"என்னால் இன்னும் தூங்கமுடியவில்லை; விழக்கூடாத இடத்தில் அந்த பந்து விழுந்தது!"- மோஹித் சர்மா உருக்கம்

4 அற்புதமான பந்துகளை வீசி குஜராத் அணியை வெற்றியின் விளிம்பிற்கே அழைத்துச்சென்ற மோஹித் சர்மா, அவர் வீசிய கடைசி 2 பந்துகளும் அவரை தூங்கவிடவில்லை என்று ஒப்புக்கொண்டுள்ளார்.
Mohit Sharma
Mohit SharmaTwitter

ஒரு மறக்க முடியாத ஐபிஎல், ஒரு மீளவே முடியாத இறுதிப்போட்டி, இதயத்தை படபடக்க வைத்த கடைசி ஓவர் என இன்னும் சில மாதங்களுக்கு நம் நினைவை ஆட்கொள்ளும் ஆகச்சிறந்த ஒரு டி20 தொடராக 2023 ஐபிஎல் தொடர் இருந்தது. அதுவும் இறுதிப்போட்டி ஒன்றைக்காண 3 நாட்களை கடந்து ரசிகர்கள் காத்திருந்து கொண்டாடியது எல்லாம், இந்த வருட ஐபிஎல்லிற்கான ஸ்பெசல் மொமண்ட். மோஹித் சர்மாவும், ஜடேஜாவும் ஒருவரை ஒருவர் எதிர்கொண்ட அந்த கடைசி 2 பந்துகளும், கிரிக்கெட்டின் மீதான காதலை ஒவ்வொரு ரசிகனுக்கும் அதிகரிக்கும் வகையில் இருந்தது.

மோஹித் சர்மா வருகை தான் டைட்டன்ஸ் அணியை வலுவான ஒரு அணியாக மாற்றியது!

2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் சிறந்த அணியாக குஜராத் டைட்டன்ஸ் இருந்தாலும், முதல் 3-4 போட்டிகளில் பவுலிங்கில் 4ஆவது பவுலர் இல்லாமல் தத்தளித்து வந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக யாஸ் தயாள் 69 ரன்களை வாரிவழங்கிய போதும், அல்சாரி ஜோசப் டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்படாத போதும் டைட்டன்ஸ் அணி, சிறிய ஒரு குறையை பெரியதுபோல எதிர்கொண்டது. ஆனால் டி20 போன்ற குறுகிய வடிவ போட்டிகளில் ஒரு பவுலர் 50ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்தால், போட்டி உங்கள் கையை விட்டு விலகிவிடும்.

அப்படி ஒரு சூழலில் தான் டைட்டன்ஸ் அணி மோஹித் சர்மாவை டெத் பவுலிங்கிற்காகவே அணிக்குள் எடுத்துவந்தது. அணிக்குள் வந்து அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மோஹித் சர்மா, தன் வாழ்நாள் ஃபார்மில் ஜொலித்து அசத்தினார். டெத் ஓவர்களில் விக்கெட்டுகளாக மோஹித் வாரிக்குவிக்க, டைட்டன்ஸ் அணியானது சிறு குறைகூட இல்லாத ஒரு வலுவான அணியாக வலம் வந்தது. மோஹித் சர்மா இந்த ஐபிஎல்லின் சிறந்த பவுலிங் யூனிட் கொண்ட அணியாக குஜராத் டைட்டன்ஸை மாற்றினார்.

இரண்டு அதிரடி பேட்டர்கள் இருந்தும் கடைசி ஓவரில் பிரஸ்ஸர் ஏற்றிய மோஹித்!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் இறுதிப்போட்டியில், மோஹித் சர்மா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு பெரிய தடையாக இருந்தார். மழை குறுக்கிட்ட காரணத்தால் சென்னைக்கு பேட்டிங் செய்வது எளிதாகவே மாறியது. போட்டியின் முக்கியமான நேரத்தில் அம்பத்தி ராயுடு அதிரடியாக விளையாடி 2 சிக்சர்கள், 1 பவுண்டரி என பறக்கவிட, ஆட்டம் சென்னை அணிக்கு சாதகமாக மாறியது. ஆனால் அதே ஓவரில் தரமான கம்பேக் கொடுத்த மோஹித் சர்மா ராயுடு மற்றும் தோனியை அடுத்தடுத்து அவுட்டாக்கி போட்டியை சென்னை அணி பக்கம் போகாமல் இழுத்து பிடித்தார்.

