லண்டன் | ரோஜர் பெடரரின் சாதனையை முறியடித்த ஜோகோவிச்.. புதிய மைல்கல்லை எட்டி அசத்தல்!
செய்தியாளர்: தினேஷ் குகன்
டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னர்களில் ஒருவரான நோவாக் ஜோகோவிச், விம்பிள்டன் காலிறுதிப் போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் ரோஜர் பெடரரின் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் காலிறுதிச் சுற்றில், 22 ஆவது தரநிலை வீரரான இத்தாலியை சேர்ந்த ஃபிளவியோ கோபோலியை செர்பிய வீரர் ஜோகோவிச் எதிர்கொண்டார். ஆட்ட முடிவில் 6-7, 6-2, 7-5, 6-4 என்ற செட் கணக்கில் கோபோலியை வீழ்த்தினார். இந்த வெற்றியின்மூலம், 14ஆவது முறையாக விம்பிள்டன் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி, புதிய சாதனையை படைத்துள்ளார் ஜோகோவிச். இதற்கு முன்னர், பெடரர் 13 முறை விம்பிள்டன் அரையிறுதிப் போட்டிகளில் விளையாடி, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அதிக முறை அரையிறுதிக்கு முன்னேறிய டென்னிஸ் வீரர் என்ற சாதனையை பெற்றிருந்தார்.
தற்போது, அவரின் சாதனையை ஜோகோவிச் முறியடித்துள்ளார். இதுமட்டுமின்றி, தனது ஒட்டுமொத்த கிராண்ட் ஸ்லாம் அரையிறுதிப் போட்டிகளின் எண்ணிக்கையை 52 ஆக உயர்த்தி, ஆண்கள் டென்னிஸ் வரலாற்றில் சொந்த சாதனையை முறியடித்துள்ளார் ஜோகோவிச். ஏற்கனவே ஏழு விம்பிள்டன் பட்டங்களை வென்றுள்ள ஜோகோவிச், எட்டு விம்பிள்டன் பட்டங்களை வென்றுள்ள பெடரரின் சாதனையை சமன் செய்யும் முனைப்பில் உள்ளார். அரையிறுதிச் சுற்றில் உலகின் முதல்நிலை வீரரான ஜானிக் சின்னருடன் பலப்பரீட்சை மேற்கொள்ள இருக்கும் நிலையில், தனது 25ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை நோவாக் ஜோகோவிச் வெல்ல வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் ஒரே எதிர்பார்ப்பாக உள்ளது.