
நடப்பு ஐபிஎல் சீசனில் இறுதி ஆட்டத்தில் விளையாட இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த முறையும் சிஎஸ்கே அணி கோப்பையை வெல்லுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த சீசன் தொடக்கத்தில் சிஎஸ்கே பந்துவீச்சு மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், தோனி என்ற சிறந்த கேப்டன் இளம் பந்துவீச்சாளர்களை சிறப்பாக கையாண்டதன் மூலம் சிஎஸ்கே பலம் வாய்ந்த அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து பேசியிருக்கிறார் சவுரவ் கங்குலி. அவர் பேசுகையில், “சிஎஸ்கே அணியும் தோனியும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். பெரிய போட்டிகளை எல்லாம் எப்படி வெல்ல வேண்டும் என்பது குறித்து மற்றவர்களுக்கு அவர்கள் வழி காட்டியிருக்கிறார்கள். எப்போதும் போல் தோனியின் கேப்டன்சி அபாரமாக இருந்தது. நெருக்கடியான போட்டிகளை எப்படி வெல்ல வேண்டும் என்பதை தனது கேப்டன்சி மூலம் மற்ற அணிகளுக்கு உதாரணம் காண்பித்திருக்கிறார் அவர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் பல இளம் வீரர்கள் கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள். அதில் ரிங்கு சிங், துருவ் ஜூரல், ஜெய்ஸ்வால் ஆகியோர் எல்லாம் சிறப்பாக விளையாடி இருக்கிறார்கள்.
இதே போல பஞ்சாப் அணிக்காக ஜித்தேஷ் சர்மாவும், மும்பைக்காக திலக் வர்மாவும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஐபிஎல் என்பது மிகப்பெரிய தொடர். இதனை இளம் வீரர்கள் நன்றாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர்” என்றார் சவுரவ் கங்குலி.