CSK vs GT | “தோனிக்காக கோப்பையை வெல்ல வேண்டும்” - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
நடப்பு ஐ.பி.எல்.லில் INEVITABLE என்று ஒருவரின் பெயரை சொல்ல வேண்டுமென்றால் அது சென்னை அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி தான். சீசன் ஆரம்பிக்கும் முன்பாக இது தோனியின் கடைசி ஐபிஎல் என்று தகவல்கள் பரவ, அவர் விளையாடுவதை ஒருமுறையாவது பார்த்து விட வேண்டும் என்று சென்னையிலும் சரி , பிற ஊர்களில் நடைபெற்ற போட்டிகளிலும் சரி ரசிகர்கள் மஞ்சள் நிற ஜெர்ஸியை அணிந்து கொண்டு மைதானங்களுக்கு சாரை சாரையாக படையெடுத்தனர்.

குறைவான பந்துகளையே தோனி எதிர்கொண்டு விளையாடிய போதிலும் ஒவ்வொரு நொடியும் ரசிகர்களின் விசில் மற்றும் கைதட்டல் சத்தம் விண்ணை பிளக்கும் அளவுக்கு இருந்தது. சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டிகளில் தோனி என்ட்ரியான போது ஒலிக்கப்பட்ட பாட்ஷா, படையப்பா , விக்ரம் படங்களின் தீம்கள் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தன.
41 வயதான தோனிக்கு காலில் ஏற்பட்ட காயத்தால் நடப்பு சீசனில் பேட்டிங் செய்யும் போது ரன் ஓடுவதற்கு சிரமப்படுவதை காண முடிந்தது. ஆனால் கேப்டன்ஸியில் அவரது நுணுக்கங்கள் துளியும் குறையவில்லை. எதிரணி பேட்ஸ்மேன்களை தவறான ஷாட்களை ஆடவைத்து அவுட் ஆக்குவதிலும், எதிரணி வீரருக்கு ஏற்றார் போல் பீல்டிங் செட் செய்து ரன் வேகத்தை கட்டுப்படுத்துவதிலும் தற்போது வரை கில்லியாக உள்ளார்.
கடந்த சீசன்களில் ஓய்வு குறித்து “DEFINITELY NOT, I STILL HAVENT LEFT BEHIND” என பதிலளித்திருந்த தோனி , இம்முறை “அடுத்த சீசன் குறித்து முடிவெடுக்க இன்னும் 8 முதல் 9 மாதங்கள் உள்ளது, எப்படி இருந்தாலும் சென்னை அணிக்காக நான் இருப்பேன்” என தெரிவித்தார். இந்த நிலையில் ஐபிஎல்லில் மேலும் ஒரு சாதனையை தோனி படைக்கவுள்ளார். அது, 250 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமை தோனியை சேரவுள்ளது.
நான்கு கோப்பைகளை வென்று தந்த சிறந்த கேப்டனாகவும் , இளம் வீரர்களை சரியாக வழிநடத்தும் தலைவனாகவும் உள்ள தோனிக்கு, சென்னை அணி மிகப்பெரிய கடமைப்பட்டிருப்பதாக ரசிகர்கள் எண்ணுகின்றனர்.

தோனிக்கு இது கடைசி போட்டியாக இருக்கும் பட்சத்தில் சென்னை அணி வீரர்கள் ஐபிஎல் கோப்பையை வென்று அவரை மகிழ்ச்சிகரமாக வழியனுப்ப வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.