ishan kishan out
ishan kishan outhotstar

இஷான் செய்த வினோதத்தல் வெடித்த சர்ச்சை.. நடுவர் அவுட் கொடுத்தது சரியா? எம்சிசி விதி என்ன சொல்கிறது?

MI vs SRH போட்டியில் அதிகம் பேசப்பட்டது என்னவோ ஹைதராபாத் வீரர் இஷான் கிஷனின் விக்கெட் தான். ஆம், நிச்சயம் அந்த விக்கெட், கிரிக்கெட் ஆர்வலர்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
Published on

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சக்கையாக பிழிந்து ஜூஸ் போட்டு குடித்துவிட்டு பாய்ண்ட் டேபிளில் மூன்றாவது இடத்தில் கெத்தாக அமர்ந்திருக்கிறது மும்பை இந்தியன்ஸ். ஃபார்ம் இருக்கலாம் சில நேரங்களில் சரியலாம் ஆனால் கிளாசிக் எப்போதும் உண்டு என்பதை மீண்டும் தன்னுடைய அதிரடியால் நிரூபித்தார் ரோகித் சர்மா.

டி20 போட்டியில் ’நான் தான் நெம்பர்.1’ என்று தன்னுடைய அதிரடி, கிளாசிக் பேட்டிங்கால் செய்து காட்டினார் சூர்யகுமார் யாதவ். தீபக் சாஹர், ட்ரெண்ட் போல்ட் போன்றவர்களின் அசத்தலான பவுலிங் என நேற்றைய போட்டியில் பேசுவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருந்தும், அதிகம் பேசப்பட்டது என்னவோ ஹைதராபாத் வீரர் இஷான் கிஷனின் விக்கெட் தான். ஆம், நிச்சயம் அந்த விக்கெட், கிரிக்கெட் ஆர்வலர்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

களத்தில் நடந்தது என்ன?

முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியில் அதிரடி பேட்டர்கள் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா களமிறங்கினர். சில நேரங்களில் ஜொலிக்கிறார்கள், பல நேரங்களில் படுத்தே விடுகிறார்கள் ஹைதராபாத் பேட்டிங் யூனிட். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயம் உள்ளதால் நிச்சயம் ஏதாச்சும் செய்வார்கள் என்று பார்த்தால் டிராவிட் ஹெட் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

முதல் விக்கெட் சீக்கிரம் வீழ்ந்ததால் போட்டியை நிதானத்திற்கு கொண்டு வந்து சரி செய்ய வேண்டிய நேரத்தில் இஷான் கிஷன் களமிறங்கினார். முதல் போட்டியில் சதம் விளாசிய பின்னர் அடுத்த எந்த போட்டியிலும் அவர் சோபிக்கவில்லை. இந்த நிலையில்தான் தீபக் சாஹர் வீசிய மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் விநோதமான முறையில் ஆட்டமிழந்தார். அது தான் தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.

யாருமே கேட்காமல் அவுட் கொடுத்த அம்பயர்!

லெக் சைடில் வையிட் போல் வந்த பந்தினை இஷான் கிஷன் அடிக்க முயன்ற நிலையில் பந்து கீப்பரிடம் சென்றது. பந்துவீச்சாளர் தீபக் சாஹர் உள்ளிட்ட முபை வீரர்கள் யாரும் விக்கெட் கேட்காத நிலையிலும் அம்பயர் எதிர்பாராத வகையில் அவுட் கொடுத்தார். இதில் என்ன ஆச்சர்யம் என்றால் முதலில் அம்பயர் வையிடு தான் கொடுத்தார். பின்னர், இஷான் கிஷன் வெளியேறுவதை கவனித்த அவர் கையை விக்கெட்டிற்கு உயர்த்தினார். ஒரு நிமிடம் பந்துவீசிய தீபக் சாஹருக்கே புரியவில்லை. அம்பயர் கையை மேலே தூக்க முயற்சிப்பதை பார்த்துதான் அவரும் விக்கெட் கேட்டார்.

சரி தன்னுடைய பேட்டில் பந்துபட்டதை உணர்ந்ததால் நேர்மையாக இஷான் வெளியேறிவிட்டார் என்று நினைத்தால், ரிப்ளேவில் பந்து பேட்டில் உரசாமல் சென்றது தெரியவந்த நேரம் முதல்தான் இது சர்ச்சையாக வெடித்தது.

அதாவது, பேட்ஸ்மேன் இஷான் கிஷனோ அல்லது நடுவரோ யாராவது ஒருவர் முறையிட்டு இருக்கலாம். அப்படி செய்திருந்தால் முடிவை தெளிவுடன் எடுத்திருக்கலாம். ஆனால், இரண்டில் எதுவும் நடக்கவில்லை. யாருமே கேட்காத சூழலில் அம்பயர் விக்கெட் கொடுக்கலாமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு எம்சிசி விதிகள் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

MCC Rule - சொல்வதென்ன?

MCC -ன் விதி 31.7 சொல்வது இதுதான்: தனக்கு அவுட் கொடுக்கப்படாவிட்டாலும் அவுட் என நினைத்துக் கொண்டு ஒரு பேட்ஸ்மேன் வெளியேறும் போது அம்பயர் நிச்சயம் தலையிடலாம். அந்த பந்தினை டெட் பால் என அறிவித்து பேட்டரையும் திரும்ப அழைக்கலாம்.

அந்த இன்னிங்ஸின் கடைசி விக்கெட்டாக இல்லாமல் இருக்கும் வரை, அடுத்த பந்துவீசும் வரை பேட்டரை எப்பொழுது வேண்டும் என்றாலும் திரும்ப பெறலாம். அப்படியானால், நடுவர்கள் மைதானத்தை விட்டு வெளியேறும் தருணம் வரை அது இருக்க வேண்டும்.

ஆனால், இந்த விதிப்படி நடுவர் நடந்துகொள்ளவில்லை. ஆனாலும், அவர் செய்ததும் விதிப்படி தவறும் இல்லை. அதாவது, அது விக்கெட் இல்லையென தானும் நினைத்து அம்பயர் இஷான் கிஷனை திரும்ப அழைத்து இருக்கலாம். ஆனால், இஷான் வெளியேறுவதை அவர் அனுமதித்துவிட்டார். அதாவது இந்த விஷயத்தில் முழுமுழுக்க பேட்ஸ்மேனின் உடல் மொழியை வைத்து மட்டுமே அம்பயர் முடிவெடுத்துள்ளார்.

ஹைதராபாத் அணி பேட்டிங்கில் சரிவை சந்தித்து போட்டியில் படுதோல்வி அடைந்ததால் இந்த விஷயம் மேலும் பெரிதாக பேசப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com