Ind Vs Eng Test.. ஆய்வுக்குச் செல்லும் ட்யூக் பந்துகள்!
இந்திய-இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் ட்யூக் பந்துகளின் தரம் குறித்து ஆய்வு செய்து தேவையான மாற்றங்கள் செய்யப்படும் என அப்பந்தினை தயாரிக்கும் பிரிட்டிஷ் கிரிக்கெட் பந்துகள் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் பயன்படுத்தப்பட்ட பந்துகள் விரைவில் நெகிழ்வுற்று வடிவம் குலைந்துபோவதாக வீரர்கள் குற்றம்சாட்டினர். இதனால் பெரும்பாலும் 30 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் பந்துகளை மாற்றவேண்டிய சூழல் ஏற்பட்டது.
இத்தகைய சூழலில் போட்டிகளில் பயன்படுத்தப்பட்ட பந்துகளை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து பெற்று ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும், குறைபாடுகள் கண்டறியப்பட்டு அவற்றை சீர்செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பந்தை தயாரிக்கும் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். டெஸ்ட் போட்டிகளை நடத்தும் நாடுகளே எவ்வகை பந்துகளை பயன்படுத்துவது என தீர்மானிக்கின்றன. குறிப்பாக இங்கிலாந்தில் ட்யூக் பந்துகள், இந்தியாவில் எஸ்ஜி பந்துகள், ஆஸ்திரேலியாவில் குக்கபுரா பந்துகள் போட்டிகளில் பயன்படுத்தப்படுகின்றன.