
ஐபிஎல்லின் பிளே ஆஃப் சுற்றில் இடம்பெறப் போகும் அடுத்த அணிகள் எவை எனப் பேசப்படும் நிலையில், மறுபுறம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் ஓய்வு பற்றிய பேச்சுகளையும் பல வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், “தோனி இன்னும் விளையாட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ”தோனி, நம்மை அவர் விளையாடும் காலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்தத் தொடரில், அவர் அடித்த இமாலய சிக்ஸர்களும் அவர் சேர்க்கும் ஒன்று இரண்டு ரன்களும் ஓய்வு பெற்றாலும் அவர் பழைய தோனிதான் என்பதை காட்டுகிறது. அவர், தன்னுடைய பழைய வேகத்தில் ரன்களை ஓடி எடுக்கவில்லை என்றாலும் ஒரு பேட்டராக தோனி மிகவும் ஆபத்தானவராகவே இருக்கிறார். ஆகையால், நீங்கள் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தி எங்களது உணர்வைக் காயப்படுத்தி விடாதீர்கள். தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுங்கள்.
ஒரு வீரர், தன்னுடைய அடுத்தகட்டத்துக்கு நகரும்போது அவரைப்பற்றி நிறைய செய்திகள் எழுகின்றன. ஆனால், அவற்றை எல்லாம் தோனி மறந்துவிட்டு, அணியை வழிநடத்துவதில் கவனம் செலுத்துகிறார். அவருடைய இந்தச் செயல்பாட்டினால் சென்னை அணி, தற்போது முதல் இரண்டு இடங்களுக்கான பட்டியலில் உள்ளது. அவரது கேப்டன்ஷிப் மட்டுமின்றி, களத்தில் அவருடைய வியூகங்களும் சென்னை அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளன. களத்தில் அவரது தலைமை பண்பு மற்றும் அவரது பேட்டிங் இரண்டுமே இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வகையில் அமைந்திருக்கிறது. அஜிங்கியா ரகானே போன்ற ஒரு வீரர், தோனியின் தலைமையில் ஆடும்போது எவ்வாறு தன்னை வெளிப்படுத்துகிறார் என்பதிலிருந்து அவருடைய தலைமைப் பண்பு பற்றி நாம் அறிந்துகொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.