‘கேப்டன் ஸ்ரேயாஸுக்கே இடமில்லையா’ - கொல்கத்தா அணி பதிவிட்ட போஸ்டர்; கொந்தளித்த ரசிகர்கள்!
2024 ஐபிஎல் சீசனில் அபாரமாக விளையாடி கோப்பையை தட்டிச் சென்றது ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. அதுவும் சும்மா இல்லை, கடந்த சீசனில் ராட்சத டீம் ஆக இருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை இறுதிப் போட்டியில் வீழ்த்தி கொல்கத்தா அணி வென்றது. டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, கிளாசன் போன்ற அதிரடி ஹிட்டர்கள் இருந்த அந்த அணியை 113 ரன்களில் சுருட்டி வியப்பில் ஆழ்த்தியது அந்த அணி.
ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு அதன் எல்லா புகழும் கோச் ஆக இருந்த கவுதம் காம்பீருக்கே சென்றது. கேப்டனாக இருந்து களத்தில் அணியை வழிநடத்திய ஸ்ரேயாஸ் ஐயருக்கு எவ்வித பெயரும் கிடைக்கவில்லை. காம்பீரையே தூக்கி வச்சு கொண்டாடினார்கள். அத்தோடு முடியவில்லை, கோப்பையையே வென்று கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயரை அணியில் கூட தக்க வைக்கவில்லை. பின்னர், ஸ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது.
நடப்பு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணி பிளே ஆஃப் வாய்ப்பையே இழந்துவிட்ட நிலையில், ஸ்ரேயாஸ் தலைமையிலான பஞ்சாப் அணியோ டாப் இரண்டு இடத்தில் உள்ளது. தன்னுடைய கேப்டன்ஷிப்பின் அபார திறமையை ஸ்ரேயாஸ் மீண்டும் நிரூபித்துள்ளார். மூன்று வெவ்வேறு அணியை பிளே ஆஃப்க்கு அழைத்துச் சென்ற அதுவும் முதல் இடங்களில் கொண்டு சென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்நிலையில், 2024 சீசனுக்கான கோப்பையை வென்றதன் ஓராண்டு நிறைவையொட்டி கொல்கத்தா அணியின் எக்ஸ் தள பக்கத்தில் நேற்று போஸ்டர் ஒன்று பதிவிடப்பட்டிருந்தது. அந்தப் போஸ்டரில் ரஸல், சுனில் நரேன், வெங்கடேஷ் ஐயர் ஆகிய மூவர் முன்னிலையில் நின்றிருக்க, மற்ற வீரர்கள் அமர்ந்திருந்தனர். ஆனால், இந்த புகைப்படத்தில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறவில்லை. இது ஐபிஎல் ரசிகர்கள் பலருக்கும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. கொல்கத்தா அணியை மிகவும் கடுமையாக ட்ரோல் செய்து வருகிறார்கள்.
ஸ்ரேயாஸ் ஐயருக்கு நிகழ்ந்த புறக்கணிப்புகளுக்காக ரசிகர்கள் ஆதங்கத்துடன் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். பின்னர் நேற்று இரவே ஸ்ரேயாஸ் ஐயர் இருக்கும் மற்றொரு போஸ்டரை கொல்கத்தா அணி பதிவிட்டது.
முன்னதாக மும்பை அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு பேசிய பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ், அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மற்றும் அணி நிர்வாகத்தில் பெரிய அளவில் புகழ்ந்தார். “ஒவ்வொரு வீரரையும் ரிக்கி பாண்டிங் சிறப்பாக கையாள்கிறார். ஒவ்வொரு வீரரிடமும் பேசுவது முக்கியத்துவம் வாய்ந்தது. நெருக்கடியான நேரத்தில் முதுகில் குத்துவதும், மோசமான விஷயங்களில் ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் மீது பேசுவதும் எளிதான விஷயம். ஆனால், நாங்கள் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்தோம்” என்றார். முதுகில் குத்துவது என்று கொல்கத்தா நிர்வாகத்தை மறைமுகமாக ஸ்ரேயாஸ் சாடி பேசியாக கூறப்படுகிறது.