"பேட்ஸ்மேன்களின் திட்டத்தை யூகித்து என் திட்டத்தை வகுப்பேன்" - குல்தீப் யாதவ்

சரியான திட்டம் உங்களிடம் இருந்தால், சரியான லென்த்தில் பந்துவீசினால், அந்த பேட்ஸ்மேனை ஆட்டமிழக்கச்செய்ய அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. என்னுடைய திட்டம் எப்போதுமே அதுதான். லென்த் தான் மிகவும் முக்கியம் ~ குல்தீப்.
குல்தீப் யாதவ்
குல்தீப் யாதவ்-

குல்தீப் யாதவ் - டி20 உலகக் கோப்பையின் தொடக்கத்தில் அதிக வாய்ப்புகள் பெறவில்லை. இந்தியாவின் முதல் சாய்ஸ் லெவனில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டவர், லீக் சுற்றில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. அமெரிக்க ஆடுகளங்கள் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால், இந்திய அணி கூடுதல் பேட்டிங் ஆப்ஷனை விரும்பி அக்‌ஷரை தேர்வு செய்வதால், குல்தீப்புக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இருந்தாலும் வாய்ப்பு கிடைத்தவுடன் தன் மேஜிக்கை நிகழ்த்தத் தொடங்கிவிட்டார் குல்தீப். இப்போது வழக்கம்போல் அவருக்கு விக்கெட் மழை பொழிந்துகொண்டிருக்கிறது.

குல்தீப் யாதவ்
INDvAUS | அரையிறுதிக்குள் நுழையுமா ஆஸ்திரேலியா..?

அமெரிக்காவில் தனக்கு வாய்ப்பு கிடைக்காததைப் பற்றி பத்திரிகையாளர் கேட்டதற்கு, "அமெரிக்காவில் நான் விளையாடவில்லை. இது ஆஸ்திரேலியாவில் இருப்பது போன்ற விக்கெட்டுகள். இருந்தாலும் நான் இங்கு பந்துவீச நிச்சயம் விரும்பியிருப்பேன். என்னதான் விளையாடவில்லை என்றாலும் நான் என் அணியினருக்கு தொடர்ந்து என்னால் முடிந்த உதவிகள் செய்துவந்தேன். டிரிங்ஸ் கொண்டு போய் கொடுத்து உதவி செய்தேனே! அதுவுமே விளையாடுவது போலத்தான்" என்று விளையாட்டுத் தனமாகக் கூறினார்.

என்னதான் அமெரிக்காவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் கால் வைத்ததில் இருந்து குல்தீப்பின் ஆதிக்கம் தொடங்கிவிட்டது. சூப்பர் 8 சுற்றில் விளையாடிய 2 போட்டிகளில் அவர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருக்கிறார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் 2 விக்கெட்டுகள் வீழ்த்திய அவர், வங்கதேசத்துக்கு எதிராக அசத்தி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்களில் அசத்துவது பற்றி அவரிடம் கேட்கப்பட்டதற்கு, "இந்த சூழ்நிலைகளை நான் நன்கு அறிவேன். என்னுடைய சர்வதேச டி20 அறிமுகமும், ஒருநாள் அறிமுகமும் இங்கு தான் நடந்தது. இங்கு என்ன லென்த்தில் வீசினால் நல்லது என்று நன்கு தெரியும் என்பதால் என் வேகத்தில் வேரியேஷன் காட்டுவதில் தான் நான் அதிகம் கவனம் செலுத்துகிறேன். இந்த இடம் ஸ்பின்னர்களுக்கு நன்கு சாதகமாக இருக்கும்" என்று கூறினார்.

