ஐஸ்லாந்து உருவாக்கிய ஐபிஎல் ஃப்ராடு அணி.. கேப்டனாக ரிஷப் பண்ட்!
10 அணிகள் பங்கேற்று விளையாடும் 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர், தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் வெளியேறி உள்ளன.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற வலுவான நிலையில் உள்ளன. இந்த நிலையில், ஐபிஎல் தொடங்கிய நாள் முதல் ஒவ்வோர் அணியைச் சேர்ந்த சில வீரர்கள் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். அதாவது, நடப்பு ஐபிஎல் போட்டிகளில் சரியாக ரன் குவிக்காமலும், விக்கெட் எடுக்காமலும் மோசமான ஆட்டங்களை ஆடி ஏமாற்றம் அளித்து வருகின்றனர். குறிப்பாக, ரிஷப் பண்ட், இஷான் கிஷன், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, வெங்கடேஷ் ஐயர் போன்றவர்கள் மெகா ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்டும் போதிய ஃபார்ம் இன்றி தவிக்கின்றனர்.
இந்த நிலையில் இதுபோன்ற 11 வீரர்களைத் தேர்வு செய்து 'ஐபிஎல் ஃப்ராடு XI' என்ற அணியை ஐஸ்லாந்து கிரிக்கெட் உருவாக்கி இருக்கிறது. அது உருவாக்கியிருக்கும் அணியில், ராகுல் திரிபாதி, ரச்சின் ரவீந்திரா, ரவிச்சந்திரன் அஸ்வின், இஷான் கிஷன், ரிஷப் பண்ட் (கேப்டன்) வெங்கடேஷ் ஐயர், கிளென் மேக்ஸ்வெல், தீபக் ஹூடா, பதிரானா, முகம்மது ஷமி, லியாம் லிவிங்ஸ்டன் ஆகிய 11 வீரர்கள் இடம்பிடித்து உள்ளனர். இந்த அணியில் இம்பேக் பிளேயராக முகேஷ் குமார் இடம்பிடித்துள்ளார்.