‘நல்லவங்களுக்கு நல்லது தான் நடக்கும்.. தோனியிடம் தோல்வியடைந்தது..’ - ஹர்திக் பாண்ட்யா உருக்கம்!

‘நல்லவங்களுக்கு நல்லது தான் நடக்கும், அப்படி நான் பார்த்த நல்லவர்களில் சிறந்தவர் தோனி’ என்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
Hardik Pandya-MS Dhoni
Hardik Pandya-MS DhoniR Senthil Kumar, PTI
Published on

நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில், குஜராத் அணியை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து 5-வது முறையாக கோப்பையை வென்றுள்ளது தோனி தலைமையிலான சென்னை அணி. வெற்றி வாய்ப்பு இருந்தும் கடைசி இரண்டு பந்துகளில் ஜடேஜாவின் அதிரடி சிக்ஸர் மற்றும் பவுண்டரியால் குஜராத் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில், போட்டிக்குப் பின் பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, “தோல்விக்கு எந்தக் காரணங்களையும் கூறப் போவதில்லை. சிஎஸ்கே சிறப்பாக விளையாடியது. நாங்கள் நன்றாகவே பேட் செய்தோம். குறிப்பாக சாய் சுதர்சன் ஆட்டம் மிரட்டலாக இருந்தது. இந்த மாதிரியான நெருக்கடி நேரத்தில் சிறப்பாக (சாய் சுதர்சன்) விளையாடுவது எளிதல்ல.

எங்கள் அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களிடமிருந்து சிறப்பானவற்றை பெறவே முயற்சித்தோம். எனினும், அவர்களுக்கு கிடைத்துள்ள வெற்றி என்பது அவர்களுக்கானது தான். மோகித், ரஷீத், ஷமி உள்பட அனைவருமே சிறப்பானதையே செய்தனர்.

எம்.எஸ். தோனியின் இந்த வெற்றி மகிழ்ச்சியாக உள்ளது. ஏற்கனவே முடிவு (விதி) எழுதப்பட்டுவிட்டது. நான் தோல்வியடைய வேண்டுமென்றால், அவரிடம்தான் தோல்வியடைவேன். நல்ல மனிதர்களுக்கு நல்லதே நடக்கும். எனக்கு தெரிந்த சிறந்த மனிதர்களில் தோனியும் ஒருவர். கடவுள் மிகவும் கருணையானவர். எங்களுக்கும் கடவுள் கருணை காட்டினார். ஆனால், இன்றிரவு தோனியுடையது. (எங்களை விடவும், தோனிக்கு கடவுள் அதிகமாக கருணை காட்டியுள்ளார்)” என்று தெரிவித்துள்ளார். தோனியை தனது மென்ட்டாராக கருதும் ஹர்திக் பாண்ட்யா, அதனை பல தருணங்களில் வெளிப்படுத்தியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com