18 வருடத்தில் முதல்முறை.. பலம் வாய்ந்த டெல்லியை குஜராத்தில் புதைத்த பட்லர்! சாதனை ரன்சேஸிங்!
இன்றைய ஐபிஎல் போட்டியில் நடப்பு ஐபிஎல் சீசனின் பலம் வாய்ந்த அணியாக இருந்துவரும் டெல்லி கேபிடல்ஸை எதிர்த்து களம்கண்டது சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி.
203 ரன்கள் அடித்த டெல்லி..
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி, பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தியது.
தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் போரல் முதல் ஓவரிலேயே 16 ரன்களை விரட்ட டெல்லி கேபிடல்ஸ் தரமாகவே தொடங்கியது. ஆனால் இரண்டாவது ஓவரிலேயே போரலை 18 ரன்னில் வெளியேற்றிய அர்ஷத் கான் மிரட்டிவிட்டார். தொடர்ந்து களத்திற்குவந்த கேஎல் ராகுல் 4 பவுண்டரிகள் 1 சிக்சர் என நாலாபுறமும் சிதறடிக்க 16, 17, 14 ரன்கள் என ஸ்கோர் வந்தவண்ணமே இருந்தது.
ஒருபுறம் கேஎல் ராகுல் வெளுத்துவாங்க, அவருக்கு போட்டியாக 2 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என துவம்சம் செய்த கருண் நாயர் அசத்தினார். 6 ஓவரில் 72 ரன்களை எடுத்துவந்த டெல்லி கேபிடல்ஸ் அணி ஒரு மிகப்பெரிய டோட்டலுக்கு அடித்தளம் போட்டது.
ஆனால் கேஎல் ராகுலை 28 ரன்னிலும், கருண் நாயரை 31 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட்டாக்கிய பிரசித் கிருஷ்ணா கலக்கிப்போட்டார். முக்கியமான நேரத்தில் கம்பேக் கொடுத்த டைட்டன்ஸ் அணி, அடுத்தடுத்த ஓவர்களில் 7, 5, 6 என குறைவான ரன்களையே விட்டுக்கொடுத்து இழுத்துப்பிடித்தது.
விக்கெட்டுகள் சரிந்தபோது நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்திய அக்சர் பட்டேல் மற்றும் ஸ்டப்ஸ் ஜோடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அசத்தியது. அணியை ஒரு வலுவான டோட்டலுக்கு செட் செய்த இருவரும் அடித்து ஆட முயற்சித்த போது துரதிருஷ்டவசமாக அவுட்டாகி வெளியேறினர்.
அக்சர் பட்டேல் 39 ரன்னிலும், ஸ்டப்ஸ் 31 ரன்னிலும் நடையை கட்ட, அவர்களை தொடர்ந்துவந்த விப்ராஜ் நிகம் 0 மற்றும் இம்பேக்ட் வீரர் ஃபெர்ரீரா 1 ரன் என எதற்கு வந்தோம் என தெரியாமலே வந்தவேகத்தில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். இறுதியில் தனியொரு ஆளாக போராடிய அஷுதோஷ் சர்மா 2 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்ட 20 ஓவரில் 203 ரன்களை குவித்தது டெல்லி அணி.
பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்தது குஜராத்!
சேஸிங்கிற்கு விருப்பமான ஆடுகளம் என்பதால் குஜராத் டைட்டன்ஸ் அணி எப்படியும் வெல்லும் என்ற எதிர்ப்பார்ப்பில் போட்டி தொடங்கியது. ஆனால் 7 ரன்னில் சுப்மன் கில்லை ரன் அவுட் மூலம் வெளியேற்றிய டெல்லி அணி அதிர்ச்சி கொடுத்தது. கில் வெளியேறினாலும் தன்னுடைய வேலையை தரமாகவும், சிறப்பாகவும் செய்த சாய் சுதர்சன் 5 பவுண்டரிகள் 1 சிக்சர் என துவைத்தெடுக்க முதல் 6 ஓவரில் 67 ரன்களை அடித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. ஆனால் சுதர்சனை 36 ரன்னில் குல்தீப் யாதவ் வெளியேற்ற, அடுத்து களத்திற்குவந்த இம்பேக்ட் வீரர் ரூதர்ஃபோர்டும் 6 பந்துக்கு 3 ரன் என மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவ்வளவுதான் இதுவரை அனைத்து போட்டியிலும் நிலைத்து நின்று அடித்து ரன்களை எடுத்துவந்த சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் வெளியேறிவிட்டார்கள், இனி ரன்களே வராது என நினைத்தபோது. ‘இன்னும் நான் களத்துல தான் இருக்கன்; கொஞ்ச நாள் பெரிய ஸ்கோர் அடிக்கலனா நான் பட்லர்-ன்றதயே மறந்துவிடுவீங்களே’ என்பது போல இறுதிவரை நிலைத்துநின்று 54 பந்தில் 11 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய ஜோஸ் பட்லர் 97 ரன்களை குவித்து அசத்தினார். ஸ்டார்க் வீசிய ஒரே ஓவரில் 5 பவுண்டரிகளை வரிசையாக விரட்டிய பட்லர் மிரட்டிவிட்டார்.
மறுமுனையில் பொறுமையாக விளையாடினாலும் 3 சிக்சர்களை விளாசிய ரூதர்ஃபோர்டு 43 ரன்கள் அடிக்க, இறுதியாக வந்து சிக்சர் பவுண்டரி என விரட்டிய திவேத்தியா குஜராத் டைட்டன்ஸ் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார். ஜோஸ் பட்லர் சதமடிப்பார் என நினைத்து காத்திருந்த ராஜஸ்தான் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
204 ரன்களை எளிதாக சேஸ்செய்த குஜராத் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்தது. 18 வருட ஐபிஎல்லில் டெல்லி அணிக்கு எதிராக 200 ரன்களை சேஸ் செய்து சாதனை படைத்தது குஜராத் அணி. அதுமட்டுமில்லாமல் குஜராத் டைட்டன்ஸ் அணி செய்த அதிகபட்ச ஐபிஎல் ரன்சேஸிங்காகவும் இது பதிவுசெய்யப்பட்டது.
இந்த அற்புதமான வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு சென்றது குஜராத் டைட்டன்ஸ் அணி.