MLC T20| ஒரு ஆளாக 19 சிக்சர்கள்.. 51 பந்தில் 151 ரன்கள்! கெய்லின் உலக சாதனை உடைத்த ஃபின் ஆலன்!
ஐபிஎல் முடிந்ததையொட்டி தற்போது அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் பிரான்சைஸ் டி20 தொடர் தொடங்கியுள்ளது. 34 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் ‘சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், MI நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ், சியாட்டில் ஓர்காஸ், வாஷிங்டன் ஃப்ரீடம்’ முதலிய 6 அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன.
இந்த 6 MLC அணிகளில் நான்கு அணிகள் ஐபிஎல் உரிமையாளர்களின் அணிகளாகும். இதில் MI நியூயார்க் (மும்பை இந்தியன்ஸ்), டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் (சென்னை சூப்பர் கிங்ஸ்), லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) மற்றும் சியாட்டில் ஓர்காஸ் (டெல்லி கேபிடல்ஸ்) ஆகியவை 4 ஐபிஎல் உரிமையாளர்களால் நடத்தப்பட்டுவருகிறது.
இந்நிலையில் 3வது மேஜர் லீக் சீசனானது நேற்று அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் தொடங்கியது. முதல் போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
51 பந்தில் 151 ரன்கள் விளாசிய ஃபின் ஆலன்..
விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய ஃபின் ஆலன் தன் வாழ்நாளின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு இன்னிங்ஸில் 19 சிக்சர்கள், 5 சிக்சர்கள் என பறக்கவிட்ட ஃபின் ஆலன் 51 பந்தில் 151 ரன்களை குவித்தார்.
34 பந்தில் சதமடித்த அவரின் ஆட்டம் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் அடிக்கப்பட்ட அதிவேகமாக சதமாக பதிவுசெய்யப்பட்டது. 40 பந்தில் சதமடித்து முந்தைய சாதனையை படைத்திருந்த நிக்கோலஸ் பூரன் ரெக்கார்டை முறியடித்தார் ஃபின் ஆலன்.
ஃபின் ஆலன் அதிரடியால் 20 ஓவரில் 269 ரன்களை குவித்தது சான் பிரான்சிஸ்கோ அணி.
270 ரன்கள் இலக்கை துரத்திய வாஷிங்டன் ஃப்ரீடம் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா 5 சிக்சர்களை பறக்கவிட, மறுமுனையில் இருந்த மிட்செல் ஓவன் 3 சிக்சர்களை விரட்டினார். இருவரின் அதிரடியால் 5 ஓவர்களுக்கு 79 ரன்களை எட்டியது வாஷிங்டன் அணி.
ஆனால் ஹாரிஸ் ராஃப் மற்றும் ஹஸ்ஸன் கான் இருவரின் அபாரமான பந்துவீச்சால் 13.1 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்னில் சுருண்டது வாஷிங்டன் அணி. 123 ரன்களில் பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்தது சான் பிரான்சிஸ்கோ அணி. ஃபின் ஆலன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கிறிஸ் கெய்ல் உலக சாதனை முறியடிப்பு..
நடந்த போட்டியில் 19 சிக்சர்களை விளாசிய ஃபின் ஆலன், டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்சர்கள் அடித்திருந்த கிறிஸ் கெய்ல் (18) மற்றும் எஸ்டோனியாவின் சாஹில் சவுகான் (18) இருவரின் சாதனையையும் முறியடித்து புதிய உலக சாதனை படைத்தார்.
அதுமட்டுமில்லாமல் 49 பந்தில் 150 ரன்கள் அடித்த ஃபின் ஆலன், அதிவேகமாக 150 ரன்களை அடித்த டி20 கிரிக்கெட்டர் என்ற சாதனையையும் படைத்து அசத்தினார்.