பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி
பஞ்சாபை வீழ்த்தியது டெல்லிx

ட்விஸ்ட் வைத்த டெல்லி.. PBKS தோல்வி! MI, RCB, GT- 3 அணிக்கும் வாய்ப்பு! இதுதான் சிறந்த IPL சீசன்!

2025 ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை தோற்கடித்து டெல்லி அணி அசத்தல் வெற்றிபெற்றுள்ளது.
Published on

ஐபிஎல் தொடரானது ஏன் அனைத்து டி20 கிரிக்கெட் லீக்கிற்கும் அரசனாக இருக்கிறது என்பதை மேலும் மேலும் நிரூபித்து சுவாரசியத்தை கூட்டிக்கொண்டே இருக்கிறது.

முதலில் பாதி தொடர் கடந்தபிறகும் பிளேஆஃப் செல்லக்கூடிய அணிகள் யார் என்றே தெரியாமல் இருந்தது, பின்னர் ஒரே போட்டியில் 3 அணிகள் பிளேஆஃப் கதவை உடைத்தன. தற்போது 4 அணிகளும் உறுதிசெய்யப்பட்டபிறகு, எந்த 2 அணிகள் முதலிரண்டு இடத்தை பிடிக்கபோகிறது என்ற சுவாரசியம் அதிகரித்துகொண்டே இருக்கிறது.

ஐபிஎல்
ஐபிஎல்file image

தொடரிலிருந்து வெளியேறிய பிறகும் லக்னோ, ஹைத்ராபாத் மற்றும் டெல்லி 3 அணிகளும் நடப்பு ஐபிஎல் சீசனை இதுவரை இல்லாத ஒரு தரமான சீசனாக மாற்றியுள்ளன.

ஒரு டைரக்டரால கூட இப்படி ஸ்க்ரீன்பிளே எழுதமுடியாது என்பது போல, நொடிக்கு நொடிக்கு ட்விஸ்ட் வைத்துவருகிறது 2025 ஐபிஎல் தொடர்.

டெல்லி அசத்தல் வெற்றி!

இன்றைய பரபரப்பான போட்டியில் டெல்லி கேபிடல்ஸை எதிர்த்து களம்கண்டது பஞ்சாப் கிங்ஸ் அணி. ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 206 ரன்கள் சேர்த்தது. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 34 பந்தில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என பறக்கவிட்டு 53 ரன்கள் அடிக்க, 16 பந்தில் 3 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய ஸ்டொய்னிஸ் ஒரு வலுவான டோட்டலுக்கு பஞ்சாப் அணியை அழைத்துச்சென்றார்.

207 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேஎல் ராகுல் மற்றும் டூபிளசி இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். 6 சிக்சர்கள் 1 பவுண்டரி என சிதறடித்த கேஎல் ராகுல் 35 ரன்களும், டூபிளசி 23 ரன்களும் அடிக்க 6 ஓவரில் 65 ரன்களை கடந்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.

அடுத்தடுத்த இரண்டு ஓவரில் ராகுல் மற்றும் டூபிளசி இருவரும் அவுட்டாக, 3வது வீரராக வந்த 23 வயது ஆப்கானிஸ்தான் வீரர் அட்டல் அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்கவிட்டு கவனம் ஈர்த்தார். ஆனால் அவரை நீண்டநேரம் களத்தில் நிறுத்தாத டெல்லி அணி 22 ரன்னில் வெளியேற்றியது. 10 ஓவரின் முடிவில் 93 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி தடுமாறியது.

ஆனால் 4வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த கருண் நாயர் மற்றும் சமீர் ரிஸ்வி இருவரும் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அணியை மீட்டு எடுத்துவந்தனர். ஒருபக்கம் பொறுப்பை தனதாக்கி கொண்ட கருண் நாயர் நிதானம் காட்ட, சிக்சர்களாக பறக்கவிட்ட சமீர் ரிஸ்வி மிரட்டிவிட்டார். ஒரு பக்கம் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என கருண் நாயர் கிளாசிக்கான பேட்டிங்கை வெளிப்படுத்த, 3 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என நாலாபுறமும் சிதறடித்த சமீர் ரிஸ்வி 22 பந்தில் அரைசதமடித்து அசத்தினார். சமீர் ரிஸ்வியின் அதிரடியால் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.

அனைத்து அணிகளுக்கும் திறந்த குவாலிஃபையர் 1 கதவு!

இந்த போட்டியில் வென்றால் முதலிரண்டு இடங்களில் ஒன்றை பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த பஞ்சாப் அணிக்கு, டெல்லி பரிசளித்த இந்த தோல்வியானது நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மீதமிருக்கும் கடைசி போட்டியில் பஞ்சாப் அணி மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்ளவிருக்கிறது. ஒருவேளை அந்த போட்டியிலும் பஞ்சாப் அணி தோற்றால் 4வது இடத்திற்கு தள்ளப்படும்.

பஞ்சாப் அணியின் இந்த தோல்வி மும்பைக்கு மட்டுமில்லாமல், ஆர்சிபி அணிக்கும், டைட்டன்ஸ் அணிக்கும் சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் 200 ரன்களுக்கு மேல் அடித்தபோதும் ஸ்கோரை தற்காக்க முடியாத கேப்டன்கள் வரிசையில் 4 முறை தோற்று முதலிடத்தை பிடித்துள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர். இது ஒரு ஐபிஎல் கேப்டனின் அதிகபட்ச தோல்விகளாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

நாளை நடக்கவிருக்கும் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான போட்டியில் குஜராத் அணி தோல்வியடைந்தால், அவ்வணியும் 3வது இடத்திற்கு சரியும். இதன்மூலம் 2025 ஐபிஎல் சீசனானது இன்னும் அனல்பறக்கும் சீசனாகவே இருந்துவருகிறது. குஜராத் அணிக்கு சிஎஸ்கே அணி சர்ப்ரைஸ் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com