சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் | ராயுடு அசத்தல்.. அறிமுக சீசன் கோப்பை வென்றது இந்தியா! லாராவின் WI தோல்வி!
சர்வதேச மாஸ்டர்ஸ் டி20 லீக் என்ற கிரிக்கெட் தொடரானது முதல் சீசனாக தொடங்கப்பட்டு நடத்தப்பட்டது. இதில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் முதலிய 6 நாடுகளின் முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் பங்கேற்று விளையாடினர்.
சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, ஜாக் காலீஸ், குமார் சங்ககரா, இயன் மோர்கன், ஷேன் வாட்சன், ஜாண்டி ரோட்ஸ், கிறிஸ் கெய்ல், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் முதலிய பல்வேறு சாம்பியன் வீரர்கள் தங்களுடைய திறமையை மீண்டும் மீட்டுஎடுத்துவந்தனர்.
பரபரப்பாக நடந்து முடிந்துள்ள தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் முதலிய 4 அணிகள் அரையிறுதிப்போட்டியை எட்டின. இதில் முதல் அரையிறுதிப்போட்டியில் சச்சின் தலைமையிலான இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் ஷேன் வாட்சன் தலைமையிலான ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இரண்டாவது அரையிறுதி போட்டியில் குமார் சங்ககரா தலைமையிலான இலங்கை மாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி, லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
முதல் கோப்பை வென்றது இந்தியா!
சச்சின் மற்றும் லாரா இருவரும் கேப்டன்களாக மோதிய இறுதிப்போட்டியானது ராய்பூரில் நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது.
முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் லாரா மற்றும் டிவெய்ன் ஸ்மித் இருவரும் நல்ல தொடக்கத்தை பெற்றனர். ஆரம்பம் முதல் அதிரடி சரவெடி என பேட்டிங் ஆடிய ஸ்மித் 6 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் என மிரட்டிவிட, மறுமுனையில் லாரா மற்றும் பெர்கின்ஸ் இருவரும் 6 ரன்னில் வெளியேறினர்.
மிடில் ஆர்டரில் வந்து சிறப்பாக பந்துவீசிய ஷபாஸ் நதீம் 4 ஓவரில் ஒரு ஓவரை மெய்டனாக வீசி 12 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். ஸ்மித் 45 ரன்கள் அடிக்க, மிடில் ஆர்டரில் வந்து தனியாளாக போராடிய சிம்மன்ஸ் 57 ரன்கள் அடித்து அசத்தினார். 20 ஓவரில் 148/7 ரன்கள் சேர்த்தது வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணி.
149 ரன்கள் எடுத்தால் வெற்றி என விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய சச்சின் மற்றும் அம்பத்தி ராயுடு இருவரும் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சச்சின் டெண்டுல்கர் ஆல்டைம் ஃபேவரட் ஷாட்டான கட் ஷாட்டில் பவுண்டரியையும், அப்பர் கட் ஷாட்டில் சிக்சரையும் அடித்து மிரட்டிவிட்டார்.
சிறப்பாக ஆடிய சச்சின் 25 ரன்னில் வெளியேற, வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை துவம்சம் செய்த அம்பத்தி ராயுடு 9 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 74 ரன்கள் விளாசி கிட்டத்தட்ட போட்டியை தனியாளாக முடித்துவைத்தார். 17.1 ஓவரில் வெற்றி இலக்கை எட்டிய இந்தியா மாஸ்டர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி கோப்பை வென்றது.
சச்சினின் ஆட்டத்தை பார்க்க மைதானம் முழுவதும் கிட்டத்தட்ட 50,000 ரசிகர்கள் நிரம்பியிருந்தனர். கோப்பை வென்றபிறகு வெற்றிபெற்ற இந்தியா மாஸ்டர்ஸ் அணி மைதானத்தை வலம்வந்து ரசிகர்களுக்கு நன்றியை வெளிப்படுத்தியது.