இன்று தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா: குஜராத்துக்கு எதிரான முதல் போட்டியில் தோனி பங்கேற்பாரா? - சிஎஸ்கே நிர்வாகம் விளக்கம்!
16-வது ஐபிஎல் சீசன், குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. மொத்தம் 10 அணிகள் பங்குபெறும் இந்த ஐபிஎல் தொடரானது சென்னை, மும்பை, அகமதாபாத், ஐதராபாத், டெல்லி, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் வருகிற மே மாதம் 28-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
குரூப் ‘ஏ’ Vs குரூப் ‘பி’
10 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளும், 'பி' பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும், அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோத வேண்டும்.
இப்படி ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழையும்.
சிஎஸ்கே Vs குஜராத்
இன்று நடக்கும் முதல் போட்டியில், 4 முறை கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நடப்பு சாம்பியனான குஜராத் அணியும் மோதுகின்றன. தோனி தலைமையிலான சென்னை அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணியும் மோதுவதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை அணியில், வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சௌத்ரி காயம் காரணமாக நடப்புத் தொடரிலிருந்து விலகியுள்ளார். அதனால், அவருக்குப் பதிலாக ஆகாஷ் சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும், சென்னை சேப்பாக்கம் பயிற்சியின் போது இடது மூட்டுப் பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக தோனி அவதிப்பட்டதாகவும், அதனால் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற வலைப் பயிற்சியில் அவர் பங்கேற்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின. வலி தொடர்ந்து இருப்பதால், இன்று நடக்கும் முதல் போட்டியில் தோனி பங்கேற்பது சந்தேகம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் பிடிஐ-க்கு அளித்துள்ளப் பேட்டியில், “என்னைப் பொறுத்த வரையில் கேப்டன் தோனி 100 சதவிகிதம் விளையாடு்வார்” என்று தெரிவித்துள்ளார். அதற்கேற்றார்போல், சிஎஸ்கே அணி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘வா தல... 7 மணிக்கு Ride போவோம்’ என்று பதிவுசெய்துள்ளது. இதனால், தோனி விளையாடுவது உறுதியாகியுள்ளது என்றே கூறலாம்.
சிஎஸ்கே அணியை பொறுத்தவரை, இலங்கை வீரர் மகீஷ் தீக்சனா, முதல் 3 போட்டியில் பங்கேற்க மாட்டார். எனினும், தோனி, ருதுராஜ், ஜடேஜா, பென் ஸ்டோக்ஸ், அம்பதி ராயுடு ஆகியோரின் பேட்டிங்-ஐ நம்பி சென்னை அணி உள்ளது. பென் ஸ்டோக்ஸ் முதல்மறையாக சென்னை அணிக்கு களமிறங்குவதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
குஜராத் அணியை பொறுத்தவரை, டேவிட் மில்லர் இல்லாதது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டாலும், சுப்மன் கில், கேன் வில்லியம்சன், மேத்யூ வேட், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் உள்ளனர். இவ்விரு அணிகளும் இருமுறை நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணியே இரண்டு முறையும் வென்றுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக ஐபிஎல் தொடர் பொதுவான இடத்தில் நடந்தது. அதாவது, அணிகள் தங்களது உள்ளூர் மைதானங்களில் விளையாட முடியாத நிலைமை இருந்தது. ஆனால் இந்த முறை உள்ளூர் மற்றும் வெளியூர் மைதானங்களில் மோதும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதால், அந்தந்த அணி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.