8 பேர் டக் அவுட்.. 2 ரன்னில் ஆல் அவுட்.. மோசமான சாதனை படைத்த அணி! ஒரே மேட்சில் இவ்ளோ ஆச்சர்யமா!
உலகம் முழுவதும் கிரிக்கெட்டிற்கான ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கிரிக்கெட்டின் வடிவங்களும் மாற்றம் பெற்று வருகின்றன. இதனால், பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், ஓர் அணி வெறும் 2 ரன்னில் ஆல் அவுட் ஆகி இருப்பது அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இங்கிலாந்தில் மிடில்செக்ஸ் கவுண்டி லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நார்த் லண்டன் சிசி மற்றும் ரிச்மாண்ட் ஆகிய அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. 45 ஓவர்கள் கொண்ட இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த நார்த் லண்டன் சிசி அணி, நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 426 ரன்கள் எடுத்தது. இதன் தொடக்க வீரர் டான் சிம்மன்ஸ்140 ரன்கள் விளாசினார்.
இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால் வைடுகள் வழியாக 63 ரன்கள் கிடைக்கப் பெற்றன. அதேபோல், நோ பால் வழியாக 16 ரன்களும் கிடைத்தன.
பின்னர் மிகக் கடினமான இலக்கை நோக்கி ஆடிய ரிச்மாண்ட் அணி, நார்த் லண்டன் அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 5.4 ஓவர்களில் 2 ரன்னுக்குச் சுருண்டது. இதில் நான்காவதாக களமிறங்கிய பேட்டர் மட்டும் ஒரு ரன் எடுத்தார். மற்றொரு ரன் வைடு மூலம் கிடைத்தது. மற்ற 8 பேட்டர்களும் டக் அவுட் முறையில் பெவிலியன் திரும்பியிருந்தனர். ஒருவர் பேட் செய்யவில்லை வெறும் 2 ரன்னில் அவுட்டான அணி குறித்து பயனர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். (https://middlesexccl.play-cricket.com/website/results/6754456 - ஸ்கோர் போர்டு)
முதல் தர கிரிக்கெட்டில் மிகக் குறைந்த ஸ்கோரைப் பதிவு செய்த சாதனை தி பி'ஸ் அணிக்கு சொந்தமானது, அவர்கள் ஜூன் 12, 1810 அன்று லார்ட்ஸில் இங்கிலாந்து அணியால் ஆறு ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். வெஸ்ட் இண்டீஸ் 19 வயதுக்குட்பட்ட அணி மொத்தம் 18 ரன்கள் மட்டுமே எடுத்து லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் மிகக் குறைந்த ஸ்கோரைக் கொண்டுள்ளது. டி20 கிரிக்கெட்டில், ஐவரி கோஸ்ட் அணி ஏழு ரன்களுடன் மிகக் குறைந்த ஸ்கோரைப் பதிவு செய்த ஒரு சங்கடமான சாதனையைப் படைத்துள்ளது.