GTvMI | 'யாரு சாமி நீயி'... 'ப்ரின்ஸ்' கில் அதிரடியில் சல்லி சல்லியாய் நொறுங்கிய மும்பை..!

மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களே பார்த்து பயப்படும் ஒரே வீரர் என்றால், அது மும்பை இந்தியன்ஸின் ஜோர்டான் தான். "எல்லாம் தெரிஞ்சவனே எண்ணூர் வர போறானே...எதுவும் தெரியாத நம்மாள் எங்க போவப் போறானோ" என நினைத்து முடிக்கும் முன்னரே ஜோர்டனை..
Shubman Gill
Shubman GillKunal Patil

குஜராத்தில் வீசிய கில் புயல் காரணமாக மொத்த மும்பையும் காற்றோடு காற்றாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது. கடந்த போட்டியில் லக்னோவை ஊதித் தள்ளிய மும்பை பந்துவீச்சு இந்த போட்டியில் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டது. சாவ்லா, மாத்வால் போன்று எந்த பவுலர்கள் வீசினாலும் அடி தான் என்று முன்னமே முடிவெடுத்து வந்தது போல காட்டாற்று வெள்ளமாய் கரை புரண்டு ஓடினார் கில். கில்லை எப்படி நிறுத்துவது என்று தெரியாமல் மொத்த மும்பையும் முழிக்க குஜராத்தோ அதை பயன்படுத்தி இறுதிப் போட்டியில் நுழைந்துள்ளது.

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இரண்டாம் குவாலிபயர் ஆட்டம் நடைபெற்றது. தொடங்குவதற்கு முன்பு மழை வர ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது ஆட்டம். ' இப்படி எல்லாம் மழை பேய்ஞ்சுட்டு இருந்தா நாங்க எப்ப ஃபைனல்ஸுக்கு ரெடி ஆகுறது' என பல முறை சாம்பியன்ஸான மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தார்கள். டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் பந்துவீச்சை தேர்வு செய்தார். குஜராத்‌ அணியில் இலங்கை வீரர் ஷனாக்கா வெளியே சென்று அயர்லாந்து வீரர் லிட்டில் வந்திருந்தார். கில் மற்றும் சஹா இணைந்து துவக்கம் தந்தனர் குஜராத் அணிக்கு. பவர்பிளே‌ ஓவர்களில் மும்பை நன்றாகவே பந்து வீசியது. பெஹரண்டாஃப் மிக அற்புதமாக வீசினார். பவர்பிளே உள்ளேயே கில் கொடுத்த கேட்ச்‌ வாய்ப்பை தவறவிட்டார் டிம் டேவிட்.‌ கஷ்டமான கேட்ச் என்று ஆறுதல் சொல்லிக் கொண்டாலும் அதன் பிறகு களத்தில் நடந்தவை எல்லாம் எந்த ஒரு மும்பை ரசிகனும் மீண்டும் நினைத்து கூட பார்க்க மாட்டான்.‌ பவர்பிளேவின் இறுதி ஓவரில் தான் கில் தன் முதல் சிக்ஸை அடித்தார். 'ப்ரின்ஸ்' கில் மும்பையை சல்லி சல்லியாக நொறுக்கப்போகிறார் என அப்போது யாருக்கும் தெரியாது.

பவர்பிளே முடிந்து சில ஓவர்கள் அமைதியாய் இருந்தார் கில். அதன் பின் சூப்பர் ஹீரோ அவதாரம் எடுத்தார் கில். எட்டு ஓவர் முடிவில் 26 பந்துகள் பிடித்து 37 ரன்கள் எடுத்திருந்தார் கில். இந்தத் தொடரில் மும்பையின் சிறந்த பவுலர் என்றால் சாவ்லா தான்.‌ சாவ்லா தான் சிறந்த பவுலர் என்றாலே மும்பை அணியின் மற்ற பவுலர்களின் பெர்பாமன்ஸை நீங்களே கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள். தனது முதல் ஓவரில் மற்றொரு ஓபனர் சஹாவை அவுட்டாக்கி இருந்தார் சாவ்லா. அந்தக் கவலை எல்லாம் இல்லாமல் சாவ்லாவின் ஓவரை பறக்க விட்டு தனது ஆட்டத்தை ஆரம்பித்தார் கில். மற்றொரு ஸ்பின்னர் குமார் கார்த்திகேயா ஓவரிலும் ஒரு சிக்சர் பறந்தது.

