மீண்டும் 0-ல் இருந்து தொடங்கிய பஞ்சாப்.. மழையால் PBKS-க்கு விழுந்த பேரிடி! 2 அணிக்கும் தலா 1 புள்ளி!
17 வருட ஐபிஎல் வரலாற்றில் ஒரேயொரு முறை மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பஞ்சாப் கிங்ஸ் அணி, ஐபிஎல்லில் மோசமான ஒரு அணியாகவே வலம்வந்துள்ளது.
அதிரடி வீரர்கள், மேட்ச் வின்னர்கள் என பல உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் அணியில் இருந்தபோதிலும், பல வெளிநாட்டு வீரர்கள் மீது அதிகமான பணத்தை செலவிட்டபோதிலும், பஞ்சாப் அணியின் விதி மட்டும் மாறவேயில்லை.
இந்த சூழலில் நடப்பு 2025 ஐபிஎல் சீசனில் ஐசிசி கோப்பைகள் வென்ற ரிக்கி பாண்டிங் மற்றும் ஐபிஎல் கோப்பை வென்ற ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் பஞ்சாப் அணியில் இணைந்த பிறகு, நடப்பு ஐபிஎல் கோப்பையை வெல்லக்கூடிய ஒரு அணியாகவே பஞ்சாப் கிங்ஸ் அணி பார்க்கப்பட்டது.
அதற்கேற்றார்போல் நடப்பு சீசனில் அதிரடியான பேட்டிங்கையும், சிறப்பான கேப்டன்சியையும் கொண்டிருந்த பஞ்சாப் அணி 8 போட்டியில் 5-ல் வெற்றிபெற்று வலுவான அணியாக அசத்தியது. ஐபிஎல் வரலாற்றில் குறைவான டோட்டலை டிஃபண்ட் செய்த அணியாகவும் வரலாறு படைத்தது.
பஞ்சாப் அணிக்கு நடப்பு சீசனில் அனைத்துமே பாசிட்டிவாக இருக்க, அவர்களுடைய ஒரே குறையாக அதிரடியாக விளையாட சென்று விக்கெட்டை இழப்பது மட்டுமே இருந்தது. இந்நிலையில், இன்றைய கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் தொடக்க வீரர்கள் இருவரும் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தினர்.
புதிய அணுகுமுறையுடன் களம்கண்ட பஞ்சாப்!
கொல்கத்தாவிற்கு எதிராக ஈடன் கார்டனில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய அதிரடி பேட்ஸ்மேன்கள் பிரியான்ஸ் ஆர்யா மற்றும் பிரப்சிப்ரன் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒருபக்கம் பிரப்சிம்ரன் நங்கூரம் போட்டு நின்று விளையாட, மோசமான பந்துகளை மட்டுமே டார்கெட் செய்த பிரியான்ஸ் ஆர்யா தேவையான நேரத்தில் மட்டும் பவுண்டரி அடித்து ரன்களை எடுத்துவந்தார்.
கடந்த 8 போட்டியிலும் அதிரடியாக விளையாட சென்று விக்கெட்டை இழந்த இந்த ஜோடி, இப்படி தலைகீழாக செயல்பட்டது பஞ்சாப் கிங்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் சீசனுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்பதை எடுத்துகாட்டியது.
பிரப்சிம்ரன் மற்றும் பிரியான்ஸ் இருவரின் பொறுப்பான ஆட்டத்தால் 120 ரன்கள் வரை முதல் விக்கெட்டையே விட்டுக்கொடுக்காமல் அசத்தியது பஞ்சாப் அணி. 8 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் பிரியான்ஸ் ஆர்யா 69 ரன்களும், 6 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என விளாசிய பிரப்சிம்ரன் 83 ரன்களும் அடிக்க 20 ஓவரில் 201 ரன்களை குவித்தது பஞ்சாப் அணி.
மழையால் நின்ற ஆட்டம்..
202 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணி 1 ஓவரில் 7 ரன்கள் அடித்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை விடும் என நீண்டநேரம் காத்திருந்தபோதிலும் கருணை காட்டாத மழையால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி பஞ்சாப் மற்றும் கொல்கத்தா இரண்டு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.
தங்களுடைய ஆட்ட அணுகுமுறையை முழுமையாக மாற்றி, வெற்றிக்காக அனைத்தையும் செய்த பஞ்சாப் அணிக்கு 2 புள்ளி முழுமையாக கிடைக்காதது பெரிய பாதிப்பை புள்ளிப்பட்டியலில் ஏற்படுத்தும். எப்போதும் இல்லாத வகையில் நடப்பு ஐபிஎல் சீசனில் அனைத்து அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடிவரும் நிலையில், மழையால் 1 புள்ளியை இழந்திருப்பது பஞ்சாப் அணிக்கு நிச்சயம் பெரிய பாதகமான ஒன்றாக அமைய அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
அப்டேட் செய்யப்பட்ட புள்ளிப்பட்டியலின் படி 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.