CSK v RCB போட்டிக்கு முன்னதாக சர்ச்சை.. 2016, 2017 வருடங்கள் பிரிண்ட் செய்யப்பட்ட ஜெர்சிகள் விற்பனை?
மறக்க முடியாத மே-18 (RCB vs CSK) போட்டி!
கடந்த 2024 ஐபிஎல்லை பொறுத்தவரை பெரும்பாலான ரசிகர்களுக்கு 2024 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி எப்போது நடைபெற்றது என்று கேட்டால், மே 18-ம் தேதி நடைபெற்ற ஆர்சிபி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிதான் பைனல் என்று கூறுவார்கள். அந்தளவு குவாலிஃபையர் 1, எலிமினேட்டர், குவாலிஃபையர் 2 மற்றும் பைனல் என அனைத்து முக்கியமான போட்டிகளும் கொடுக்க வேண்டிய சுவாரசியத்தை RCB vs CSK அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி கொடுத்துவிட்டது என்று சொன்னால் அது பொய்யாகாது.
சிஎஸ்கே அல்லது ஆர்சிபி இரண்டில் வெற்றிபெறும் ஒரு அணி அரையிறுதிக்கு தகுதிபெறும் என்பதால் அதிகப்படியான எதிர்ப்பார்ப்புடன் அந்த போட்டி தொடங்கப்பட்டது. ஆர்சிபி அணி 218 ரன்கள் குவிக்க, சிஎஸ்கே அணி 201 ரன்கள் அடித்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும், ஒருவேளை 201 ரன்னுக்குள் சிஎஸ்கேவை சுருட்டிவிட்டால் ஆர்சிபி அணி அரையிறுதிக்கு செல்லும் என்ற நிலையில் பரபரப்பாக ஆட்டம் நடைபெற்றது.
இரண்டாவது பேட்டிங் செய்த சிஎஸ்கே அணிக்கு பிளேஆஃப் செல்ல கடைசி 6 பந்தில் 17 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் தோனி மற்றும் ஜடேஜா இருக்கிறார்கள், ஆர்சிபி அணியிடம் பெரிதாக கண்டண்ட் செய்யும் பவுலர் இல்லை என்பதால் சிஎஸ்கே அணிதான் வெற்றிபெறும் என்ற சூழல் இருந்தது.
கடைசிஓவரை யஷ் தயாள் வீச, முதல் பந்தை எதிர்கொண்ட தோனி முதல் பந்தையே ஸ்டேடியத்திற்கு வெளியே தூக்கி சிக்சருக்கு பறக்கவிட, 5 பந்துகளுக்கு 11 ரன்கள் என மாறியது போட்டி. ஆனால் அடுத்த பந்திலேயே தோனி அவுட்டாகி செல்ல, மீதமுள்ள 4 பந்துகளையும் யஷ் தயாள் சிறப்பாக வீச ஆர்சிபி அணி சிஎஸ்கேவை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றது.
கை கொடுக்காமல் சென்ற தோனி!
ஆர்சிபி அணி பிளேஆஃப் செல்ல 1% வாய்ப்பு மட்டுமே இருந்த இடத்திலிருந்து 6 போட்டிகளில் வரிசையாக வென்று, ஐபிஎல் வரலாற்றில் சிறந்த கம்பேக் கொடுத்த ஆர்சிபி அணி அதீத கொண்டாட்டத்தை வெளிப்படுத்தியது. ஏதோ கோப்பையை வென்றது போல அதிக நேரம் ஆர்சிபி அணி கொண்டாட்டத்தை வெளிப்படுத்த, எதிரணி வீரர்களுக்கு கைக்கொடுப்பதற்காக காத்திருந்த தோனி அதிகநேரம் சென்றதும் கைக்கொடுக்காமல் பெவிலியன் சென்றுவிட்டார்.
பொதுவாக வெற்றிபெற்ற அணியின் கொண்டாட்டம் 1 நிமிடம் மட்டுமே இருக்கும், ஆனால் ஆர்சிபி வீரர்கள் 3 நிமிடங்களாக வெற்றியை கொண்டாடிய நிலையில், தோனி காத்திருந்துவிட்டு மைதானத்திலிருந்து வெளியேறிவிட்டார். ஆனால் தோனி செய்த இந்த விஷயம் பேசுபொருளாக மாறியது, மற்றவீரர்கள் நிற்கும் போது அவர் மட்டும் சென்றுவிட்டதை எப்படி நியாயப்படுத்துகிறீர்கள் என பல்வேறு தரப்பினர் விமர்சனம் செய்தனர்.
RCB ரசிகர்களால்அவமானப்படுத்தப்பட்ட சிஎஸ்கே ரசிகர்கள்!
அந்த போட்டியில் வெற்றிபெற்ற பிறகு ஆர்சிபி ரசிகர்கள், பெங்களூரு மைதானத்திற்கு வந்திருந்த சிஎஸ்கே ரசிகர்களிடம் அவமரியாதை செய்வது, வசைபாடுவது என மோசமாக நடந்துகொண்டதாக அப்போது செய்திகள் வைரலாகின.
இந்த சம்பவத்திற்கு பிறகு ஆர்சிபி அணிக்கு எதிரான வெற்றிக்காகவே சிஎஸ்கே ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 2025 ஐபிஎல்லில் சென்னையில் நடைபெற்ற ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வெற்றிபெறும் என்ற எதிர்ப்பார்ப்புடன் சென்ற மஞ்சள் படை ரசிகர்களுக்கு சென்னை அணி ஏமாற்றத்தை பரிசளித்தது.
சர்ச்சைக்குரிய வகையில் ஜெர்சி விற்பனை..
இந்த சூழலில் இன்றைய ஐபிஎல் போட்டியானது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே மீண்டும் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில் போட்டி நடைபெறும் சின்னசாமி ஸ்டேடியத்திற்கு வெளியே 'Special RCB v CSK Jersey' என்ற போர்டுடன், சென்னை அணி ஐபிஎல்லில் தடைசெய்யப்பட்ட 2016, 2017 என்ற இரண்டு வருடங்கள் பிரிண்ட் செய்யப்பட்ட ஜெர்சிகள் விற்கப்படுவதாக சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
பல ரசிகர்கள் இதுகுறித்து பல பதிவுகளை பதிவிட்டு வரும் நிலையில், இது ஆர்சிபி ரசிகர்களின் மோசமான செயல்பாடு என விமர்சித்தும் வருகின்றனர்.
முக்கியமான போட்டியில் டாஸ் வென்றிருக்கும் சென்னை அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.