‘மழை வந்துடாம இருக்கணும்...’ - மும்முரமாகும் ஐபிஎல் 2023 தொடக்க விழா ஏற்பாடுகள்! வைரலாகும் தமன்னா, ராஷ்மிகாவின் நடன வீடியோ!

பிரம்மாண்டமாக நடைபெறும் 16-வது சீசன் ஐபிஎல் துவக்க விழாவில் நடிகைகள் தமன்னா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடனமாடுகின்றனர். இந்த நிலையில், சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதும் முதல் போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்புள்ளதா என்பதைக் குறித்து இங்கு காணலாம்.
ஆஷிஷ் நெஹ்ரா-தோனி
ஆஷிஷ் நெஹ்ரா-தோனி

கொரோனா காலக்கட்டத்தால் கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்த ஐபிஎல் போட்டிகள், இந்தாண்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது. கடைசியாக, 2018-ல் ஐபிஎல் துவக்க விழா கோலகலமாக நடத்தப்பட்டது. அதன்பிறகு புல்வாமா தாக்குதலில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்காகவும், கொரோனா காரணமாகவும் பிரம்மாண்டமாக ஐபிஎல் துவக்க விழா நடைபெறவில்லை.

தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்பியுள்ளதால், நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் கண்ணைக் கவரும் கலை நிகழ்ச்சிகளுடன் பிரம்மாண்டமாக இன்று இரவு துவங்க உள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் அந்த துவக்க விழாவில், தென்னிந்திய நடிகைகளான தமன்னா, ராஷ்மிகா மந்தனா நடனம் ஆட உள்ளனர்.

ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா

மேலும் பிரபல பாடகர் அர்ஜித் சிங், ரசிகர்களுக்கு பாடல்களை பாடி விருந்து படைக்க உள்ளார். பொதுவாக பாலிவுட் நடிகர், நடிகைகளே ஐபிஎல் துவக்க விழாவில் கண்கவர் நிகழ்ச்சி நடத்தி வந்த நிலையில், இந்த முறை ராஷ்மிகா மந்தனா மற்றும் தமன்னா நடனமாட உள்ளதால், தென்னிந்திய ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்தநிலையில், சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதும் முதல் போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்பில்லை என்று வானிலை மையம் கணித்துள்ளது. இருப்பினும், வெப்பச் சலனம் காரணமாக நேற்று அங்கு சுமார் அரை மணிநேரம் மழை கொட்டித் தீர்த்தது என்பதால் ரசிகர்கள் ‘இன்றும் மழை வந்துவிடுமோ’ என்ற சிறு பதற்றத்திலேயே உள்ளனர். முன்னதாக நேற்றைய பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரு அணி வீரர்களும் திடீர் மழையால் மைதானத்தில் இருந்து ஓய்வறைக்கு ஓடும் காட்சிகள் வெளியாகியிருந்தன. அதனை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் அணிகள் தத்தமது ட்விட்டர் பக்கங்களில் பகிர்ந்திருந்தன.

நேற்று போல் இன்றும் மழை தொடர்ந்தால், பல கோடி ரூபாய் செலவில் துவக்க விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது பாதிக்கப்படுவதோடு, போட்டி நடைபெறுவதும் சிக்கலாகிவிடும் என்பதால், ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மேலும், திடீரென மழை பெய்தால் டாஸில் தாக்கம் ஏற்படுவதுடன், மைதானத்தின் தன்மையிலும் அது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், ‘மழை மட்டும் வந்துடக்கூடாது’ என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அகமதாபாத், வானிலை நிலவரம்
அகமதாபாத், வானிலை நிலவரம்

மற்றொருபக்கம், போட்டி துவங்கும் மாலை நேரத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு ஒரு சதவிகிதம் கூட இல்லை என்று கணிக்கப்பட்டுள்ளது. இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கும் போது தெளிவான வானம் இருக்கும் என்றும், இடியுடன் கூடிய மழை இல்லை எனவும், வெப்பநிலை 22 டிகிரியாக இருக்கும் என்றும் வானிலை கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com