T20 WC 2026 : "நாங்க வந்துட்டோம்னு சொல்லு.." முதன்முறையாக தகுதிபெற்ற இத்தாலி!
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கிறது. 20 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில், போட்டியை நடத்தும் இந்தியா மற்றும் இலங்கை உட்பட மொத்தம் 12 அணிகள் நேரிடையாக தகுதிபெறும். அந்த வகையில், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் நேரிடையாக தகுதி பெற்றிருந்தன. இதற்கிடையே டி20 உலகக்கோப்பை 2026 தொடரில், விளையாட உலகம் முழுவதும், எஞ்சிய அணிகளைத் தேர்வு செய்யும் பொருட்டு அதற்கான தகுதிசுற்றுகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, பெர்முடா, பஹாமாஸ் மற்றும் கேமன் தீவுகளை வீழ்த்தி கனடா அணி இடம்பிடித்தது.
இதுதவிர, ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டிகளில் இத்தாலி முதன்முறையாக தகுதி பெற்றுள்ளது. கால்பந்து உலகில் மிகப் பிரபலமாக விளங்கி வரும் இத்தாலி அணி, கிரிக்கெட் உலகில் கால் பதித்திருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, இதற்கான தகுதிச்சுற்றுப் போட்டியில் இத்தாலியும், நெதர்லாந்தும் பலப்பரீட்சை நடத்தின. இதில் நெதர்லாந்து வெற்றிபெற்று உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்தது. அதேநேரத்தில் தோல்வியுற்ற இத்தாலியும், புள்ளிப் பட்டியல் அதிக ரன்ரேட் பெற்றிருந்ததை அடுத்து அந்த அணியும் முதல்முறையகா உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.
அதேநேரத்தில், கடந்த நான்கு டி20 உலகக் கோப்பை தொடரில் இடம்பெற்றிருந்த ஸ்காட்லாந்து அணி தற்போது டி20 உலகக் கோப்பை தொடரில் தகுதி பெறாமல் வெளியேறியிருக்கிறது. தற்போது வரை 15 அணிகள் தகுதி பெற்றிருக்கிறது. இன்னும் ஈஸ்ட் ஆசிய பஸ்பிக் குவாலிபயர் தொடரிலிருந்து மூன்று அணிகளும், ஆப்பிரிக்கா குவாலிஃபயர் மூலம் இரண்டு அணிகளும் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறும். 2024ஆம் ஆண்டைப்போலவே 2026 போட்டிகளும் நடைபெற இருக்கின்றன.