
ஒவ்வொரு நாட்களும் நம்மைவிட்டுக் கடந்து கொண்டிருந்தாலும், அந்த நாட்களில் எல்லாம் ஏதோ ஒரு சம்பவங்கள், சாதனைகள் படைக்கப்பட்டே வருகின்றன. அதிலும் கிரிக்கெட்டை எடுத்துக்கொண்டால் சொல்லவே வேண்டாம். இந்தியாவில் ஐபிஎல் திருவிழா அறிமுகமான பிறகு, எண்ணற்ற சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றாக, இன்றைய நாளில் முதல் பவர் பிளேயில் அதிக ரன்கள் எடுத்த அணியாக வலம் வரும் கொல்கத்தாவின் சாதனைப் பயணம் இன்று இணையதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு முன்பு, அதாவது கடந்த 2017ஆம் ஆண்டு, இதே நாளில் (மே 7) நடைபெற்ற ஐபிஎல் திருவிழாவின் 46வது லீக் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சந்தித்தன. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூரு 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய கொல்கத்தா 15.1 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கைத் தொட்டது.
இந்தப் போட்டியின் போதுதான் கொல்கத்தா அணி, மகத்தான சாதனை ஒன்றைப் படைத்தது. அதாவது, முதல் பவர்பிளேவில் (1-6 ஓவர்கள்) விக்கெட் இழப்பின்றி 105 ரன்கள் எடுத்து சாதனை படைத்தது. அதாவது முதல் ஓவரில் 2 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 14 ரன்கள் எடுத்த கொல்கத்தா, 2வது ஓவரில் 1 பவுண்டரியுடன் மேலும் 2 ரன்கள் எடுத்து 6 ரன்கள் சேர்த்தது. 3வது ஓவரில் மீண்டும் 1 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 14 ரன்கள் எடுத்தது. 4வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரியுடன் மேலும் 3 ரன்கள் எடுத்து 24 ரன்களைச் சேர்த்தது.
சுனில் நரைனும், கிறிஸ் லைனும் பெங்களூரு அணி வீரர்களின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். 6 ஓவர்களில் முடிவில் நரைன் 16 பந்துகளில் 4 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 54 ரன்களும், கிறிஸ் 20 பந்துகளில் 4 சிக்ஸர் 5 பவுண்டரிகளுடன் 49 ரன்களும் எடுத்தனர்.
5வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி, 1 சிக்ஸருடன், 2 வைடு ஆகியவற்றுடன் மேலும் 2 ரன்கள் எடுத்து 26 ரன்களைச் சேர்த்தது. முதலாவது பவர் பிளேயின் கடைசி ஓவரான 6வது ஓவரில் 2 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் தலா 2 ரன்களை இரண்டுமுறை எடுத்து 20 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் முதலாவது பவர்பிளேயில் கொல்கத்தா அணி 105 ரன்களைச் (14, 6, 14, 25, 26, 20) சேர்த்து சாதனை படைத்தது. அது, இன்றுவரை தொடர்கிறது.
இதற்குமுன்பு சென்னை அணி, பஞ்சாப்புக்கு எதிராக, கடந்த 2014ஆம் ஆண்டு முதலாவது பவர் பிளேயில் 2 விக்கெட் இழப்புக்கு 100 ரன்களை எடுத்திருந்தது. அதை கொல்கத்தா 2017ஆம் ஆண்டு முறியடித்திருந்தது.