பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL)| சதமடித்த வீரருக்கு ஹேர் டிரையர் பரிசு.. ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!
பாகிஸ்தானின் புகழ்பெற்ற டி20 லீக்கான பாகிஸ்தான் சூப்பர் லீக்கானது 2025 ஏப்ரல் 11-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. 10வது சீசனாக தொடங்கப்பட்ட தொடரில் இஸ்லாமாபாத் யுனைடெட், கராச்சி கிங்ஸ், லாகூர் கலந்தர்ஸ், முல்தான் சுல்தான்ஸ், பெஷாவர் சல்மி மற்றும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் முதலிய 6 அணிகள் கோப்பைக்கான பங்கேற்றுள்ளன.
இந்நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற கராச்சி கிங்ஸ் மற்றும் முல்தான் சுல்தான்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில், 43 பந்தில் 14 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 101 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது வென்றவதுக்கு தலைமுடியை காயவைக்கும் ஹேர் டிரையர் வழங்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே ட்ரோல் மெட்டீரியலாக மாறியுள்ளது.
ஆட்டநாயகனுக்கு ஹேர் டிரையர் பரிசு!
பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் கராச்சி கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த முகமது ரிஸ்வான் தலைமையிலான முல்தான் அணி 20 ஓவரில் 234 ரன்களை குவித்தது. அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய கேப்டன் ரிஸ்வான் 63 பந்தில் 105 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
235 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய கராச்சி கிங்ஸ் அணி, இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் வின்ஸின் தலைசிறந்த ஆட்டத்தால் 19.2 ஓவரில் இலக்கை எட்டி பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்தது. 43 பந்தில் 14 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 101 ரன்கள் குவித்த ஜேம்ஸ் வின்ஸ் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.
இந்த சூழலில் போட்டி முடிந்தபிறகு கராச்சி கிங்ஸின் டிரஸ்ஸிங் அறையில் 'மிகவும் நம்பகமான ஆட்டக்காரர்' என்ற விருதும், அதற்கான பரிசும் சதமடித்த ஜேம்ஸ்க்கு வழங்கப்பட்டது. அவருக்கான பரிசாக ஹேர் டிரையர் வழங்கப்பட்டது தான் ரசிகர்களிடம் அதிகப்படியான ட்ரோல்களை பெற்றுத்தந்துள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக்கை ட்ரோல் செய்த எக்ஸ் பயனர் ஒருவர், "அடுத்த முறை ரொட்டி மேக்கரை கொடுங்கள்" என்றும், மற்றொருவர் "அடுத்த முறை லஞ்ச் பாக்ஸை கொடுங்கள்" என்று எழுதினார். தொடர்ந்து ஒருவர் நீங்கள் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை புரொமோட் செய்கிறீர்களா? அல்லது பாகிஸ்தானை அவமதிக்கிறீங்களா? என்று எழுதியுள்ளார்.