தோனியின் அந்த கண்ணீர் ஒட்டுமொத்த மன அழுத்ததிற்கானது! வலிகளை மீறி அன்பால் எழுதப்பட்ட கவிதை இது!

ஒருவேளை சென்னை அணி இந்த இறுதிப்போட்டியில் தோற்க நேர்ந்திருந்தால், இத்தனை காலங்களாய் சுமந்துவந்த அழுத்தத்தை தோனி கண்ணீராக இறக்கி வைத்திருக்க மாட்டார். மாறாக தன்னுடைய அணி உடைந்திடாமல் இருக்கவேண்டுமென மீண்டும் தன்னை இறுக்கமாகவே காட்டியிருப்பார்.
CSK-Dhoni
CSK-DhoniTwitter

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும்-ஒரு சிஎஸ்கே ரசிகனுக்கும் இடையிலான பிணைப்பை எங்கிருந்து தொடங்குவது. தான் விளையாடும் அணிக்காக ஒவ்வொரு சீசனிலும் கோப்பையை வெல்ல நினைக்கும் ஒரு கேப்டனுக்கும், அந்த முயற்சியில் தோல்வியை சந்தித்தாலும் அவன் மீது அதீத அன்பை மட்டுமே காட்டிவரும் ஒரு ரசிகனுக்கும் இடையிலான தீராத காதலாக தான் இந்த பந்தத்தை வரையறுக்க முடியும்.

ஒரு தலைவனாக(தோனி), ஒரு சென்னை அணி வீரனாக இருக்கும் ஒவ்வொருக்காகவும் தங்களுடைய அன்பை ஒருபோதும் வெளிக்காட்ட தவறியதில்லை சென்னை ரசிகர்கள். ஆனால் ரசிகர்களின் அந்த அன்பிற்கு ஈடாக தோனி எந்தளவு தன்னுடைய அணி மீதும், ரசிகர்கள் மீதும் அன்பை வைத்திருக்கிறார் தெரியுமா?. இந்த கேள்வியை ஒவ்வொரு ரசிகனிடமும் கேட்டால், அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் ”எங்க தல எதும் செய்ய வேண்டாம் வந்து நின்றாலே போதும்” என்பார்கள் சென்னை ரசிகர்கள். இதை அனைத்தையும் மீறி தோனி தன்னுடய ரசிகர்களின் மீது வைத்திருக்கும் அன்பின் அளவானது அலாதியானது.

10 முறை பைனல் சென்றும் 5 முறை தோல்வி! 2 முறை தொடரைவிட்டே வெளியேற்றம்! ஒரு கேப்டனாக எந்தளவு வலி கொடுத்திருக்கும்!

ஐபிஎல் தொடர், அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்றாலே “மற்ற அணிகள் அனைத்தும் சேர்ந்து பைனலில் சிஎஸ்கேவிடம் மோத விளையாடுவார்கள்” என்ற இந்த வசனம் மட்டும், எப்போதும் ஏதோ சினிமா மாஸ் டயலாக்கை போல ஒவ்வொரு சீசனிலும் சென்னை ரசிகர்களால் சொல்லப்படும். இதெல்லாம் சரி தான், ஆனால் 5 முறை பைனலில் தோல்வியுற்ற ஒரு கேப்டனின் மனக்குமுறலும், அதீத மனஅழுத்தமும் எந்தளவு இருந்திருக்கும் என்று நினைத்து பார்த்திருப்போமா என்றால், அதுஒரு அரிதான பக்கமாகவே நம் எல்லோருக்கும் இருந்திருக்கும்.

Dhoni-RSP
Dhoni-RSPTwitter

மாறாக 2 ஆண்டுகள் தொடரை விட்டே தன்னுடைய அணி வெளியேற, மற்றொரு அணிக்கு செல்லும் ஒரு வெற்றி கேப்டன், அந்த அணி நிர்வாகத்தால் அவமானம் செய்யப்பட்டு, கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, பெரிய வலிமிகுதியால் 2 வருடத்தை கடக்கிறார். எல்லா மனக்கசப்புகளையும் வலிகளையும் கடந்து வந்து தன்னுடைய பழைய அணியை மீண்டும் கட்டமைக்கும் போது, ”ஐயய்யோ இவங்கள எல்லாம் டீம்ல எடுத்து என்ன பண்ண போறிங்க, இதெல்லாம் வயசான டீம், அப்பா ஆர்மி(Daddy's Army), இவர்களை வைத்து எப்படி கோப்பையை அடிக்க முடியும்” என்ற ஏச்சுபேச்சுகளையும், நக்கல் நையாண்டியை எல்லாம் சந்திக்கிறார். வெளிவட்டாரம் என்பதையெல்லாம் தாண்டி, சொந்த ரசிகர்களால் கூட ட்ரோல் செய்யப்படுகிறார். அத்தனை ட்ரோல்களுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில், நடப்பு சாம்பியன் அணியான மும்பை அணிக்கு எதிராக வெல்லவே முடியாத இடத்தில் இருந்த போட்டியை 1 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுகாட்டி அசத்துகிறது, அந்த Daddy's Army.

