RCB vs KKR| மழையால் நடக்காத போட்டி.. தொடரிலிருந்து வெளியேறியது நடப்பு சாம்பியன் KKR!
2025 ஐபிஎல் தொடரானது மார்ச் 22 முதல் தொடங்கி மே 25-ம் தேதிவரை நடத்த திட்டமிடப்பட்டு பரபரப்பாக நடைபெற்றது. 10 அணிகள் கோப்பைக்காக போட்டிப்போட்ட நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் 3 அணிகள் தொடரிலிருந்து வெளியேறியுள்ளன.
இந்த சூழலில் மீதமுள்ள 7 அணிகள் பிளேஆஃப் செல்வதற்கான முதல் 4 இடங்களுக்காக போட்டிப்போட்டு வருகின்றன. நடப்பு சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து முன்னிலை பெற்றுள்ளன.
இந்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரம் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
வெளியேறியது நடப்பு சாம்பியன் கொல்கத்தா..
போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள், இன்றைய ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் மோதலின் மூலம் மீண்டும் தொடங்கப்பட திட்டமிடப்பட்டது.
இந்த சூழலில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கப்படவிருந்த ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையின் காரணமாக தாமதமானது. டாஸ் போடப்படாத நிலையில், மழை நிற்பதற்காக அணிகள் காத்திருந்தன. ஆனால் தொடர் கனமழையால் டாஸ் போடாமலேயே ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
போட்டி ரத்தானதால் இரண்டு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பிரித்து வழங்கப்பட்டது. இன்றைய போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய கொல்கத்தா அணி 1 புள்ளி மட்டுமே பெற்றநிலையில், நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது. சென்னை, ராஜஸ்தான், ஹைத்ராபாத்தை தொடர்ந்து 4வது அணியாக வெளியேறியது கொல்கத்தா.
17 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.