குல்தீப் யாதவ்
குல்தீப் யாதவ்

"ஒவ்வொரு போட்டியிலும் விளையாடுவது ஒவ்வொரு வீரருக்குமே முக்கியம் தான். ஒவ்வொரு போட்டியையுமே சாதாரண மற்றுமொரு போட்டியாக எடுத்துக்கொள்ளவேண்டும். இப்போது சூப்பர் 8 சுற்றில் விளையாடுவதால் நிச்சயம் நிறைய நெருக்கடி இருக்கும். அதுவும் கடைசி சூப்பர் 8 போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடப்போகிறோம். ஆடுகளங்கள் ஸ்பின்னர்களுக்கு சாதகமாகவே இருக்கின்றன. அதை கடைசி சில போட்டிகளில் நம்மால் தெளிவாகப் பார்க்க முடிகிறது. எதுவும் மாறப்போவதில்லை. பந்துவீச எனக்கு நான்கு ஓவர்கள் இருக்கின்றன. அதை நல்லபடியாக முடிப்பதே என் திட்டம். லென்த்தை சரியாகப் பிடித்துக்கொண்டு, என் வேகத்தை மாற்றினால் போதும். எனக்கு அதுவே வொர்க் அவுட் ஆகும்.

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இடது கை பேட்ஸ்மேன்களுக்குப் பந்துவீசும்போது லெக் சைட் மிகவும் சிறியதாக இருந்தது. அதேசமயம் அந்தத் திசை நோக்கி காற்று அடித்தது குல்தீப்புக்கு சாதகமாக இருந்தது. இருந்தாலும் அதைப் பற்றி யோசிக்காமல் தன் வேலையை செய்தார் குல்தீப். அதைப் பற்றிப் பேசும்போது, "அந்த எண்டில் இருந்து பந்துவீசுவது எந்தவொரு ஸ்பின்னருக்குமே கடினம் தான். என்னுடைய ரிதம் ஓடி வருவதைப் பற்றியல்ல. அது நான் எவ்வளவு அக்ரஸிவாக இருக்கிறேன் என்பதைப் பற்றியது. நான் காற்றைப் பற்றியோ, பௌண்டரியின் தொலைவு பற்றியோ யோசிக்கவே இல்லை. நான் யோசித்தது எல்லாம் ஒரு பேட்ஸ்மேன் நான் என்ன செய்வேன் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார், அவர் என்ன நினைக்கிறார் என்பது போன்ற விஷயங்களை ஒவ்வொரு படியாக கண்டறியவேண்டும் என்பதைப் பற்றித்தான். இதை மனதில் வைத்துக்கொண்டு பந்தின் லைன் & லென்த்தை மாற்றினேன். அவர்கள் சிறிய பௌண்டரியை டார்கெட் செய்தார்கள். அதனால் நான் அதற்கு ஏற்ப முடிவுகள் எடுத்தேன்" என்று கூறினார் குல்தீப்.

இப்போது மட்டுமல்ல, எப்போதுமே குல்தீப்பை பேட்ஸ்மேன்கள் அட்டாக் செய்திருக்கிறார்கள். ஆனால் அதைப் பற்றி குல்தீப் எப்போதுமே கவலைப்பட்டதில்லை. அவர் தன் போக்கில் எப்போதுமே அட்டாக்கிங்காகவே பந்துவீசியிருக்கிறார். அதனால் தான் அவருக்கு விக்கெட்டுகள் விழுந்துகொண்டே இருக்கிறது. இதைப் பற்றியும் குல்தீப்பிடம் கேட்கப்பட்டது. "எதிரணிக்கு ஓவருக்கு 10 முதல் 12 ரன்கள் வரை தேவை எனும்போது, பேட்ஸ்மேன்கள் என்னை அட்டாக் செய்கிறார்கள் எனும்போது என்னுடைய திட்டம் லென்த்தை சரியாக தொடர்வது மட்டும் தான். சரியான திட்டம் உங்களிடம் இருந்தால், சரியான லென்த்தில் பந்துவீசினால், அந்த பேட்ஸ்மேனை ஆட்டமிழக்கச்செய்ய அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. என்னுடைய திட்டம் எப்போதுமே அதுதான். லென்த் தான் மிகவும் முக்கியம்" என்று கூறினார் குல்தீப்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com