முழங்கால் காயத்தால் அவதி.. தாங்கி தாங்கி நடந்த தோனி.. ஃபிளெமிங் கொடுத்த விளக்கம்!

“அந்தக் காயம் அவருக்கு சற்று தடையாகவே இருக்கிறது”
தோனி, ஜடேஜா,
தோனி, ஜடேஜா,ட்விட்டர்

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற 17-வது லீக் போட்டியில், சென்னை அணியை அதன் சொந்த மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில், கடந்த 2008-ம் ஆண்டுக்குப் பிறகு தோற்கடித்தது. பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ், தீபக் சாஹர் பங்கேற்கவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில், வலது முழங்கால் பகுதியில் காயங்களுடன் ரத்தம் கசிய விளையாடிய மிட்செல் சான்ட்னர், நேற்றையப் போட்டியில் சப்ஸ்டிடியூட்டாக சேர்க்கப்பட்டார்.

மொயின் அலி காயத்திலிருந்து திரும்பியிருந்தாலும், நடு வரிசையில் களமிறக்கப்பட்ட வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால், தோனி (17 பந்துகளில் 32 ரன்கள்) மற்றும் ரவீந்திர ஜடேஜா (15 பந்துகளில் 25 ரன்கள்) ஆகியோரின் அதிரடி ஆட்டம் வீணானது. இந்தநிலையில், எப்போதும் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் ரன் எடுக்க அதிக வேகத்தில் ஓடும் தோனி, நேற்று 18-வது ஓவரின் கடைசிப் பந்தில் இயல்பாக ஓட முடியாமல் அவதிப்பட்டதை காண முடிந்தது.

இதனை வர்ணனையாளரும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரருமான மேத்யூ ஹைடன் போட்டியின்போதே குறிப்பிட்டிருந்தார். அதில், “தவறான எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு கொடுக்க மாட்டோம். தோனி இந்தப்போட்டியில் இயல்பாக விளையாடவில்லை. அவரிடம் ஏதோ ஒரு விஷயம் உறுத்தலாக உள்ளது. எப்போதுமே, ரன் எடுக்க மின்சார வேகத்தில் ஓடும் அவர், இன்று ஓடவே சற்று சிரமப்படுகிறார்.

தோனி,
தோனி,ட்விட்டர்

இன்னிங்ஸ் முன்னேறிச் சென்றபோது, ​​அவர் மிகவும் தாங்கியவாறு நடப்பதை (நொண்டுவதை) நாங்கள் பார்த்தோம். இது பெரிய சந்தேக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு காயம் ஏற்பட்டிருக்கும் என நான் கருதுகிறேன். தோனி இதற்கு பதிலளிக்க வேண்டும். மேலும், மருத்துவ குழு அவரை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அவர் இந்தத் தொடரின் அனைத்து போட்டிகளிலும் விளையாட ஆர்வமாக இருக்கிறார்” என்று தெரிவித்திருந்தார்.

போட்டி முடிந்தப் பின்பு தோனி தாங்கி தாங்கி சென்றதை சென்னை அணியும் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு இருந்தது. இந்தநிலையில், சென்னை அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் ஃபிளம்மிங் இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது, “தோனி தனது முழங்கால் காயத்திற்கு சிகிச்சைப் பெற்று வருகிறார். அதனை நீங்கள், அவரது சில அசைவுகளில் காணலாம். அந்தக் காயம் அவருக்கு சற்று தடையாகவே இருக்கிறது. ஆனாலும் இன்றையப் போட்டியில், அவர் சிறந்த வீரராக விளங்கினார். அவரது உடற்தகுதி நன்றாகவே உள்ளது.

போட்டி தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே அவர் அணியுடன் இணைவதற்காக இங்கு வந்தார். அவர் ஒரு சிறந்த வீரர். அவர் மீது எங்களுக்கு எப்போதும் சந்தேகம் இல்லை. தோனி தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார். பழைய ஃபார்மை மீட்டெடுக்க அவர் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இன்னும் சிறப்பாக விளையாடுவதை நீங்கள் பார்க்க முடியும். தனக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பை எப்படி சமாளிப்பது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். விரைவில் தன்னை தயார்படுத்திக்கொள்ளும் தன்மை அவருக்கு உண்டு” என்றார்.

மேலும், நேற்றைய போட்டியின் போது காயமடைந்த சிசண்டா மகலாவும், அடுத்த இரண்டு வாரங்களுக்கு விளையாட மாட்டார் எனவும் பிளெமிங் கூறியுள்ளார். ஏற்கனவே, குஜராத் டைட்டன்ஸ் போட்டி தொடங்குவதற்கு முன்னரே தோனி மூட்டு வலியால் அவதிப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. இதனால் வலைப்பயிற்சியிலும் ஒரு நாள் ஈடுபடாமல் இருந்தார். இதையடுத்து அந்தப் போட்டியில் அவர் களமிறங்குவாரா, இல்லையா என்று கேள்வி எழுந்த நிலையில், கடைசி நேரத்தில் தோனி போட்டியில் களமிறங்கியது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com