Shubman Gill
Shubman GillKunal Patil

இது பொறுக்காமல் தனது புதிய கண்டுபிடிப்பான மாத்வாலை அனுப்பி பார்த்தார் ரோகித். ' 5 ரன் கொடுத்து 5 விக்கெட் எடுத்தவண்டா நானு' மோடில் தான் நேற்றும் களத்தில் இருந்தார் ஆகாஷ் மாத்வால். முதல் ஓவரில் கூட ஏழு ரன்கள் தான் கொடுத்திருந்தார். வின்னர் படத்தில் ரியாஸ் கானிடம் அடி வாங்கி வரும் முத்துக்காளை போல மூன்று சிக்சர்களை கொடுத்து வந்தார் மாத்வால். அடுத்து பந்து வீசிய சாவ்லா, ஓவரில் இரண்டு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என அந்த ஓவரிலும் 20 ரன்கள். தட்டில் விழுந்த இரண்டு தோசைகளை சாப்பிட்டு முடிப்பதற்குள் கில்லின் ஸ்கோர் 48 பந்துகளில் 99 ரன்கள் என மாறியிருந்தது. அதாவது 22 பந்துகளில் 62 ரன்கள்.

மூன்று சிக்சர்கள் கொடுத்த விரக்தியில் 'நான் சின்ன பையன்னு தான அடிச்சுட்ட...எங்க அண்ணன அடி பார்ப்போம்' என ஜோர்டனை கோதாவில் இறக்கி விட்டனர். அவரும் கில்லுக்கு பந்துவீச தயாரானார். இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களே பார்த்து பயப்படும் ஒரே வீரர் என்றால், அது மும்பை இந்தியன்ஸின் ஜோர்டான் தான். "எல்லாம் தெரிஞ்சவனே எண்ணூர் வர போறானே...எதுவும் தெரியாத நம்மாள் எங்க போவப் போறானோ" என நினைத்து முடிக்கும் முன்னரே ஜோர்டனை சல்லி
சல்லியாக நொறுக்கி விட்டார் கில்.‌ மற்றும் ஒரு சதம் கடந்து இந்தத் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையும் படைத்தார் கில். கடந்த நான்கு போட்டிகளில் அவர் அடிக்கும் மூன்றாவது சதம் இது. கிங் கோலி இன்ஸ்டாவில் கில்லுக்கு ஸ்டேட்டஸே வைத்துவிட்டார்.

Hardik Pandya
Hardik Pandya Kunal Patil

நம்மோடு under 19 உலகக்கோப்பை ஆடிய கில் இப்படி அடித்தால் எங்கு நம்மையும் அடிக்க சொல்வார்களோ என பயந்து ஜோர்டன் மேல் மோதி காயம் எனக் கூறி எஸ்கேப் ஆனார் கிஷன். எப்படியோ கில் ஒரு வழியாக 129 ரன்களில் வெளியேறினார்.‌ அதன் பிறகு மும்பை சிறிது இறுக்கிப் பிடிக்க, ரொம்ப நேரமாக களத்தில் நின்ற‌ சாய் சுதர்சனை ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேற்றியது குஜராத். மில்லர் போன்ற வீரர்கள் வெளியே இருந்தாலும், ஜோர்டன் பந்து வீசுவதால் அடித்துப் பழகிக் கொள்ளட்டும் என ரஷித் கானை அனுப்பி வைத்தது குஜராத். 210 ரன்கள் எல்லாம் பத்தாது என நினைத்து ஜோர்டானை அனுப்பி இருப்பார்கள் போல. கடைசி ஓவரில் 19 ரன்கள் கூடி வர குஜராத் 233 ரன்களைக் குவித்தது. பாண்டியா 13 பந்துகளில் 28 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

பெரிய இலக்கை சேஸ் செய்ய வந்த‌ மும்பை அணிக்கு கிஷன் காயம் காரணமாக வதீரா துவக்க வீரராக வந்தார். வந்த வேகத்தில் ஷமி அவரை முதல் ஓவரிலேயே அனுப்பி வைத்தார். கேப்டன் ரோகித்தோ‌ கூட்டத்துக்குள் அடித்தால் யார் மீதும் பட்டு காயம் ஆகிடுமோ என்ற நல்ல நோக்கில் வானத்தில் அடித்து கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஏற்கெனவே பந்து வீசும் போது காயமடைந்த கிரீன் மீண்டும் பாண்டியா பந்தில் அடி வாங்கி வெளியே போனார். என்னப்பா போவோமா என‌ கடைசி விவசாயி தாத்தா போல மும்பை ரசிகர்கள் எழுந்திருக்க, கஷ்டப்படும் மக்களைக் காக்க வரும் கமர்ஷியல் சினிமா ஹீரோ போல வந்தார் திலக். 14 பந்துகள் 43 ரன்கள்.