CSK
CSKTwitter

சிஎஸ்கே அணியெல்லாம் அவ்வளவு தான், ப்ளே ஆஃப் சுற்றுக்கு கூட வரமுடியாது என்று பல்வேறு முன்னாள் வீரர்கள் கூறிய நிலையில், அதை அத்தனையும் உடைத்து 9 போட்டிகளில் வென்று 2ஆவது இடத்தை பிடித்த சென்னை அணி, ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுகிறது. அதுமட்டுமல்லாமல் 2018 ஐபிஎல் தொடரின் நம்பர் 1 அணியாக இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத்திற்கு எதிராக, மோதிய 4 போட்டிகளிலும் வெற்றிப்பெற்று கோப்பையை வென்று அசத்துகிறது. அதுவரை தன்னுடைய அவமானங்கள், வலிகள், ரணங்கள் அத்தனையும் வெளிக்காட்டாமல் தன் அணிக்காகவும், ரசிகர்களுக்காகவும் இறுக்கமாக இருந்த கேப்டன் எம் எஸ் தோனி, இரவு உணவு ஒன்றின் போது கண்ணீர் விட்டு அழுகிறார். அவர் அப்படி அழுது நாங்கள் பார்த்ததே இல்லை என்று முன்னாள் சிஎஸ்கே வீரர்களான ஹர்பஜன் சிங் மற்றும் இம்ரான் தாஹிர் இருவரும் சமீபத்தில் கூறியிருந்தனர். அவர் தன் ரசிகர்களை எந்தளவு நேசிக்கிறார் என்பதற்கு இதுவே ஒரு சாட்சியாகும்.

அணிக்குள் என்ன நடந்தாலும் அணியை அரவணைத்து செல்லும் கேப்டன்!

ஐபிஎல் ஏலத்தில் என்ன செய்யப்போகிறீர்கள் என்று சென்னை அணியின் சிஇஒ-விடம் கேட்டால், எல்லாம் தல தோனி பார்த்துப்பார் என்று தான் அவருடைய பதில் வரும். தோனி நம்பிக்கை வைக்கும் வீரர்கள், ஏதாவது ஒரு போட்டியில் நிச்சயம் மேட்ச் வின்னராக மாறிவிடுவார்கள். ”என்ன தான் பன்றாருனே தெரியல பா, மத்த டீம்ல விளையாடாதவங்கலாம் சிஎஸ்கே அணிக்கு போனா நல்லா விளையாடுறாங்க” என்று சொல்லாத ஆட்களே இல்லை. அதற்கு காரணம் அவர் வீரர்கள் மீது வைக்கும் நம்பிக்கைதான். ஒரு வீரர் எனக்கு தொடர்ச்சியாகவெல்லாம் விளையாடி தரத்தேவையில்லை, அவருடைய ஆட்டம் வெளிப்படும் வரை நான் அவருக்கு வாய்ப்பு வழங்கப்போகிறேன், அவருக்கான ஆட்டத்தில் அவர் வெற்றியை தேடித்தந்தால் மட்டும் போதும் என்று தொடர்ந்து வாய்ப்பை வழங்குகிறார் தோனி.

Rayudu
RayuduTwitter

யாரும் அதுவரை நம்மை மதிக்கவில்லை. ஆனால், ஒருவர் நம்மீது முழு நம்பிக்கை வைத்து, நாம் சரியாக விளையாடாத போதும், இது ஆட்டத்தின் ஒருபகுதி தான் அவர் திரும்ப வருவார் என்று தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கும் போது, நம்மிடம் இருக்கும் ஆற்றலானது அதிகப்படியாய் வெளிப்படும் அல்லவா. அந்த ஃபார்முலாவை தான் தோனி மந்திரமாகவே பயன்படுத்தி வருகிறார். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அம்பத்தி ராயுடு, தீபக் சாஹர், வாட்சன், இம்ரான் தாஹிர், மொயின் அலி, உத்தப்பா, ரஹானே போன்ற வீரர்கள் அணிக்காக சரியான நேரத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

