”நேரம் வரும்போது RCB ஐந்து கோப்பைகளை தொடர்ச்சியாக வெல்லும்..” - ஜிதேஷ் சர்மா நம்பிக்கை!
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிகமுறை பிளேஆஃப் சென்ற அணிகள் பட்டியலில், சென்னை சூப்பர் கிங்ஸ் (12) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (10) அணிகளுக்கு பிறகு 9 முறை தகுதிபெற்ற ஆர்சிபி அணி 2009, 2011 மற்றும் 2016 என மூன்று ஐபிஎல் இறுதிப்போட்டிகளிலும் விளையாடியுள்ளது.
ஆனால் 2009-ல் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராகவும், 2011 ஐபிஎல் இறுதிப்போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராகவும், 2016 ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் தோல்விற்று இன்றுவரை கோப்பை வெல்லாத அணியாக இருந்துவருகிறது.
இந்நிலையில் 2025 ஐபிஎல் தொடருக்கு மூத்தவீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் என ஒரு சிறந்த கலவையாக இருக்கும் ஆர்சிபி அணி கோப்பை வெல்லவேண்டும் என்ற கனவுடன் விளையாடவிருக்கிறது.
நேரம் வரும்போது 5 கோப்பைகளை வெல்லும்..
CricXtasy உடனான சமீபத்திய நேர்காணலில் பேசியிருக்கும் ஜிதேஷ் சர்மா, “2025 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி பேலன்ஸான அணியாக இருக்கிறது. டாப் ஆர்டரில் பிலிப் சால்ட் மற்றும் ஃபினிசிங்கில் லிவிங்ஸ்டன் போன்ற வீரர்கள் அணிக்குள் வந்துள்ளனர். பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் என ஆடுகளத்திற்கு தேவையான வீரர்களை நிர்வாகம் தேர்ந்தெடுத்து உருவாக்கியுள்ளது. அதனால் நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி சிறப்பாக செயல்படும் என நம்பிக்கையுடன் இருக்கிறேன்” என தெரிவித்தார்.
மேலும் கோப்பை இல்லாததுகுறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “பொறுமையாக இருங்கள், நம்முடைய நேரம்வரும்போது, ஆர்சிபி அணி வரிசையாக 5 வருடங்கள் கோப்பை வெல்லும்” என்று கூறினார்.
மேலும் விராட் கோலிக்காக கோப்பை வெல்ல விரும்புவதாக தெரிவித்த ஜிதேஷ், “இந்தியா, ஆர்சிபி என மட்டுமல்ல கிரிக்கெட்டுக்காக விராட் கோலி தன் வாழ்க்கையையே கொடுத்துள்ளார். அவருக்காக நான் கோப்பை வெல்ல நினைக்கிறேன். ஒருவர் கிரிக்கெட்டுக்காக அனைத்தையும் கொடுக்கும்போது, அவருக்கும் திரும்ப ஏதாவது ஒரு பலன் கிடைக்க வேண்டும். ஒரு அணிக்காக 17 ஆண்டுகள் ஒருவர் விளையாடும்போது குறைந்தது அவருக்காக ஒரு கோப்பையாவது இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.
இந்த 2025 ஐபிஎல் தொடரை விராட் கோலிக்காக விளையாட வேண்டும் என நினைக்கிறேன். அவர் என்னுடன் சேர்ந்து கோப்பை வெல்ல வேண்டும், அவருக்காக அதை சமர்பிக்க வேண்டும் என நினைக்கிறேன்” என்று ஜிதேஷ் சர்மா மேலும் கூறியுள்ளார்.