கிரிக்கெட்டை பொறுத்தவரை டி20 வடிவமானது ரசிகர்களின் அதீத விருப்பத்திற்குரிய ஒன்றாகவே இருந்து வருகிறது. நமக்கு பிடித்த விசயங்களின் முடிவுகளானது, விரைவாகவே எட்டப்படவேண்டும் என்றும், அது எப்போதும் நமக்கு பிடித்த ஒரு முடிவாகவே இருக்க வேண்டும் என்ற ஆர்வம் பொதுவாகவே மனிதர்களுக்கு இருப்பது தான். அது அப்படியே விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாத ஒன்றாகவும், சுவாரசியமான ஒன்றாகவும் அமைந்துவிட்டால், அது நமக்கு மிகவும் பிடித்த ஒன்றாகவே மாறிவிடுமல்லவா, அப்படிதான் இந்திய ரசிகர்களுக்கு ஐபிஎல் தொடர் மாறியுள்ளது. அத்தகைய விறுவிறுப்புக்கு மேலும் தீணி போடும் வகையில், பல புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது ஐபிஎல் நிர்வாகம்.
அப்படி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விதிகளில் “இம்பேக்ட் பிளேயர் மற்றும் ஒய்டு- நோ பால்களுக்கு ரிவ்யூ கேட்கலாம்” என்ற இரண்டு விதிகள் மட்டும், தொடர்ந்து விமர்சனத்திற்குரிய ஒன்றாகவே இருந்து வருகிறது.
இம்பேக்ட் பிளேயர் விதியை பொறுத்தவரையில், ஐபிஎல் நிர்வாகம் கடந்த ஆண்டு அதற்கான முன்னெடுப்பை எடுத்த போதே, கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இம்பேக்ட் வீரர் விதியானது கிரிக்கெட்டின் நேர்முகத்தன்மைக்கும், சாராம்சத்திற்கும் எதிரான ஒன்றானது என்றும், ஏற்கனவே ஐசிசி தேவையில்லை என ஒதுக்கி வைத்த ஒன்றை எதற்காக மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற பல விமர்சனங்கள் தொடர்ந்து வைக்கப்பட்டன. ஆனால் விமர்சனங்கள் எதையும் கண்டுகொள்ளாத ஐபிஎல் நிர்வாகம், இம்பேக்ட் பிளேயர் என்ற சுவாரசியமான விதியை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியது.
தற்போது ஐபிஎல் போட்டிகளில் பயன்படுத்தப்பட்டு அது வெற்றிகரமான ஒரு ரூலாக மாறியுள்ள நிலையில், இம்பேக்ட் பிளேயர் விதியை சுனில் கவாஸ்கர், ஹர்பஜன் சிங் போன்ற பல முன்னாள் வீரர்கள் வரவேற்றுள்ளனர். இந்த விதியானது “சூப்பர் சப்” என்ற பெயரில் 2005ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு கிரிக்கெட்டின் நேர்முகத்தன்மைக்கு எதிராக இருப்பதாக கூறி, 2006ஆம் ஆண்டிலேயே கைவிடப்பட்டது. இந்த தொடர் முழுவதும் முடிந்தால் தான் “இம்பேக்ட் பிளேயர்” விதி எந்தளவு ஆரோக்கியமானது என்று தெரியவரும்.
இம்பேக்ட் பிளேயரை தொடர்ந்து தற்போது விவாதத்திற்குரிய ஒன்றாக மாறியுள்ளது ஒய்டு மற்றும் நோ பால்களுக்கு ரிவ்யூ கேட்கும் ரூல். இந்த ரூலை பொறுத்தவரையில் பேட்ஸ்மேன் மற்றும் பவுலர் இருவரும் அம்பயரின் ஒய்டு மற்றும் நோ பால் அறிவிப்பை மறுக்கவும் முடியும், கொடுக்கவில்லை என்றால் கேட்கவும் முடியும். ஏற்கனவே வீசப்படும் 40 ஓவர்களிலும் நோ-பால்களை கவனிக்கும் விதமான விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி அம்பயர் நோ-பாலை அறிவிக்க வில்லை என்றாலும், பவுலர்கள் ஸ்டெப்-நோ வீசினால் சயரன் அடித்து மீண்டும் அந்த பந்தை வீச பணிக்கப்படும். ஏற்கனவே அந்த முறை நடைமுறையில் இருக்கும் போது, தற்போது ஒய்டு மற்றும் நோ பால்களையும் மறுக்கும் விதமாக ரூல் அறிவிக்கப்பட்டிருப்பது, அம்பயர்களின் மீதான சுதந்திரத்தை பறிப்பது போல் இருப்பதாக பல ரசிகர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
“ஒரு போட்டியில் அனைத்திற்கும் டெக்னாலஜியை பயன்படுத்திவிட்டால், பிறகு எதற்காக அம்பயர்கள் ஆடுகளத்தில் இருக்கவேண்டும், அவர்களையும் அனுப்பிவிட்டு வெறும் AI-டெக்னாலஜியையே பயன்படுத்தி கொள்ளலாமே என்ற விமர்சனத்தை நெட்டிசன்கள் வைக்கின்றனர். மேலும் இந்த டெக்னாலஜி மோகம் இப்படியே தொடர்ந்தால், லெக்-பை கேட்பதற்கு கூட விரைவில் டெக்னாலஜியையே பயன்படுத்த ஆரம்பித்துவிடுவர், அம்பயர் வேடிக்கை பார்த்தால் மட்டும் போதும் என்று விமர்சித்துள்ளனர்.
ஆனால் இன்று நடைபெற்ற டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டியிலும், சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் போட்டியிலும் பேட்டில் பந்து பட்டு சென்றதை அம்பயர்ஸ் ஒய்டு அறிவித்தனர். பின்னர் அது ஒய்டு ரிவ்யூ சிஸ்டம் மூலம் டிஆர்எஸ் கேட்கப்பட்டு திரும்ப பெறப்பட்டது. இதனால் ஒய்டு ரிவ்யூ ரூலை ஒருசாரார் கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.