
இந்திய அணிக்காக மூன்று ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த முன்னாள் இந்திய கேப்டன் எம் எஸ் தோனி, சிஎஸ்கே அணிக்காக ஒருபடி மேலே சென்று 4 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். 237 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இருக்கும் எம் எஸ் தோனி, சிஎஸ்கே அணிக்காக இன்று 200ஆவது போட்டியில் கேப்டனாக களமிறங்கினார். ஐபிஎல் போட்டிகளில் ஒரு அணிக்கு கேப்டனாக அதிக போட்டிகளில் விளையாடியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் எம் எஸ் தோனி.
இந்நிலையில், இன்று சிஎஸ்கே அணிக்காக களமிறங்கிய எம் எஸ் தோனியிடம், 200ஆவது போட்டியில் கேப்டனாக வழிநடத்துவது எப்படி இருக்கிறது என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த தோனி, “இது நன்றாக இருக்கிறது. கூட்டம் சிறப்பாக இருப்பதாக உணர்கிறேன். நாங்கள் முதலில் பழைய மைதானத்தில் தொடங்கினோம், அது மிகவும் சூடாகவும், ஈரப்பதமாகவும் இருந்தது. ஆனால் இப்போது புதுப்பிக்கப்பட்ட மைதானத்தில் விளையாடுவது, சுவிட்சர்லாந்தில் ஆடுவதை போல் இருக்கிறது. கிரிக்கெட் நிறைய மாறிவருவதை நாம் பார்த்து வருகிறோம், முன்பு டி20 போட்டிகள் விளையாடிய விதமானது தற்போது நிறைய மாறிவிட்டது" என்று கூறினார்.
ஐபிஎல் போட்டிகளில் பல சாதனைகளை படைத்துவரும் எம் எஸ் தோனி, மேலும் பல சாதனைகளை முறியடிக்க காத்திருக்கிறார். அந்த வரிசையில் சிஎஸ்கே அணிக்காக எம் எஸ் தோனி முறியடித்த சாதனைகள் மற்றும் முறியடிக்கவிருக்கும் சாதனைகள் பின்வருவன,
விராட் கோலி, ஷிகர் தவான், டேவிட் வார்னர், ரோகித் சர்மா மற்றும் ஏபிடி வில்லியர்ஸ் முதலிய 6 வீரர்களுக்கு பிறகு, 5000 ஐபிஎல் ரன்களை கடந்த 7ஆவது வீரராக இந்த சாதனையை எட்டியிருந்தார் எம் எஸ் தோனி.
ஆனால் மேற்கூரிய அனைத்து வீரர்களும் டாப் ஆர்டரில் களமிறங்கி விளையாடி இந்த சாதனையை படைத்திருந்தனர். மிடில் ஆர்டரில் களமிறங்கி 5000 ரன்களை கடந்த முதல் பேட்டர் எம் எஸ் தோனி தான்.
200 போட்டிகளில் ஒரு அணியை கேப்டனாக வழிநடத்தும் முதல் வீரர் எம் எஸ் தோனி தான்.
237 போட்டிகளில் விளையாடியிருக்கும் தோனி, இதுவரை 173 வீரர்களை ஸ்டம்ப் அவுட்டில் வெளியேற்றி உள்ளார். இது ஐபிஎல் வரலாற்றில் ஒரு விக்கெட் கீப்பர் வெளியேற்றிய அதிகபட்ச டிஸ்மிஸ்ஸல்ஸ் ஆகும்.
ஐபிஎல்லில் 232 சிக்சர்களை அடித்திருக்கும் எம் எஸ் தோனி, விரைவில் 250 சிக்சர்களை அடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைக்கவிருக்கிறார்.
237 போட்டிகளில் விளையாடியிருக்கும் தோனி, அதிக போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் ஆவார்.