடுத்த மாதம் 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ள இந்திய அணியில் இடம்பிடித்துள்ள கே.எல்.ராகுல் மற்றும் ஜெய்தேவ் உனத்கட் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் இருவரும் நாளை மும்பையில் பிசிசிஐ-யின் மருத்துவ முகாமில் ஸ்கேன் பரிசோதனைக்காக செல்கின்றனர்.

பரிசோதனை முடிவுகளைப் பொறுத்து கே.எல்.ராகுலை ஐபிஎல் தொடரில் தொடர அனுமதிக்கலாமா, வேண்டாமா என்பதை பிசிசிஐ நிர்வாகம் முடிவு செய்யவுள்ளது. இதுகுறித்து லக்னோ அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கே.எல்.ராகுல் எப்போது களத்திற்கு திரும்புவார் என்பதை உரிய நேரத்தில் அறிவிப்போம் என்று குறிப்பிட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com