ஒரே குரூப்பில் இந்தியா - பாகிஸ்தான் விளையாடுமா? முடிவு செய்யப் போகும் ஐசிசி!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, பாகிஸ்தான் - இந்தியா உறவு இடையே விரிசல் அதிகரித்துள்ளது. இது, இருநாடுகளின் தாக்குதலுக்குப் பிறகு மேலும் அதிகரித்தது. இதனால், இந்தியாவும் பாகிஸ்தானும் மாறிமாறி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தன. அதன் ஒரு பகுதியாக, ”இனி, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எந்த இருதரப்பு கிரிக்கெட் தொடரிலும் விளையாடாது” என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்திருந்தார். தவிர, ஐசிசி தொடர்களில் இந்தியா - பாகிஸ்தானை ஒரே குழுவில் சேர்க்க வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில், ஐ.சி.சி. நிகழ்வுகளில் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து, ஜூலை 17-20 வரை சிங்கப்பூரில் நடைபெறும் விளையாட்டு நிர்வாகக் குழுவின் வருடாந்திர மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. இதுகுறித்து பிசிசிஐ வட்டாரம் பி.டி.ஐ.யிடம் தெரிவித்துள்ள செய்திக்குறிப்பில், “இந்தப் பிரச்னை வருடாந்திர மாநாட்டில் விவாதத்திற்கு வரும் என்பது உறுதி. ஐ.சி.சி. நாக் அவுட்களில் இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடாமல் தடுப்பது சாத்தியமில்லை என்றாலும், ஐ.சி.சி. நிகழ்வுகளில் வழக்கமாக இருக்கும் ஒரே குழுவில் அவர்களைச் சேர்க்காமல் இருப்பது ஒரு சாத்தியமாகும்” எனத் தெரிவித்துள்ளது.
கடந்த பத்தாண்டுகளாக ஐ.சி.சி. போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே குழுவில் இடம்பெற்றிருந்தன. ஆனால் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகள் இடையிலான மோதல் காரணமாக, அந்த நிலை மாறக்கூடும் எனக் கூறப்படுகிறது. உலக உலக கிரிக்கெட்டில் பிசிசிஐ அதிகபட்ச செல்வாக்கைக் கொண்டிருப்பதாலும், ஐசிசி தலைவராக ஜெய் ஷா இருப்பதாலும் இது, நிச்சயம் மாறக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது. ஐ.சி.சி தலைவராக ஜெய் ஷா முதல் முறையாக வருடாந்திர மாநாட்டில் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை வென்றதற்கு முன்னதாக, 2027 வரை இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளுக்கான கலப்பின மாதிரியை பிசிபி, பிசிசிஐ மற்றும் ஐசிசி ஒப்புக்கொண்டன. இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் திட்டமிடப்பட்டுள்ள 2025 மகளிர் உலகக் கோப்பையில் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று விளையாடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.