oyal Challengers Bengaluru post 190/9
RCB VS PBKSPT

யாருடைய ஐபிஎல் கனவு நனவாகும்? - ஆங்கர் இன்னிங்ஸ் விளையாடிய கோலி.. 191 ரன் இலக்கை எட்டுமா பஞ்சாப்?

முதல் 3 ஓவர்களை மோசமாக வீசிய அர்ஸ்தீப் கடைசி ஓவரை சிறப்பாக வீசி 3 விக்கெட் வீழ்த்தினார். முதல் 3 ஓவர்களை சிறப்பாக வீசிய ஜேமிசன் கடைசி ஓவரை மோசமாக வீசி 23 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
Published on

நடப்பு ஐபிஎல் தொடரில் கோப்பையைக் கைப்பற்றப் போவது யார் என்பது இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரிந்துவிடும். இன்றைய இறுதிப் போட்டியில் பெங்களூரு அணியும், பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இரு அணிகளும் இதுவரை ஐபிஎல் கோப்பைகளை வெல்லாததால், இன்றைய போட்டி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறது.

டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணியில் அதிரடியாக ஆட்டத்தை துவங்கிய பிலிப் சால்ட் 16 ரன்னில் இரண்டாவது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். இதன்பிறகு வந்த ஒவ்வொரு வீரரும் 20+ ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த வண்ணமே இருந்தனர். அதனால் விராட் கோலி இன்று ஆங்கர் இன்னிங்ஸ் விளையாடினார். அதனால் பந்துக்கு இணையாகவே அவர் ரன்கள் எடுத்து வந்தார்.

மயங்க் அகர்வால் 18 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி உடன் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் பட்டிதாரும் வந்த வேகத்தில் சிக்ஸர்களை பறக்கவிட்டார். இருப்பினும் அவரும் 16 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினார். இதற்கிடையில் நீண்ட நேரம் களத்தில் இருந்த விராட் கோலி 35 பந்துகளில் 3 பவுண்டரிகள் மட்டுமே விளாசி 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

கடைசி லீக் போட்டியில் பொளந்து கட்டிய ஜிதேஷ் சர்மா இந்தப் போட்டியில் வந்த வேகத்தில் இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட்டார். இருப்பினும் 10 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். கடைசி நேரத்தில் ரொமாரியோ ஷெபெர்ட் 9 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி ஓவரை அர்ஸ்தீப் சிங் சிறப்பாக வீசி 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. முதல் 3 ஓவர்களை மோசமாக வீசிய அர்ஸ்தீப் கடைசி ஓவரை சிறப்பாக வீசி 3 விக்கெட் வீழ்த்தினார். முதல் 3 ஓவர்களை சிறப்பாக வீசிய ஜேமிசன் கடைசி ஓவரை மோசமாக வீசி 23 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அவரும் 3 விக்கெட் சாய்த்தார். வைஷாக், ஒமர்சாய் இருவரும் சிறப்பாக பந்துவீசினர்.

191 ரன்களை இலக்காக கொண்டு பஞ்சாப் அணி விளையாடி வருகிறது. மும்பை அணிக்கு எதிராக 200 ரன்களுக்கு மேல் இலக்காக இருந்த போதும் சிறப்பாக விளையாடி சேஸ் செய்தது பஞ்சாப். இது இறுதிப்போட்டி என்பதால் கொஞ்சம் அழுத்தம் அதிகமாகவே இருக்கும். அதனால், பஞ்சாப் இலக்கை சேஸ் செய்யுமா, ஆர்சிபி சிறப்பாக பந்துவீசி கட்டுப்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com