Jofra Archer
ஜோப்ரா ஆர்ச்சர்X

தூங்கி எழுந்துவந்து 2 விக்.! 6 பந்தில் பஞ்சாப் கதையை முடித்த ஆர்ச்சர்! ராஜஸ்தான் பிரமாண்ட வெற்றி!

2025 ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
Published on

18வது ஐபிஎல் சீசனாக 2025 ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடந்துவருகிறது. இரண்டு சுற்றுப்போட்டிகள் முடிவுற்ற நிலையில் 2 போட்டிகளிலும் வெற்றிபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் தோல்வியே சந்திக்காத அணிகளாக புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடத்தில் ஆதிக்கம் செலுத்தின.

நல்ல ரன்ரேட்டில் முதலிடத்தில் இருந்த பஞ்சாப் கிங்ஸை எதிர்த்து இன்றைய போட்டியில் களம்கண்டது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. காயம் காரணமாக முதல் 3 போட்டிகளில் சஞ்சு சாம்சன் கேப்டன்சி செய்யாத நிலையில், அவருக்கு பதிலாக ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ரியான் பராக் செயல்பட்டார். ஆனால் 3 போட்டியில் இரண்டில் தோற்ற ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் தவித்துவந்தது.

இன்றைய போட்டியில் கேப்டன் சஞ்சு சாம்சன் கம்பேக் கொடுக்க பாசிட்டிவான மனநிலையில் பலம் வாய்ந்த பஞ்சாப் கிங்ஸை எதிர்கொண்டது ராஜஸ்தான் அணி.

பேட்டிங்கில் மிரட்டிய ஜெய்ஸ்வால்..

விறுவிறுப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சஞ்சு சாம்சன் அடுத்தடுத்து 6 பவுண்டரிகளை விரட்டிக்கொண்டே இருக்க, 5 சிக்சர்களை பறக்கவிட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால் மிரட்டிவிட்டார். 10 ஓவர்களில் விக்கெட்டையே விட்டுக்கொடுக்காமல் 89 ரன்களை அடித்து ராஜஸ்தான் அணி வலுவான நிலையில் இருக்க, முதல் விக்கெட்டை தேடிய பஞ்சாப் அணிக்கு சாம்சனை 38 ரன்னில் வெளியேற்றி எடுத்துவந்தார் ஃபெர்குசன்.

ஜெய்ஸ்வால்
ஜெய்ஸ்வால்

கேப்டன் அவுட்டானாலும் தொடர்ந்து சிக்சர் பவுண்டரி என வெளுத்துவாங்கிய ஜெய்ஸ்வால் 67 ரன்கள் அடித்து நம்பிக்கை கொடுக்க, அவரையும் போல்டாக்கி வெளியேற்றினார் ஃபெர்குசன். அதற்கு பிறகு ராஜஸ்தான் அணியின் ரன்வேகத்தை கட்டுப்படுத்திய பஞ்சாப் அணி இழுத்துப்பிடித்தது.

அடுத்து வந்த ரியான் பராக் 3 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்ட, 2 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் என விளாசிய ஹெட்மயர் மற்றும் துருவ் ஜூரல் இருவரும் அசத்தினர். அனைவரின் பங்களிப்பாலும் 20 ஓவரில் 205 ரன்கள் என்ற நல்ல டோட்டலை குவித்தது ராஜஸ்தான் அணி.

மாயாஜாலம் நிகழ்த்திய ஆர்ச்சர்!

206 ரன்கள் அடித்தால் வெற்றி என களத்திற்கு வந்த பஞ்சாப் கிங்ஸ் அணியில், முதல் பந்திலேயே தொடக்க வீரர் பிரியான்ஸ் ஆர்யாவின் ஸ்டம்புகளை தகர்த்த ஜோப்ரா ஆர்ச்சர் மிரட்டிவிட்டார். அடுத்துவந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆர்ச்சர் பந்தில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விரட்ட முதல் ஓவரின் கடைசி பந்தில் இன்ஃபார்மில் இருந்துவரும் ஸ்ரேயாஸின் ஸ்டம்புகளையும் பறக்கவிட்ட ஆர்ச்சர் பஞ்சாப் அணிக்கு பேரடியை கொடுத்தார்.

முதல் இன்னிங்ஸ் முடியும்வரை படுத்து தூங்கிக்கொண்டிருந்த ஜோப்ரா ஆர்ச்சர், பந்துவீச களத்திற்கு வந்து முதல் 6 பந்தில் 2 தரமான விக்கெட்டுகளை அறுவடை செய்தது ரசிகர்களை அதிகமாக கவர்ந்தது. சில போட்டிகளுக்கு முன்பு சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 4 ஓவரில் 76 ரன்களை விட்டுகொடுத்த ஆர்ச்சரை பல்வேறு தரப்பினர் கடுமையாக விமர்சித்திருந்தனர். அப்போது வருத்தமாக சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால் அதற்குபிறகு கம்பேக் கொடுத்துவரும் ஆர்ச்சர், அவர் ஏன் சாம்பியன் பந்துவீச்சாளர் என்பதை நிரூபித்துவருகிறார்.

முதல் ஓவரிலேயே கிட்டத்தட்ட பஞ்சாப் கிங்ஸின் ஆட்டத்தை ஆர்ச்சர் முடித்துவிட, மேலும் 2 விக்கெட்டுகள் சரிந்து 43 ரன்னுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது பஞ்சாப் கிங்ஸ் அணி. என்னதான் விக்கெட்டாக விழுந்துகொண்டே இருந்தாலும் 5வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த வதேரா மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் இருவரும் சிக்சர் பவுண்டரி என பறக்கவிட்டு பஞ்சாப் அணிக்கு நம்பிக்கை சேர்த்தனர்.

4 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என ஒருபுறம் வதேரா வேட்டையாட, 3 பவுண்டரி 1 சிக்சர் என விரட்டிய மேக்ஸ்வெல் அச்சுறுத்தும் வீரராக மாறினார். 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அசத்திய இந்த ஜோடியை அடுத்தடுத்து வெளியேற்றிய ராஜஸ்தான் ஸ்பின்னர்கள் போட்டியை  முடித்துவைத்தனர். அடுத்த வந்த வீரர்கள் போராடினாலும் 155 ரன்கள் மட்டுமே அடித்த பஞ்சாப் கிங்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

இந்த பிரமாண்ட வெற்றிக்கு பிறகு புள்ளிப்பட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது ராஜஸ்தான் அணி, 7வது இடத்திலிருந்து சிஎஸ்கே அணி 9வது இடத்திற்கு சரிந்துள்ளது. அடுத்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலர்ப்பரீட்சை நடத்துகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com