IPL 2024 | சரியான வீரர்களை வாங்கியதா டெல்லி கேபிடல்ஸ்? இந்த முறையாவது ஒரு நல்ல சீசன் அமையுமா?

குமார் குஷாக்ரா & சுமித் குமார் ஆகியோரின் செயல்பாடுகளே இந்த அணியின் வாய்ப்புகளை நிர்ணயிக்கும். ஏலத்தைப் பொறுத்தவரை டெல்லி கேபிடல்ஸ் அணியின் செயல்பாடு சற்று சுமாராகவே அமைந்திருக்கிறது.
Delhi Capitals
Delhi Capitals Delhi Capitals

ஐபிஎல் 2024 தொடருக்கான வீரர்கள் ஏலம் கடந்த செவ்வாய்க்கிழமை துபாயில் நடந்தது. பல சாதனைகள் அரங்கேறிய அந்த அரங்கில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் செயல்பாடு எப்படி இருந்தது? தங்களுக்குத் தேவையான வீரர்களை அந்த அணி வாங்கியதா? அனைத்து இடங்களையும் சரியாக நிரப்பிவிட்டதா? இன்னும் என்னென்ன பிரச்சனைகள் அந்த அணிக்கு இருக்கின்றன? ஓர் அலசல்

எந்தெந்த இடங்கள் தேவைப்பட்டது?

Delhi Capitals
Delhi Capitals Delhi Capitals

டெல்லி கேபிடல்ஸ் அணி தங்கள் மிடில் ஆர்டரை ஒட்டுமொத்தமாக காலி செய்திருந்தது. ரோவ்மன் பவெல், மனிஷ் பாண்டே, ரைலி ரூஸோ, சர்ஃபராஸ் கான் என பலரையும் ரிலீஸ் செய்திருந்தது கேபிடல்ஸ். அதனால் அவர்கள் மிடில் ஆர்டரில் பெரிய முதலீடு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிலும் குறிப்பாக ஃபினிஷர்களுக்கு. டாப் ஆர்டரைப் பொறுத்தவரை எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை. அதேபோல் பந்துவீச்சில் ஸ்பின் யூனிட் முழுமையாக இருந்தது. வேகப்பந்துவீச்சில், இந்திய பௌலர் சேத்தன் சகாரியாவை அந்த அணி ரிலீஸ் செய்தது. முஸ்தாஃபிசுர் ரஹ்மானையும் ரிலீஸ் செய்ததால், தொடர்ந்து காயமடைந்து வரும் நார்கியாவுக்கு பேக் அப் பௌலரும் தேவைப்பட்டது. அனைத்தையும் விட முக்கியமாக விக்கெட் கீப்பர். ஏனெனில் ரிஷப் பண்ட் இல்லாமல் போன சீசனே அந்த அணி கஷ்டப்பட்டது. இந்த சீசன் அவர் மீண்டும் வந்துவிடுவார் என்ற செய்திகள் வந்தாலும், விக்கெட் கீப்பிங் செய்வாரா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. அதனால் பிளேயிங் லெவைல் இடம்பெறக் கூடிய ஒரு பேக் அப் கீப்பரும் அந்த அணிக்குத் தேவைப்பட்டது.

யாரையெல்லாம் வாங்கியது டெல்லி?

1. குமார் குஷாக்ரா - 7.2 கோடி ரூபாய்
2. ஜை ரிச்சர்ட்சன் - 5 கோடி ரூபாய்
3. ஹேரி ப்ரூக் - 4 கோடி ரூபாய்
4. சுமித் குமார் - 1 கோடி ரூபாய்
5. ஷாய் ஹோப் - 75 லட்ச ரூபாய்
6. டிரிஸ்டன் ஸ்டப்ஸ் - 50 லட்ச ரூபாய்
7. ரிக்கி பூய் - 20 லட்ச ரூபாய்
8. ரஷிக் சலாம் - 20 லட்ச ரூபாய்
9. ஸ்வஸ்திக் சிகாரா - 20 லட்ச ரூபாய்

முடிவுகள் சரியானதா?