Ravindra Jadeja
Ravindra JadejaPT Desk

இதையெல்லாம் தாண்டி ஜடேஜா உடனான கேப்டன்சி மாற்றத்திற்கு பிறகு, அணிக்குள்ளான பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. இதுவரை அணிக்காக தன் அனைத்து உழைப்பையும் போட்ட ஒரு வீரரை வெளியேற விடக்கூடாது என்று அணிக்குள் நடந்த சர்ச்சையான விசயங்களை எல்லாம் சாதூர்யமாக கையாண்ட எம்எஸ் தோனி, தற்போது அணியை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தியிருக்கிறார். அதும் 2023 ஐபிஎல் கோப்பையை வென்ற போது ஜடேஜாவை தோளில் தூக்கி அழுததெல்லாம், அவர் அணி மீதும், அணி வீரர்கள் மீதும் வைத்திருக்கும் அன்பை மட்டுமே காட்டுகிறது.

அணி வீரர்களின் குடும்பத்தோடு நெருக்கமாக செயல்படும் நிர்வாகம்!

இது எல்லாவற்றையும் மீறி தோனி வீரர்களின் குடும்பத்தோடு எப்படி நெருக்கமாக செயல்படுகிறார் என்பது ஆச்சரியமான ஒன்றாகவே இருக்கிறது. அதன் மூலம் வீரர்களின் நம்பிக்கையை எந்தளவு அதிகமாக்குகிறார் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் பதிரானாவை அவர் கையாண்ட விதம் தான்.

matheesha pathirana
matheesha pathiranacsk twitter page

சமீபத்தில் சென்னை அணியின் இளம் வீரரான பதிரானவின் குடும்பத்தை நேரில் சந்தித்த தோனி, பதிரானாவிற்கான நல்ல வார்த்தையை அவரின் குடும்பத்தாரிடம் வெளிப்படுத்தினார். ஒரு இளம் வீரர் தன்னுடைய திறமை மீதான நம்பிக்கையை அதிகமாய் பற்றிக்கொள்ள இதுபோன்ற செயல்கள் பெரிய உதவியாக இருக்கின்றன.

ஓய்விற்கான வயதின் போதும் அதீத அன்பு! ரசிகர்களுக்கும் தோனிக்குமான பாச போராட்டம்!

ஓய்விற்கான வயதை எட்டிய நிலையில், ஒருவேளை இதுதான் தோனிக்கான கடைசி ஐபிஎல் தொடராக இருக்குமோ என்ற பதட்டத்தின் காரணமாக, 2023 ஐபிஎல் தொடர் முழுக்க இந்திய ரசிகர்கள் தோனியை கொண்டாடித்தீர்த்தனர். ரசிகர்கள் இன்னும் அந்த பழைய தோனியை எதிர்நோக்குகிறார்கள் என்று புரிந்துகொண்ட எம் எஸ் தோனி, பெரிய பேட்டிங் பார்ம் இல்லையென்றாலும் அவர்களுக்காக இறுதியில் களமிறங்கி 2-3 சிக்சர்களை பறக்கவிட்டு நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.

CSK Fans
CSK FansTwitter

தோனியின் இந்த அன்பிற்கு தங்களுடைய பதில் அன்பாக, தோனி களத்திற்கு வந்தாலே வானமே அதிருமளவு விமானத்தின் சத்தத்தை விட 120 டெசிபல் அளவிற்கு கோஷத்தை எழுப்பி ஆரவாரம் செய்தனர் ரசிகர்கள். இது எல்லாவற்றையும் மீறி தோனிக்காக ரசிகர்கள் செய்த ஒரு செயலானது காண்போரை கூட கண்கலங்க வைத்தது. தோனியின் கடைசி போட்டியாக இருக்கும் என்ற உணர்ச்சிப்பெருக்கில், தன் தலைவனை பார்க்கவேண்டும் என்று 2023 ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு குஜராத்திற்கு படையெடுத்தனர் ரசிகர்கள். இந்நிலையில் மழையின் காரணமாக போட்டி மறுநாளுக்கு மாற்றப்பட, தோனியின் நம்பர் 7 பதித்த டீசர்ட்டோடு ரயில்வே ஸ்டேசனில் படத்துறங்கி, மறுநாள் போட்டிக்கு தோனியை பார்க்க வந்தனர். அகமதாபாத் மைதானமே மஞ்சள் வண்ணமானது. ஏதோ ஹோம் கிரண்டில் மேட்ச் நடப்பதுபோல் ரசிகர்கள் தங்கள் வருகையால் அதனை மாற்றிக் காட்டினர். ஆட்டத்தின் போது கேமிரா திரும்பும் திசையெங்கும் மஞ்சள் வண்ணமாகவே காட்சி அளித்தது. இமாலய இலக்கு என்ற போதும் சென்னை அணி பேட்டிங் செய்யும் போது தங்களது ஆரவாரத்தால் அப்படியொரு உற்சாகம் கொடுத்தனர் ரசிகர்கள். ஹர்திக் பாண்டியாவின் பேட்டியில் கூட இதனை கவனித்திருக்கலாம். ஒரு மஞ்சள் கடலுக்கு எதிராகவே நாங்கள் போராட வேண்டியிருந்தது என்று அவர் வியப்பாக கூறியிருப்பார்.

