4 ரன்னில் தோல்வி.. கையிலிருந்த போட்டியை கோட்டைவிட்ட கொல்கத்தா.. பூரன் அதிரடியால் லக்னோ வெற்றி!
18வது ஐபிஎல் சீசனாக 2025 ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடைபெற்றுவருகிறது. பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளை தவிர மற்ற அனைத்து அணிகளும் அதிரடியாக விளையாடிவருகின்றன.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து களம்கண்டது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.
238 ரன்கள் குவித்த லக்னோ அணி..
அதிகப்படியான ரன்கள் வரும் மைதானம் என்பதால் சேஸ்செய்வது தான் சிறந்த முடிவு என டாஸ்வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய எய்டன் மார்க்ரம் மற்றும் இன்ஃபார்மில் இருந்துவரும் மிட்செல் மார்ஷ் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஒருபக்கம் 4 பவுண்டரிகள் 2 சிக்சர் என எய்டன் மார்க்ரம் வெளுத்துவாங்க, 6 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய மிட்செல் மார்ஷ் மிரட்டிவிட்டார். 10 ஓவரில் 99 ரன்கள் அடித்த இந்த ஜோடி ஒரு பிரமாண்ட இலக்கிற்கு அடித்தளம் போட, விக்கெட்டை தேடிய கொல்கத்தா அணி மார்க்ரமை 47 ரன்னில் வெளியேற்றி முதல் விக்கெட்டை எடுத்துவந்தது.
அதற்குபிறகு ஜோடி சேர்ந்த மார்ஷ் மற்றும் நிக்கோலஸ் பூரன் இருவரும் கொல்கத்தா பவுலர்களுக்கு நிம்மதியற்ற இரவை கொடுக்க ஆயத்தமாகினர். ஒருத்தர் அடித்தாலே தாங்காது, இதில் இரண்டு ஹிட்டர்களும் சேர்ந்து அடித்தால் என்னவாகும். 81 ரன்கள் அடித்து மிட்செல் மார்ஷ் வெளியேற, 8 சிக்சர்கள் 7 பவுண்டரிகள் என திரும்பும் பக்கமெல்லாம் சிக்சர் மழை பொழிந்த நிக்கோலஸ் பூரன் 36 பந்தில் 87 ரன்கள் குவித்து மிரட்டிவிட்டார்.
பூரனின் காட்டடி பேட்டிங்கால் 20 ஓவரில் 238 ரன்கள் குவித்து அசத்தியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.
4 ரன்னில் தோற்ற கொல்கத்தா அணி!
239 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, லக்னோ அணிக்கு பதிலடி கொடுக்கும் ஒரு மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
2 சிக்சர்களை விளாசிய டி-காக் விரைவாகவே வெளியேறினாலும், இரண்டாவது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த கேப்டன் ரஹானே மற்றும் சுனில் நரைன் இருவரும் அதிரடி சரவெடி என லக்னோ பந்துவீச்சாளர்களை துவைத்தெடுத்தனர். 4 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என சுனில் நரைன் விரட்ட, 8 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என துவம்சம் செய்த ரஹானே கொல்கத்தா அணியை 6 ஓவரில் 90 ரன்களுக்கு அழைத்துச்சென்றார்.
விக்கெட்டை எடுத்துவர போராடிய லக்னோ அணி சுனில் நரைன் விக்கெட்டை 91 ரன்னில் எடுத்துவந்தது. ஆனால் அடுத்த விக்கெட்டுக்கு கைக்கோர்த்த கேப்டன் ரஹானே மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவரும் லக்னோவை கம்பேக் கொடுக்கவே அனுமதிக்கவில்லை. ரஹானே 61 ரன்கள் அடித்து அசத்த, 6 பவுண்டரிகள் 1 சிக்சர் என பறக்கவிட்ட வெங்கடேஷ் ஐயர் 13 ஓவரில் 162 ரன்கள் என்ற வலுவான நிலைக்கு கொல்கத்தாவை எடுத்துச்சென்றார்.
கடைசி 7 ஓவருக்கு 77 ரன்கள் மட்டுமே தேவை, கையில் 8 விக்கெட்டுகள் மீதமுள்ளது என்ற வலுவான நிலையில் இருந்த கொல்கத்தா அணி அடுத்த 23 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்னுக்கு 7 விக்கெட்டுகள் என்ற மோசமான நிலைக்கு சென்றது. ரமன்தீப் 1 ரன், ரகுவன்சி 5 மற்றும் ரஸ்ஸெல் 7 ரன்கள் என வந்தவேகத்தில் பெவிலியன் திரும்ப லக்னோ அணி தரமான கம்பேக் கொடுத்தது.
கடைசி 6 பந்துக்கு 24 ரன்கள் தேவையென போட்டி மாற களத்தில் ரிங்கு சிங் நம்பிக்கை கொடுக்கும் ஒரே வீரராக இருந்தார். இறுதி 3 பந்துக்கு 19 ரன்கள் அடிக்கவேண்டிய நிலையிலேயே ரிங்கு சிங்குவிற்கு ஸ்டிரைக் கிடைத்தது. 3 பந்தில் 14 ரன்களை மட்டுமே அவரால் அடிக்க முடிந்த நிலையில், 4 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி த்ரில் வெற்றிபெற்றது.
13 ஓவர் வரை ஆக்ரோசமான அணுகுமுறையில் செயல்பட்ட கொல்கத்தா அணி, ரிங்கு சிங்குவிற்கு முன்னதாக ரமன் தீப்சிங்கையும், ரகுவன்சியையும் களமிறக்கி தவறிழைத்தது. ஒருவேளை அவர்களுக்கு முன்னதாகவே ரிங்கு சிங் களத்திற்கு வந்திருந்தால் கையில் இருந்த போட்டியை கொல்கத்தா அணி கோட்டைவிட்டிருக்காது. 5 போட்டியில் 3வது வெற்றியை ருசித்திருக்கும் லக்னோ அணி, புள்ளிப்பட்டியலில் 4வது இடம்பிடித்து அசத்தியுள்ளது.