டெல்லி அணியைப் பொறுத்தவரை அவர்களின் தேவைக்கு ஏற்ற சப்ளை இந்த ஏலத்தில் அதிகமாக இல்லை. 5 மற்றும் 6 ஆகிய இடங்களில் ஆடக்கூடிய, ஆட்டத்தை ஃபினிஷ் செய்யக்கூடிய வீரர்கள் இந்த ஏலத்தில் மிகவும் குறைவாகவே இருந்தனர். அதனால் அவர்களால் சரியான வீரர்களை வாங்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது. அதனால் முதல் செட்டிலேயே ஹேரி ப்ரூக்கை 4 கோடி ரூபாய்க்கு வாங்கியது அந்த அணி. கடந்த ஆண்டு பெரிய அளவுக்கு சிறப்பாக செயல்படாததால் ரிலீஸ் செய்யப்பட்ட ப்ரூக்கை இம்முறை நல்ல தொகைக்கு வாங்கியிருக்கிறது டெல்லி. சன்ரைசர்ஸுக்காக அவர் டாப் ஆர்டரில் ஆடி தடுமாறியிருந்தார். ஆனால் சமீபத்தில் இங்கிலாந்து அணிக்காக ஃபினிஷர் ரோலில் சிறப்பாக செயல்படுகிறார் ப்ரூக். ஸ்பின்னுக்கு தடுமாறும் அவர், வேகப்பந்துவீச்சை மிகச் சிறப்பாக எதிர்கொள்வதால், அந்த ரோல் அவருக்கு ஏற்றதாக இருக்கும். அந்த வகையில் பார்த்தால் ப்ரூக் டெல்லிக்கு கிடைத்திருப்பது நல்ல விஷயம்.

இன்னொரு மிடில் ஆர்டர் ஸ்லாட்டுக்கு ஜார்க்கண்டை சேர்ந்த விக்கெட் கீப்பர் குமார் குஷாக்ராவை 7.2 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறது டெல்லி அணி. அதிரடியாக ஆடக்கூடிய அந்த 19 வயது வீரர் மீது நெருக்கடி அதிகம் இருக்கும். இருந்தாலும், மிடில் ஆர்டர் ஸ்லாட்டோடு விக்கெட் கீப்பர் ஸ்லாட்டையும் அவர் நிரப்புவதால் இவர் அவர்களுக்கு ஏற்ற வீரர் தான். ஆனால் ஒரு 19 வயது வீரர் முழுமையாக அந்த இடத்துக்கு பொருந்திப்போவார் என்று எதிர்பார்க்க முடியாது. அதேசமயம் அந்த அணி இவருக்கு பேக் அப் வாங்கவும் தவறியிருக்கிறது. ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டிருக்கும் சுமித் குமார் விஜய் ஹசாரே சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார். ஆனால் எந்த அளவுக்கு ஐபிஎல் அரங்கில் அவரால் ஜொலிக்க முடியும் என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

இந்த இரண்டு இடங்களுக்கும் பேக் அப் ஆக தென்னாப்பிரிக்க இளம் வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸை 50 லட்ச ரூபாய்க்கு வாங்கியிருக்கிறது கேபிடல்ஸ். டி20 ஃபார்மட்டில் நல்ல ஸ்டிரைக் ரேட் வைத்திருக்கும் அவர், இந்தியாவில் அவ்வளவு சிறப்பாக செயல்பட்டது இல்லை. அதனால் இது பலன் தருமா என்று சொல்ல முடியாது.

நார்கியா, எங்கிடி ஆகியோர் இடத்துக்கு பேக் அப் ஆக ஜை ரிச்சர்ட்சனை வாங்கியிருக்கிறது கேபிடல்ஸ். அவரும் ஐபிஎல் தொடரில் பெரிதாக ஜொலித்ததில்லை. ஓரளவு சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் பலரும் அதே மதிப்பில் விலை போயிருக்கும்போது, இது மோசமான ஒன்றாகவே தோன்றுகிறது.

பிளேயிங் XII எப்படி இருக்கும்

1. டேவிட் வார்னர்
2. பிரித்வி ஷா
3. மிட்செல் மார்ஷ்
4. ரிஷப் பண்ட்
5. குமார் குஷாக்ரா
6. ஹேரி ப்ரூக்
7. அக்‌ஷர் படேல்
8. சுமித் குமார் / லலித் யாதவ்
9. ஏன்ரிச் நார்கியா
10. குல்தீப் யாதவ்
11. கலீல் அஹமது
12. முகேஷ் குமார்

குமார் குஷாக்ரா & சுமித் குமார் ஆகியோரின் செயல்பாடுகளே இந்த அணியின் வாய்ப்புகளை நிர்ணயிக்கும். ஏலத்தைப் பொறுத்தவரை அந்த அணியின் செயல்பாடு சற்று சுமாராகவே அமைந்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com