விமர்சனங்களுக்கு சாட்டை அடி.. 44 பந்தில் அதிவேக சதம்.. 16 ஓவரில் 207 ரன்கள் சேஸ்செய்து பாக். சாதனை!
2023 ஒருநாள் உலகக்கோப்பை தோல்வி, 2024 டி20 உலகக்கோப்பை தோல்வி மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் சொந்த மண்ணில் படுதோல்வி என ’தோல்வி தோல்வி தோல்வி...’ என்று மோசமாக சென்றுகொண்டிருக்கும் பாகிஸ்தான் அணி மீது முன்னாள் வீரர்கள் தொடங்கி, ரசிகர்கள் என கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர்.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி முடித்த கையோடு நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி, 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நட்சத்திர வீரர்கள் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் முதலிய வீரர்கள் இடம்பெறாமல் இளம்வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
விமர்சனங்களுக்கு சாட்டை அடி.. 44 பந்தில் சதம்!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர் முதலில் நடந்துவரும் நிலையில், முதலிரண்டு டி20 போட்டிகளிலும் பாகிஸ்தான் தோல்வியை தழுவியது.
முதல் போட்டியில் 91 ரன்களில் சுருண்ட இளம்வீரர்கள் கொண்ட பாகிஸ்தான் அணியின் மீதும் கடுமையாக விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆனால் இளம் வீரர்களுக்கு அழுத்தத்திலிருந்து வெளியேற வாய்ப்பு கொடுங்கள், எங்கள் அணியில் பிரச்னைகள் இருப்பது உண்மைதான், அதிலிருந்து மீண்டுவர விரும்புகிறோம் என வேகப்பந்துவீச்சாளர் ஹரிஸ் ராஃப் பேசியிருந்தார்.
இந்த சூழலில் நடைபெற்ற 3வது டி20 போட்டியில் 16 ஓவரில் 207 ரன்கள் குவித்து மிரட்டலான வெற்றியை பதிவுசெய்துள்ளது பாகிஸ்தான் அணி. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியில் சாப்மன் அடித்த 94 ரன்கள் உதவியால் 204 ரன்களை குவித்தது நியூசிலாந்து.
அதனைத்தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணியில் டாப் ஆர்டர்கள் 3 பேர் மட்டுமே சேர்ந்து போட்டியை முடித்தனர். தொடக்க வீரராக களமிறங்கிய ஹசன் நவாஸ் 44 பந்தில் சதமடித்து மிரட்டிவிட்டார். 10 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் என பறக்கவிட்ட ஹசன் 45 பந்தில் 105 ரன்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டார். 16 ஓவரிலேயே 207 ரன்களை குவித்த பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்தது.
அறிமுகமான முதலிரண்டு போட்டிகளிலும் 0 ரன்னில் வெளியேறியிருந்த ஹசன் நவாஸ், 3வது போட்டியில் பாகிஸ்தானுக்காக அதிவேக சதமடித்து சாதனை பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
பாகிஸ்தானுக்காக அதிவேக டி20 சதங்கள்:
1. ஹசன் ரவாஸ் - 44 பந்துகள் vs நியூசிலாந்து - 2025
2. பாபர் அசாம் - 49 பந்துகள் vs தென்னாப்பிரிக்கா - 2021
3. அகமது ஷாசாத் - 58 பந்துகள் vs வங்கதேசம் - 2014
பாகிஸ்தானின் அதிவேக டி20 ரன்சேஸ்:
1. 208/3 vs வெஸ்ட் இண்டீஸ் - 18.5 ஓவர்ஸ் - 2021
2. 2017/1 vs நியூசிலாந்து - 16 ஓவர்ஸ் - 2025
3. 205/1 vs தென்னாப்பிரிக்கா - 18 ஓவர்ஸ் - 2021