dc vs kkr
dc vs kkrcricinfo

6 போட்டியில் 4 தோல்வி.. எங்கே சறுக்குகிறது டெல்லி கேபிடல்ஸ்? KKR தரமான வெற்றி!

2025 ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக 14 ரன்னில் தோல்வியை சந்தித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.
Published on

2025 ஐபிஎல் தொடரில் முதல் 4 போட்டியிலும் வரிசையாக வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்திய டெல்லி கேபிடல்ஸ் அணி, அடுத்த 6 போட்டிகளில் நான்கில் தோற்று சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது.

dc 2025
dc 2025

தற்போதும் 2025 ஐபிஎல்லில் சிறந்த லெவனை கொண்டிருக்கும் அணியாக வலுவாக இருக்கும் டெல்லி கேபிடல்ஸ், முக்கியமான தருணங்களில் கொத்து கொத்தாக விக்கெட்டை இழந்து மொமண்டமையும் இழந்து வருகிறது.

பரபரப்பாக தொடங்கிய இன்றைய போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியை எதிர்த்து சொந்த மண்ணில் களம்கண்டது டெல்லி கேபிடல்ஸ் அணி.

204 ரன்கள் அடித்த கொல்கத்தா..

டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் பட்டேல் பேட்டிங்கிற்கு சாதகமான அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் பந்துவீச்சை தேர்வுசெய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய குர்பாஸ் மற்றும் சுனில் நரைன் இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.

முதல் 3 ஓவரிலேயே 3 சிக்சர்கள் 6 பவுண்டரிகள் என வானவேடிக்கை காட்டிய இந்த ஜோடி 48 ரன்களை குவித்து மிரட்டியது. 5 பவுண்டரிகள் 1 சிக்சர் என செம டச்சில் இருந்த குர்பாஸை 26 ரன்னில் வெளியேற்றிய மிட்செல் ஸ்டார்க், சரியான நேரத்தில் விக்கெட்டை எடுத்துவந்தார்.

ஆனால் அடுத்து களமிறங்கிய கேப்டன் ரஹானே 4 பவுண்டரிகள் 1 சிக்சர் என நாலாபுறமும் சிதறடிக்க, 2 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என பறக்கவிட்ட சுனில் நரைன் அணியை 6 ஓவரில் 79 ரன்களுக்கு அழைத்துச்சென்றார்.

ஒரு பெரிய டோட்டலுக்கு கேகேஆர் அணி அடிபோட, நரைனை 27 ரன்னிலும், ரஹானேவை 26 ரன்னிலும் அடுத்தடுத்து பெவிலியன் அனுப்பிய டெல்லி அணி கம்பேக் கொடுத்தது. தொடர்ந்து வந்த 23 கோடி வீரர் வெங்கடேஷ் ஐயர், ’என்ன மேட்ச்சு, என்ன பண்ணிட்டு இருக்கிறோம் என்பதையே மறந்து’ வழக்கம்போல 7 ரன்னில் நடையை கட்டினார்.

ஆனால் அடுத்தடுத்து களத்திற்கு வந்த ரிங்கு சிங் மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் இருவரும் நம்பிக்கையளிக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்தினர். இருவரும் சேர்ந்து 5 பவுண்டரிகள் 2 சிக்சரை பறக்கவிட 20 ஓவர் முடிவில் 204 ரன்களை சேர்த்தது கொல்கத்தா அணி.

கையிலிருந்த போட்டியை இழந்த டெல்லி..

205 ரன்கள் என்ற ரிஸ்க்கியான இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணிக்கு, அதிரடி வீரர் அபிஷேக் போரலை 4 ரன்னிலும், கருண் நாயரை 15 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேற்றிய கொல்கத்தா அணி அடிக்கு மேல் அடிகொடுத்தது. போதாக்குறைக்கு நல்ல ஃபார்மில் இருந்துவரும் கேஎல் ராகுலை 7 ரன்னில் அசத்தலான ரன்அவுட் மூலம் வெளியேற்றிய சுனில் நரைன் டெல்லி ரசிகர்களின் தலைமேல் இடியை இறக்கினார்.

60 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து டெல்லி கேபிடல்ஸ் தடுமாற, 4வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த கேப்டன் அக்சர் பட்டேல் மற்றும் டூபிளஸி இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

7 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என துவம்சம் செய்த டூபிளஸி அரைசதமடித்து அசத்த, 4 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என அடித்துநொறுக்கிய அக்சர் பட்டேல் அணியை மீட்டு எடுத்துவந்தார்.

தேவைப்படும் ரன்ரேட் 10ஆக இருக்க, ஓவருக்கு ஒரு சிக்சர் பவுண்டரி என விரட்டிக்கொண்டே இருந்த இந்த ஜோடி சேஸிங்கை உயிர்ப்புடன் வைத்திருந்தது.

13 ஓவருக்கு 130 ரன்கள் அடித்தபிறகு, கையில் இன்னும் 7 விக்கெட்டுகள் உள்ளது என்ற வலுவான நிலையிலிருந்தது டெல்லி அணி. ஆனால் 14வது ஓவரை வீசவந்த சுனில் நரைன், அக்சர் பட்டேலை 43 ரன்னில் அவுட்டாக்கி வெளியேற்றிய கையோடு, நம்பிக்கை வீரர் ஸ்டப்ஸின் ஸ்டம்புகளையும் தகர்த்தெறிந்து 1 ரன்னில் பெவிலியன் அனுப்பினார்.

ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி தடுமாற அழுத்தம் அதிகமானது. அடித்து ஆடவேண்டிய கட்டாயத்தில் பெரிய ஷாட்டிற்கு சென்ற டூபிளஸியும் 62 ரன்னுக்கு அவுட்டாக, டெல்லி அணி இக்கட்டான நிலைமைக்கு சென்றது.

இறுதி நம்பிக்கையாக விப்ராஜ் நிகம் மற்றும் அஷுதோஷ் சர்மா இருவரும் களத்தில் நிற்க, எமனாக பந்துவீசவந்த வருண் சக்கரவர்த்தி அடுத்தடுத்த இரண்டு பந்தில் அஷுதோஷ் சர்மாவை 7 ரன்னிலும், ஸ்டார்க்கை 0 ரன்னிலும் வெளியேற்றி கலக்கிப்போட்டார்.

கடைசிவரை 5 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய விப்ராஜ் நிகம் 38 ரன்கள் அடித்து போராடினாலும், டெல்லி அணியால் 20 ஓவரில் 190 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

எங்கே சறுக்குகிறது டெல்லி?

ஒரு கட்டத்தில் கையில் இருந்த போட்டியை, கொத்து கொத்தாக விக்கெட்டை இழந்ததன் மூலம் கோட்டைவிட்டது டெல்லி கேபிடல்ஸ் அணி. புள்ளிப்பட்டியலில் கீழே இருக்கும் அணிகள் எல்லாம் கம்பேக் கொடுத்துவரும் நிலையில், டெல்லி அணி மொமண்டமை இழந்துள்ளது அந்த அணியின் ரசிகர்களுக்கு பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.

14 ரன்கள் வித்தியாசத்தில் தரமான வெற்றியை பதிவுசெய்த கொல்கத்தா அணி வெற்றிப்பாதைக்கு திரும்பியது. பவுலிங்கில் 3 விக்கெட்டுகள், பேட்டிங்கில் 27 ரன்கள் அடித்த சுனில் நரைன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com