Mohit Sharma
Mohit SharmaTwitter

கடைசி 6 பந்துக்கு 13 ரன்கள் அடித்தால் வெற்றி என்று போட்டி மாற, களத்தில் அதிரடி பேட்டர்களான ஷிவம் துபே மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இருந்தனர். மோஹித் சர்மா முதல் பந்தை வீசுவதற்கு முன்புவரை, இந்த இலக்கையெல்லாம் மாடர்ன் டே கிரிக்கெட்டில் சுலபமாக அடித்துவிடலாம் என்று சொல்லப்பட்டது. ஆனால் முதல் நான்கு பந்துகளில் 0, 1, 1, 1 ரன்கள் என வெறும் 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த மோஹித் சர்மா சென்னை அணிக்கு பயத்தை காட்டினார்.

கடைசி 2 பந்தில் போட்டி என்னாகுமோ என்ற பயத்தில் சென்னை ரசிகர்கள் எல்லாம் கண்ணீரே விட ஆரம்பித்தனர். சென்னை கேப்டன் தோனியோ போட்டியை பார்க்காமல் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தார். அப்படி ஒரு சூழலில் அழுத்தத்தை சிறப்பாக கையாண்ட ரவீந்திர ஜடேஜா, சிறப்பான 2 ஷாட்களை ஆடி சென்னை அணியை 5ஆவது ஐபிஎல் கோப்பைக்கு அழைத்துச்சென்றார்.

என்னால் தூங்கவே முடியவில்லை, அப்படி நான் வீசியிருக்க கூடாது! - மோஹித் சர்மா

சிறப்பான 4 பந்துகளை வீசியும் டைட்டன்ஸ் அணியை கோப்பைக்கு அழைத்து செல்ல முடியாதது குறித்து பேசியிருக்கும் மோஹித் சர்மா, “போட்டி முடிந்த பிறகு என்னால் தூங்க முடியவில்லை. நான் 5ஆவது பந்தையோ அல்லது கடைசி பந்தையோ அப்படி வீசியிருக்கக்கூடாது. எங்கோ எதையோ நான் மிஸ் செய்து விட்டேன், எல்லாம் தவறாக முடிந்துவிட்டது. அது ஒரு இனிமையான உணர்வாக இல்லை. தற்போது அதிலிருந்து என்னை நகர்த்த முயற்சித்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Mohit Sharma
Mohit SharmaTwitter

மேலும், தான் எந்தளவு நம்பிக்கையோடு இருந்தேன் என்பது பற்றி கூறியிருக்கும் அவர், “நான் என்ன செய்ய வேண்டும் என்பதில் என் மனம் மிகவும் தெளிவாக இருந்தது. இதுபோன்ற கடினமான சூழ்நிலைகளில் எப்படி பந்துவீச வேண்டும் என்றும், அதை எவ்வாறு களத்தில் செயல்படுத்தவேண்டும் என்பதற்கேற்ப அதிகமாக வலைப்பயிற்சி செய்திருந்தேன். இதற்கு முன்பும் இதேபோன்ற சூழ்நிலைகளில் இருந்திருக்கிறேன். அதனால் தான் அனைத்து பந்தையும் யார்க்கராக வீச முயற்சித்தேன்.

Mohit Sharma
Mohit SharmaTwitter

என் மீதும், என் பயிற்சியின் மீதும் நான் அதிக நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால் பந்தானது விழக்கூடாத இடத்தில் சென்று விழுந்தது. அது நேராக ஜடேஜாவின் பேட்டிற்கே சென்றது. நான் முயற்சித்தேன்.. என்னால் முடிந்தவரை எல்லாவற்றையும் முயற்சித்தேன்” என்று உருக்கமாக கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com