Dhoni
DhoniTwitter

ரசிகர்களின் இந்த அன்பிற்கு என்ன கைமாறு செய்யப்போகிறோம் என்று மனம் நொந்த எம்எஸ் தோனி, இறுதிப்போட்டியில் தோல்வியின் விளிம்பிற்கு சென்னை அணி செல்ல, போட்டியை கூட பார்க்க முடியாமல் தலையை குணிந்து அமர்ந்துகொண்டு, கண்களை மூடிக்கொண்டார். ஒருவேளை தோற்றுவிட்டால் தன்னை பார்க்கவும், சிஎஸ்கே அணி கோப்பை வெல்வதை பார்க்கவும் வந்த ரசிகர்களை எப்படி எதிர்கொள்வேன் என்று நினைத்தாரோ தெரியவில்லை. போட்டியை ஜடேஜா வென்றுகொடுத்த பிறகு, அவரையும் மீறி தோனியின் கண்கள் கண்ணீர் குளமாக மாறியது. தோனியின் அழுகையை பார்த்த அத்தனை ரசிகர்களின் கண்களிலும் நிச்சயம் ஈரம் பூத்திருக்கும்.

DHONI
DHONITwitter

அத்தனையும் மீறி இரவு 3 மணியளவில் கூட மைதானத்தை விட்டு வெளியேறாமல் தோனி என்ன முடிவை சொல்லப்போகிறார் என்று காத்திருந்தனர் ரசிகர்கள். தொடர்ந்து விளையாடுவது கடினமான விசயம் தான், ஆனால் ரசிகர்களின் அன்பிற்காக இன்னொரு சீசனில் விளையாட முயற்சி செய்வேன் என்று கூறினார் தோனி. வெற்றிக் கோப்பையை, ஓய்வை அறிவித்துவிட்ட ராயுடு, வெற்றி நாயகன் ஜடேஜாவின் கைகளிலும், இளைஞர்களின் கையிலும் கொடுத்துவிட்டு எப்போதும் போல ஓரமாய் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் தல. அடுத்த சீசனில் மீண்டும் வருகிறாரோ இல்லையோ தோனியின் இந்த கோட்டையானாது, நிச்சயம் அன்பால் நிறைந்து வழிந்துவிட்டது.

தோனியின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கும் வீரர்கள்.. இது எப்படி சாத்தியமானது? 

ஜடேஜா எல்லைக் கோட்டிற்கு அந்த பரபரப்பான கடைசி பந்தினை அனுப்பி வெற்றியை உறுதி செய்த பிறகு நடந்த ஒவ்வொரு நிகழ்வையும் கவனத்தால் புரியும் வீரர்கள் எந்த அளவிற்கு தோனி மீது அன்பு வைத்திருக்கிறார்கள் என்று. அதற்கு ஒரு சின்ன உதாரணத்தை பார்க்கலாம்.. வெற்றி உறுதியான அடுத்த நொடியே சிஎஸ்கே வீரர்கள், நிர்வாகிகள் என ஒரு பட்டாளமே மைதானத்திற்கு ஓடுகிறார்கள். டக் அவுட்டில் இருந்த எல்லா வீரர்களையும் போல மொயின் அலியும் உள்ளே ஓடத்தான் எத்தனித்தார். சற்றே சுதாரித்துக் கொண்டு அவர் திரும்பினார். ஆம், தனது ஆஸ்தான கேப்டனை நோக்கி அவர் வந்தார். இது உண்மையில் மிகவும் நெகிழ்ச்சியான விஷயம்.

