ரன் மெஷின் 2.0.. 23 வயதில் இந்திய டெஸ்ட் அணியில் இடம்! யார் இந்த சாய் சுதர்சன்?
தமிழகத்தில் இருந்து ஒரு கிரிக்கெட் வீரர் இந்திய அணியில் விளையாடுவது சாதாரண விஷயம் இல்லை.
”சாய் சுதர்சனுக்கு இருக்கும் திறமைக்கு எங்கேயோ செல்லலாம்” - இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஜாம்பவான் அஷ்வின் இந்த வார்த்தைகளை கூறிய 2 ஆண்டுகளில் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளார் சாய் சுதர்சன்.
இன்றைய தலைமுறை விளையாடும் அதிரடி கிரிக்கெட் முறைக்கு நேர் எதிர் திசையில் அவருடைய பேட்டிங் பாணி இருந்தாலும், பாரம்பரிய பேட்டிங் டெக்னிக் Game awareness மற்றும் கடுமையான உழைப்பு மூலம் 23 வயதில் பிசிசிஐ கதவுகளை உடைத்து இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளார் சாய் சுதர்சன்.
யார் இந்த சாய் சுதர்சன்?
நம்ம சென்னை பையன் தான் சாய் சுதர்சன். தந்தை பரத்வாஜ் தடகள வீரர், தாய் உஷா வாலிபால் வீராங்கனை என்பதால் விளையாட்டு என்பது சாய் சுதர்சனின் ரத்தத்தில் கலந்தே இருக்கிறது.
நேர்த்தியான பேட்டிங் ஸ்டைல் இருந்தாலும் முழு கவனத்தையும் விளையாட்டு மீது மட்டுமே தன் மகன் செலுத்தவில்லை என்ற கவலை தாய் உஷாவிடம் இருந்தது. கொரோனா காலத்தில் சாய் சுதர்சன் ஆதர்ச நாயகனாக பார்க்கும் விராட் கோலி எப்படி தன்னுடைய உடலை கவனித்து கொள்கிறார் என்ற வீடியோவை காட்டி பயிற்சி தொடங்கினார் உஷா, அடுத்த 5 ஆண்டில் விராட் கோலி ஓய்வை அறிவித்துள்ள நிலையில் அவர் இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் சாய் சுதர்சன்.
கிரிக்கெட் பயணம்..
2020ஆம் ஆண்டு முதல் தன்னுடைய உடற்தகுதி மற்றும் கிரிக்கட் மீது கவனம் செலுத்திய சாய் சுதர்சன், 2021ஆம் ஆண்டு TNPL தொடரில் இரண்டாவது அதிக ரன் குவித்து தமிழகத்தில் உள்ள நபர்களின் கவனத்தை ஈர்த்தார். அதனை தொடர்ந்து தமிழ்நாடு அணிக்காக ரஞ்சி கோப்பை, விஜய் ஹசாரே, சையது முஷ்டாக் அலி ஆகிய தொடர்களில் சிறப்பாக விளையாடி இந்தியாவில் உள்ள அனைவர் கவனத்தையும் ஈர்த்த சாய், 2022ஆம் ஆண்டு ஐபிஎல்லில் விளையாட குஜராத் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார்.
முதல் ஆண்டு 8 போட்டிகளில் மட்டுமே சாய் சுதர்சன் விளையாடி இருந்தாலும், நடப்பாண்டில் 14 போட்டிகளில் 679 ரன்களை குவித்து ஆரஞ்சு கேப்பை தன்வசம் வைத்துள்ளார், இந்தியாவில் கடந்த 18 மாதங்களில் MOST IMPROVED CRICKETER என பார்க்கப்படும் சாய் சுதர்சன், இந்தியாவின் WHITE BALL போட்டிகளின் எதிர்காலம் என அனைவராலும் பார்க்கப்படுகிறார்.
இப்படி இருக்கையில் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கருண் நாயர், அபிமன்யு ஈஸ்வரன் போல முதல்தர மற்றும் ரஞ்சி கோப்பைகளில் சாய் சுதர்சன் மலைபோல ரன்களை குவிக்கவில்லை என்றாலும்,சாய் சுதர்சன் பேட்டிங் திறன் மற்றும் அவருடைய டெக்னிக் சர்வதேச தரத்தில் இருப்பதால் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார் என்று அனைவரும் நம்புகின்றனர்.
இந்தியாவின் மிக சிறந்த டெஸ்ட் ஓப்பனர்களில் ஒருவர் என்ற பெயரை தமிழகத்தை சார்ந்த முரளி விஜய் பெற்ற நிலையில், தற்போது மற்றொரு தமிழக முகமாக சாய் சுதர்சன் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். சாய் சுதர்சன் தொட்டதெல்லாம் ’ரன்களாக’ மாறும் நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் தனித்துவமான வீரராக உருவெடுப்பார் என்ற நம்பிக்கை எல்லோரிடத்திலும் அதிகமாகவே இருக்கிறது.