"நம்பிக்கை குறையும்போது ஒளிந்துகொள்ள இடம் இல்லை" - ஃபாஃப் டு ப்ளெஸி

சில நேரங்களில் நீங்கள் அடுத்தடுத்து தோற்கும்போது, தலை வெடித்துவிடுவது போல் தோன்றும்.
Faf du Plessis - Virat Kohli
Faf du Plessis - Virat KohliPTI

திங்கள் கிழமை இரவு நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத்துடன் சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதின. டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டுப்ளெஸி பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் அணி மிரட்டலாக விளையாடியது. ஆரம்பத்திலிருந்தே அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட் இருவரும் அடித்து நொறுக்கினார்கள். 39 பந்துகளில் சதமடித்து மிரட்டினார் டிராவிஸ் ஹெட். அதன்பிறகு கிளாசன், அப்துல் சமத், மார்க்ரம் என அனைவரும் அதிரடியாக ஆட, 20 ஓவர்கள் முடிவில் 287 ரன்கள் விளாசியது. ஐபிஎல் வரலாற்றில் இதுவே மிகப் பெரிய ஸ்கோராகவும் பதிவானது. அடுத்து விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் கடுமையாகப் போராடியது. ஆனால் அவர்களால் இறுதியில் 262 ரன்களே எடுக்க முடிந்தது. இறுதியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ்.

இந்த சீசனில் இதுவரை விளையாடியிருக்கும் 7 போட்டிகளில் ஆறில் தோற்றிருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ். அவர்களின் மிகமோசமான சீசனாக இது மாறிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து பல மாற்றங்கள் செய்தும் எதுவுமே அவர்களுக்குப் பலன் தரவில்லை. இந்நிலையில், போட்டி முடிந்ததும் பேசிய அந்த அணியின் கேப்டன் ஃபாஃப் டு ப்ளெஸி, தன் அணியிடம் நம்பிக்கை குறைவாகக் காணப்படுவதாகக் கூறினார்.

"இது மிகவும் கடினமாக இருக்கிறது. நாங்கள் ஒருசில விஷயங்கள் முயற்சி செய்து பார்த்தோம். சில வித்தியாசமான விஷயங்களை முயற்சி செய்தோம். ஆனால் அவை எதுவும் பயன் தரவில்லை. அணிக்குள் இருக்கும் நம்பிக்கை குறைவாக இருப்பது தான் காரணம் என்று நினைக்கிறேன். நம்பிக்கை குறைவாக இருக்கும்போது நீங்கள் ஒளிந்துகொள்வதற்கு இடம் இருக்காது" என்று கூறினார்.

இந்த சீசனில் இதுவரை 4 முறை 250+ ஸ்கோர் அடிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ச்சியான பெரிய ஸ்கோர்கள் பற்றி கேட்டதற்கு, "இந்த ஆட்டம் மிகவும் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. அதுவும் பேட்டர்களுக்கு சாதகமாகிக்கொண்டிருக்கிறது. பௌலர்கள் மிகவும் சிறப்பாக செயல்படவில்லை என்றில் அது அவர்களுக்கு மிகவும் கடினமாகிவிடும். அதிலும் குறிப்பாக இதுபோன்ற ஆடுகளங்களில் 5 பௌலர்களை மட்டும் வைத்து விளையாடுவது கடினம் தான். இன்னும் நிறைய விஷயங்களை நாங்கள் முயற்சி செய்து பார்க்கப்போகிறோம்.

இதில் மிகவும் முக்கியமான விஷயம் என்னவெனில் நீங்கள் விரைவில் புத்துணர்வோடு வரவேண்டும். இது உளவியல் சார்ந்தது. சில நேரங்களில் நீங்கள் அடுத்தடுத்து தோற்கும்போது, தலை வெடித்துவிடுவது போல் தோன்றும். அதில் இருந்து விலகி இருப்பதும், அடுத்த சவாலுக்குத் தயாராவதும் மிகவும் முக்கியம். அது இப்போதைக்கு மிகவும் கடினமான விஷயமாகவே தோன்றுகிறது. ஆனால், நாங்கள் மீண்டுவிட்ட பிறகு நிச்சயம் 100% உழைப்பைக் கொடுப்போம்" என்று கூறினார் ஃபாஃப்.

மிகவும் கடினமான சேஸில் ஆர்சிபி 262 ரன்கள் குவித்தது. அவர்களின் அந்த போராட்டத்தைப் பற்றிப் பேசிய டு ப்ளெஸி, "இலக்குக்கு மிகவும் அருகில் வந்தது மிகவும் சிறப்பான விஷயம். பேட்டிங்கிலும் நாங்கள் சில ஏரியாக்களில் முன்னேற வேண்டிய தேவை இருக்கிறது. பேட்டிங் யூனிட்டாக நாங்கள் ஒருசில தவறுகளை சரிசெய்யவேண்டும். பவர்பிளேவுக்குப் பிறகு ஒரு சிறு சரிவு ஏற்பட்டது. அதை நாங்கள் சரிசெய்யவேண்டும் என்று நினைக்கிறேன். இனி ரன்ரேட் கீழே குறையாத அளவுக்கு நாங்கள் பார்த்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் ஆட்டம் பெருமளவு பரிணாமம் அடைந்துவிட்டது. ஆனால் அணி வீரர்கள் கடைசி வரை விட்டுக் கொடுக்காமல் போராடியது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இதுபோன்ற மிகப் பெரிய சேஸ்களில் அணிகள் சீட்டுக் கட்டுகள் போல் சரிவதை பெரும்பாலும் பார்த்திருக்கிறோம். அப்படி இல்லாமல், போராடியது சந்தோஷமாக இருக்கிறது. ஆனால், பந்துவீச்சைப் பொறுத்தவரை நாங்கள் 30-40 ரன்கள் அதிகமாகக் கொடுத்துவிட்டோம்" என்று கூறினார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி தங்களின் அடுத்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ஏப்ரல் 21ம் தேதி ஈடன் கார்டனில் மோதுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com