
டி20 போட்டிகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் நடத்தப்படுவதால், டாஸ் வெல்லும் அணிகள் பாதிப்போட்டிக்கு பிறகு ஏற்படும் பனிபொழிவு, ஈரப்பதம் போன்ற மாற்றங்களுக்காக, டாஸ் வென்ற பிறகு பவுலிங்கை தேர்ந்தெடுப்பது தொடர்கதையாகவே இருந்துவருகிறது. என்னதான் அந்த அணுகுமுறையால் சில போட்டிகள் கைக்கொடுக்காமல் போனாலும், 70+ சதவீதம் அளவிற்கு அந்த அணுகுமுறையானது டாஸ் வெல்லும் அணிகளுக்கு சாதகமான முடிவையே தேடித்தரும். இதனால் நாக் அவுட் போட்டிகளான அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளுக்கு கூட, எந்த அணி டாஸ் வெல்லும் என்ற எதிர்பார்ப்பே ரசிகர்களுக்கு அதிகமாக இருக்கும்.
இந்நிலையில் தான் “டாஸ் ஜெயிச்சிட்டோம் இனி ஆட்டம் நமக்கு தான்” என்ற எண்ணத்தை எல்லாம் மாற்றும் விதமாக “இம்பேக்ட் பிளேயர்” விதியை அறிமுகப்படுத்தி உள்ளது பிசிசிஐ. ஒருவீரரை எந்த இடத்திலும் இறக்கலாம் என்ற இந்த புதிய விதிமுறை மூலம் டாஸ் வென்றால் வெற்றியை எளிதாக பெற்றுவிடலாம் என்பதை உடைத்திருக்கிறது இம்பேக்ட் பிளேயர் விதி.
2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை மேலும் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் மாற்றுவதற்காக பல புதிய விதிமுறைகளை ஐ.பி.எல் அறிமுகம் செய்துள்ளது. அந்த அனைத்து புதிய விதிமுறைகளிலும் கூட இம்பேக்ட் செய்யும் விதியாக ஐபிஎல்-ல் நுழைந்துள்ளது இம்பேக்ட் ப்ளேயர் எனும் விதி.
இந்த விதிமுறையின்படி போட்டியில் பங்குபெறும் 11 அணி வீரர்களை தவிர, கூடுதலாக ஐந்து வீரர்களை அணியின் கேப்டன் மாற்றுவீரர்களாக அறிவிக்கலாம். அவர்களுள் ஒருவர் ஆட்டத்தின் தன்மையைப் பொறுத்து போட்டியின் எந்த இடத்திலும் பவுலராகவோ, பேட்ஸ்மேனாகவோ களமிறங்குவார். பவுலராய் களமிறங்குபவர் நான்கு ஓவர்களையும் வீசலாம். பேட்ஸ்மேனாய் களமிறங்குபவரும் அவுட்டாகும்வரை/ஓவர் முடியும்வரை விளையாடலாம். இம்பேக்ட் வீரர்கள் இறங்கிய பின்பு, வெளியேறிய வீரர்கள் அதன்பின் ஆட்டத்தின் எந்தக் கட்டத்திலும் திரும்ப பங்குகொள்ளமுடியாது.
2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதல் இம்பேக்ட் பிளேயராக வேகப்பந்துவீச்சாளர் துஷார் தேஷ்பாண்டேவை சிஎஸ்கே அணி களமிறக்கியது. குஜராத் டைட்டன்ஸ் அணி சாய் சுதர்சனை களமிறக்கியது.
இந்நிலையில் இந்த போட்டியில் அம்பத்தி ராயுடுவிற்கு பதிலாக களமிறங்கி பந்துவீசிய துஷார் தேஷ்பாண்டே அதிக ரன்களை விட்டுக்கொடுத்தார். இம்பேக்ட் பிளேயராக களமிறக்கப்பட்ட வீரர் சிஎஸ்கே அணிக்கு கைக்கொடுக்காமல் போனார். ஆனால் மறுபுறம் கேன் வில்லியம்சனுக்கு பதிலாக இம்பேக்ட் பிளேயராக களமிறக்கப்பட்ட சாய் சுதர்சன் அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 53 ரன்கள் பார்ட்னர்சிப் போட்டார். 3 பவுண்டரிகளை விளாசிய சாய், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தேவையான இம்பேக்ட்டை ஏற்படுத்தி கொடுத்தார். இந்நிலையில் தான் இம்பேக்ட் பிளேயர்களை பயன்படுத்துவது குறித்து பேசியுள்ளார் முன்னாள் இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர்.
இம்பேக்ட் பிளேயர் விதி குறித்து பேசியிருக்கும் சுனில் கவாஸ்கர், “இம்பேக்ட் பிளேயர் என்ற புதிய விதி போட்டியில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் புதிய விதிகளைப் புரிந்துகொள்வதற்கும், விளையாட்டு நிலைமைகளுடன் சரியாக அதை பயன்படுத்துவதற்கும் உங்களுக்கு கூடுதலான நேரம் தேவை. இது இந்த வருட ஐபில் தொடரில் உள்ள அனைத்து 10 அணிகளுக்கும் பொருந்தும். நீங்கள் இம்பேக்ட் பிளேயர் விதியை கூர்மையான ஆயுதமாகவும், தந்திரமான ஒன்றாகவும் பயன்படுத்தி போட்டியில் சாதிக்க சிறிது நேரம் தேவைப்படும்" என்று கூறினார்.