MI vs GT| மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 2வது தோல்வி.. முதல் வெற்றியை ருசித்தது குஜராத்!
18வது சீசனாக 2025 ஐபிஎல் தொடர் தொடங்கி நடைபெற்றுவருகிறது. முதல் சுற்று போட்டிகள் முடிந்து இரண்டாவது சுற்று போட்டிகள் நடந்துவருகின்றன.
இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் எதிர்த்து விளையாடியது குஜராத் டைட்டன்ஸ் அணி.
மும்பையை வீழ்த்தி வெற்றிபெற்றது குஜராத்!
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்.
முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் முதல் விக்கெட்டுக்கே 76 ரன்கள் அடித்து அபாரமாக தொடங்கினர்.
சுப்மன் கில் 38, ஜோஸ் பட்லர் 39 ரன்கள் என அடிக்க, நிலைத்து நின்று அதிரடியாக விளையாடிய சாய்சுதர்சன் 63 ரன்கள் அடித்து அசத்தினார். 20 ஓவர் முடிவில் 196 ரன்களை சேர்த்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.
197 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில், தொடக்க வீரர் ரோகித் சர்மா மற்றும் ரியான் ரிக்கல்டன் இருவரையும் போல்டாக்கி வெளியேற்றிய முகமது சிராஜ் மிரட்டிவிட்டார். விரைவாகவே 2 விக்கெட்டுகளை இழந்தாலும் 3வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
ஆனால் சரியான நேரத்தில் திலக் வர்மாவை 39 ரன்னிலும், சூர்யகுமாரை 48 ரன்னிலும் வெளியேற்றிய குஜராத் அணி ஆதிக்கம் செலுத்தியது. அதற்குபிறகு களத்திற்கு வந்த மின்ஸ் மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா இருவரும் அடுத்தடுத்து வெளியேற, 20 ஒவரில் 160 ரன்கள் மட்டுமே அடித்த மும்பை இந்தியன்ஸ் அணி படுதோல்வியை சந்தித்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியும் 2 தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் பின்தங்கியுள்ளது.