Tilak Varma
Tilak Varma Kunal Patil

பவர்பிளே வரை மட்டுமே ஆடிய திலக் மும்பையை மீண்டும் ஆட்டத்திற்குள் கொண்டு வந்தார். வெளியே போன கிரீனும் சூர்யாவுடன் இணைந்து சிறப்பாக ஆட, மும்பை அணி சற்று நிமிர்ந்து உட்கார்ந்தது. ஒரு ஓவர்ல 15 ரன் அடிக்கலாம். ஒவ்வொரு ஓவர்லயும் 15 ரன் அடிக்கச் சொன்னா எப்படி பாபா நிலைமையில் தான் மும்பை இந்த போட்டியை எதிர்கொள்ள வேண்டியதிருந்தது. ஒரு பக்கம் விக்கெட்டும் விழ, மற்றொரு பக்கம் தேவைப்படும் ரன்ரேட்டும் எகிறிக்கொண்டு இருந்தது.

Suryakumar Yadav
Suryakumar Yadav Kunal Patil

ஆனால் சில நிமிடங்களிலேயே கிரீனை அவுட் ஆக்கினார்‌ லிட்டில். சூரியகுமார் தனக்கே உரிய முறையில் மைதானத்தில் அத்தனை பக்கங்களிலும் ஆட, டிம் டேவிட் வெளியே இருக்க மும்பை ரசிகர்களுக்கு அப்போது வரை சிறிது நம்பிக்கை இருந்தது.‌ ஆட்டத்தின் 15வது ஓவரில் தன் முதல் ஓவரை வீச வந்தார் மோகித் ஷர்மா. சூரிய அப்போதுதான் அரைசதம் கடந்து ' இஞ்சின் கொதிக்க கொதிக்க இருக்கு' மோடில் அனலாக இருந்தார். இந்த ஓவர்ல எப்படியும் 30 ரன் விழும் மோடில் இருந்தார்கள் மும்பை ரசிகர்கள். எதிர்பார்த்ததைப் போலவவே இரண்டாவது பந்தை டீப் மிட் விக்கெட் பக்கம் சிக்ஸுக்கு அனுப்பினார் சூரியா. ஆனால் எந்த ஷாட் தனக்கு இத்தனை நாள் கை கொடுத்ததோ அதே போன்ற‌ ஷாட் ஒன்றை ஆடி‌ மோகித் பந்தில் போல்டானார்ர் சூரியா.‌ அத்தோடு மும்பையின் வெற்றிக் கனவும் பறிபோனது. அதே ஓவரில் விஷ்ணுவையும் அனுப்பி வைத்தார் மோஹித். ' யய்யா மோஹித்து என்னய்யா நடக்குது இங்க' என குஜராத் ரசிகர்களே ஆச்சர்யப்பட்டார்கள்.

"சைனா மேட் பொல்லார்ட்" டிம் டேவிடை ரஷித் வெளியேற்றி முற்றுப்புள்ளி வைத்தார். 'இதுக்கு மேல ரிவ்யூவ வச்சு என்ன பண்ண போறாங்க ' என நினைத்த டேவிட் அதையும் தன்னோடு எடுத்துக்கொண்டு போனார். கடைசியில் இருந்த மீதி பவுலர்களை மோகித் முடித்து விட மும்பை 172 ரன்களில் ஆல் அவுட் ஆகி 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்று வெளியேறியது மும்பை. 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றி , தன் கேரியரின் பெஸ்ட்டை பதிவு செய்தார் மோஹித் ஷர்மா.

Mohit Sharma
Mohit SharmaKunal Patil

அசுர வெற்றி பெற்ற குஜராத் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. சென்னை அணி இதே மைதானத்தில் தான் குஜராத்தை எதிர்கொள்ள வேண்டும். இந்த தார் ரோடு போல இருக்கும் மைதானத்தில் சென்னையின் ஸ்பின் வேலை செய்து கோப்பை வெல்லுமா அல்லது தொடர்ந்து இரண்டாவது முறையாக குஜராத் கோப்பையை கைப்பற்றுமா என்பது ஞாயிற்றுக்கிழமை தெரிந்துவிடும்.‌

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com