தனது திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை, தன்னை தோனிக்காக அவுட் ஆக சொல்கிறார்கள் என வெளிப்படையாக சொல்லியிருந்தாலும் வெற்றி நாயகனாக ஜொலித்த ஜடேஜா ’இந்த வெற்றி கேப்டன் தோனிக்கே சமர்ப்பணம்’ எல்லா சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். அதோடு தன் அன்பையின் ட்விட்டர் புரபைலில் வெளிப்படுத்தி இருந்தார். வெற்றிக் களப்பில் ஜடஜா தோனியை நோக்கி ஓடி வந்ததை தோனி அவரை அரவணைத்து தூக்கியதையும் இன்னும் பல வருடங்கள் அவரது ரசிகர்கள் மனதில் பசுமையான நினைவுகளாக வைத்திருப்பார்கள்.

தோனியுடன் இளம் வீரர்களுக்கு இருக்கும் இந்த பிணப்பை புரிந்து கொள்ள தீபக் சாஹர் சொன்ன அந்த வார்த்தைகளை இங்கு நினைவு கூரலாம். “அணியில் நாங்கள் எல்லோரும் டின்னர் சாப்பிட காத்துக் கொண்டிருந்தோம். சீனியர் வீரர்கள் ஒருபுறம் அமர்ந்திருந்தார்கள். இளம் வீரர்கள் நாங்கள் ஒருபுறம் அமர்ந்திருதோம். உள்ளே வந்த தோனி நேராக எங்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்” என்று தீபக் சாஹர் கூறிய வார்த்தைகள் இளம் வீரர்களுடன் நெருக்கத்தை உருவாக்க தோனி எடுத்துக் கொள்ளும் மெனக்கெடல்களை நம்மால் புரிந்து கொள்ள முடியும். தோனி முதலில் உடைப்பதே ஒருவரிடம் இருக்கும் அந்த தயக்கத்தையும், லேசான பதட்டத்தையும் தன். வீரர்களை அவர்களது இயல்பு நிலையில் வைத்திருக்க தோனி செய்யும் அந்த மெனக்கெடல்கள்தான் இந்த அளவிற்கு ஒரு பிணைப்பை அவர்களுடன் உருவாக்கி வைத்திருக்கிறது. நிச்சயம் ஒரு நாளில் நடந்திட முடியாது. ஒரு பக்குவப்பட்ட பண்பாக தோனி அதனை வளர்த்துக் கொண்டார். காலங்கள் செல்ல செல்ல ஒரு கனிந்த பழம் போல் அவரது அனுபவம் மாறியது.

தன்னுடைய பேட்டிங் ஏன் ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது என்பதை மிக அழகாக போட்டிக்கு பிறகான பேச்சில் விவரித்திருப்பார். "நான் ஆடும் கிரிக்கெட் மிகவும் எளிமையானது. அதில் பெரிய அளவுக்கான ஆர்த்தோடாக்ஸ் ஷாட்கள் எல்லாம் இருக்காது. அதை எல்லோராலும் ஆட முடியும். ஸ்டேடியத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் என்னைப் போல ஆட முடியும் என நம்புகிறார்கள். அதனால் என்னை எளிதில் தொடர்புப்படுத்தி கொள்கிறார்கள் என நினைக்கிறேன்” என்றார்.

ரசிகர்களுடான பிணைப்பை விவரிப்பதற்காக அவர் உதிர்த்த இந்த வார்த்தைகள், தன்னுடைய பேட்டிங் மீது எந்த வித கர்வமும் கொள்ளாமல் மிக எளிமையாக தோனி இருக்கிறார் என்பதையே காட்டுகிறது. ஒரு நாள் போட்டியில் 10,000 ரன்களை கடந்த தோனி, தான் ஒன்றும் ஆர்த்தோடக்ஸ் பேட்டிங் திறன் கொண்டவர் இல்லை என்று சொல்கிறார். அதன்மூலம் தன்னைப் போலவே ரசிகர்களாலும் திறமையை வெளிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை அவர் ஆழமாக விதைக்கிறார்.

dhoni
dhoniKunal Patil

இதுதான் தோனி.. அவர் ரசிகர்களுடன், வீரர்களுடன் நெருக்கமாக இருப்பதற்கு அவருடைய இந்த பக்குவப்பட்ட தலைமைக்கான, ஒரு நல்ல மனிதனுக்கான இயல்பே காரணமாக இருக்கிறது. மற்றவர்களை புரிந்து கொள்ள அவர்களோடு நீண்ட நாட்களுக்கு அன்போடு உறவை பேணிக்காக்க தோனியின் இந்த பண்பு ஒவ்வொருவரும் தனதாக்கிக் கொள்ள வேண்டியதே!!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com