
சிஎஸ்கே வேகப்பந்துவீச்சாளர் துஷார் தேஷ்பாண்டேவை கிண்டலடித்து கமெண்ட் செய்த ரசிகருக்கு காட்டமாக பதிலளித்துள்ளார் அவர்.
நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 15 ரன்களில் வெற்றிப்பெற்று சிஎஸ்கே அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றது. இந்த ஆட்டத்தில் பந்துவீச்சாளர்கள் மிகச்சிறப்பாக விளையாடி ஆட்டத்தை கட்டுக்குள் வைத்திருந்தனர்.
சிஎஸ்கே அணியின் சார்பாக இந்த ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுகளை எடுத்தவர் துஷார் தேஷ்பாண்டே. மொத்தம் 21 விக்கெட்டுகளை எடுத்து 4 ஆம் இடத்தில் இருக்கிறார். ஆனாலும் அவர் அதிக ரன்களை வாரி வழங்குவதாக குற்றச்சாட்டு உள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் 40 ரன்களை கொடுக்கிறார்.
இப்படி ரன்களை கொடுத்து விக்கெட் எடுப்பதில் என்ன பிரயோஜனம் இருக்கிறது என்று ரசிகர்கள் சாடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று சிஎஸ்கே வெற்றிப்பெற்றாலும் ரசிகர் ஒருவர் துஷார் தேஷ்பாண்டேவை ட்விட்டரில் டேக் செய்து பதிவொன்றை இட்டிருந்தார். அதில் அவர், "ஒவ்வொரு போட்டியிலும் 40 ரன்களை கொடுப்பதே இவருக்கு வேலையாப்போச்சு! சரியான ரன் மெஷின்" என பதிவிட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த துஷார் பாண்டே "ஃபீல்டுக்குள் இறங்கி ஒரு வீரராக விளையாட தைரியமிருந்தால் மட்டுமே இப்படி கமெண்ட் செய்ய வேண்டும். ஆனால் உறுதியாக சொல்கிறேன்... உன்னால் பவுண்டரியின் கயிற்றை கூட தாண்ட முடியாது" என காட்டமாக பதிலளித்துள்ளார்.
இதற்கு பலரும் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பதில் தெரிவித்து வருகின்றனர்.