Ashutosh Sharma
Ashutosh Sharma cricinfo

இறுதிபந்து வரை திக் திக்.. 1 விக்கெட்டில் டெல்லி அணி த்ரில் வெற்றி! களத்தில் கர்ஜித்த அஷுதோஷ் சர்மா!

2025 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.
Published on

அப்பப்பா, கடைசிவரைக்கும் ஹார்ட் பீட் எகிறிடுச்சு; இந்த மாதிரி ஒரு ஆட்டத்தை யாருமே எதிர்ப்பார்க்கல; இதுதான் யா ரியல் ஐபிஎல் மேட்சுனு’, ஐபிஎல் ரசிகர்கள் உற்சாகப்படும் அளவு, ஒரு தரமான போட்டியை வழங்கியுள்ளன லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள்.

போட்டியை தவறவிட்ட ரசிகர்கள் எல்லாம், அட ச்ச இந்த மேட்ச்ச மிஸ் பண்ணிட்டமே என புலம்பவே செய்வார்கள்.

டெல்லி கேபிடல்ஸ்
டெல்லி கேபிடல்ஸ்

2025 ஐபிஎல் தொடரின் 4வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.

மார்ஷ், பூரன் அதிரடியால் 209 ரன்கள் குவிப்பு!

முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய மிட்செல் மார்ஸ், 6 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என மைதானம் முழுவதும் பந்துகளை சிதறடித்து மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர்தான் ஒருபுறம் மரண அடி கொடுக்கிறார் என்றால் 3வது வீரராக களமிறங்கி 7 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் என சிக்சர் மழை பொழிந்த நிக்கோலஸ் பூரன் 30 பந்தில் 75 ரன்கள் அடித்து ருத்ரதாண்டவம் ஆடினார்.

mitchell marsh
mitchell marsh

என்ன தான் மார்ஷ், பூரன் இருவரும் காட்டடி அடித்தாலும், அவருக்கு பிறகு களமிறங்கிய ரிஷப் பண்ட் 0 ரன்னில் நடையை கட்டி ஏமாற்றினார். 17 கோடி கொடுத்து லக்னோ அணிக்கு ஆடுன கேஎல் ராகுலுக்கே அந்த நிலைமைனா, 27 கோடி கொடுத்து வாங்குன ரிஷப் பண்ட்ட சஞ்சீவ் கோயங்கா என்ன பண்ணபோறார்னு தெரியல’ என சில ரசிகர்கள் கலாய்க்கவே செய்தார்கள்.

nicholan pooran
nicholan pooran

அடுத்தடுத்துவந்த எந்த வீரர்களும் சோபிக்காத நிலையில், லக்னோ அணியின் ரன்வேகம் சரிந்தது. கடைசியாக வந்து 2 சிக்சர்கள் 1பவுண்டரி என விரட்டிய டேவிட் மில்லர் லக்னோ அணியை 209 ரன்கள் என்ற நல்ல டோட்டலுக்கு அழைத்துச்சென்றார்.

65 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்த டெல்லி..

210 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய டெல்லி அணிக்கு, முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷர்துல் தாக்கூர் அதிர்ச்சி கொடுத்தார். அடுத்த ஓவரில் இன்னொரு விக்கெட்டும் விழ, 7 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறியது.

ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் நம்பிக்கையை இழக்காத டூபிளெசிஸ் மற்றும் கேப்டன் அக்சர் பட்டேல் இருவரும், சிக்சர் பவுண்டரிகளாக விரட்டி அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர்.

முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்திய லக்னோ அணி பவுலர் ஷர்துல் தாக்கூர்!
முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்திய லக்னோ அணி பவுலர் ஷர்துல் தாக்கூர்!

ஆனால் டூ பிளெசிஸ் 29 ரன்னிலும், அக்சர் பட்டேல் 22 ரன்னிலும் அடுத்தடுத்து நடையை கட்ட 65 ரன்னுக்கே 5 விக்கெட்டுகளை இழந்தது டெல்லி அணி. அவ்வளவு தான் டெல்லி அணிக்கு சோலி முடிஞ்சது என்று நினைத்த நேரத்தில் அடுத்தடுத்து 3 சிக்சர்களை பறக்கவிட்டு நம்பிக்கை கொடுத்தார் தென்னாப்பிரிக்காவின் இளம் வீரர் ஸ்டப்ஸ். ஒரு சிக்சரை 98 மீட்டர் வரை தூக்கி அடித்த ஸ்டப்ஸ் பந்தை தொலைக்க வைத்தார். அவரடித்த அந்த சிக்சர் தான் அவருடைய விக்கெட்டை பறிகொடுக்க காரணமாக மாறியது. புதிய பந்து மாற்றப்பட்ட நிலையில் அடுத்த பந்துவீச்சை சிறப்பாக போட்ட சுழற்பந்துவீச்சாளர் ஸ்டப்ஸை போல்டாக்கி வெளியேற்றினார்.

ஸ்டப்ஸ்
ஸ்டப்ஸ்

இருந்த ஒரு நம்பிக்கையும் போயாச்சு, இனி யாரும் வந்து அடிக்க போறதில்லை என்ற எண்ணத்தில் பல ரசிகர்களும் வேறு வேலையை பார்க்க ஆரம்பித்திருப்பார்கள். ஆனால் வெற்றிபெற இனி வாய்ப்பே இல்லை என்ற இடத்திலிருந்து டெல்லி அணியை மீட்டுஎடுத்துவந்தனர், விப்ராஜ் நிகம் மற்றும் அஷுதோஷ் சர்மா இருவரும்.

1 விக்கெட்டில் த்ரில் வெற்றி..

5 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என துவம்சம் செய்த விப்ராஜ் 15 பந்தில் 39 ரன்கள் குவித்து ஆட்டத்தையே தலைகீழாக திருப்பி போட்டார், ஆனால் சரியான நேரத்தில் விப்ராஜை வெளீயேற்றிய லக்னோ அணி ஆட்டத்தில் மீண்டும் கம்பேக் கொடுத்தது.

ஆனால் இறுதிவரை நிலைத்து நின்ற அஷுதோஷ் சர்மா, 0% வெற்றிவாய்ப்பு என்ற இடத்திலிருந்து 5 சிக்சர்கள் 5 பவுண்டரிகள் என பறக்கவிட்டு அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். 9 விக்கெட்டுகளை இழந்தபோதும் இறுதிவரை வாழ்வா சாவா என திக் திக் மொமண்ட்டுடன் போராடிய டெல்லி அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று அசத்தியது. கடைசிவரை களத்தில் நின்ற அஷுதோஷ் சர்மா 66 ரன்கள் அடித்து ஆட்டநாயகனாக விளங்கினார்.

ashutosh sharma
ashutosh sharma

ஒரு மறக்க முடியாத ஆட்டத்தை ஆடிய அஷுதோஷ் ஒரு நம்பமுடியாத கம்பேக் போட்டியை டெல்லி அணிக்கு ஏற்படுத்தி கொடுத்தார். 211 ரன்களை சேஸ் செய்த டெல்லி அணி, ஐபிஎல்லில் அவர்களுடைய சிறந்த சேஸிங்கை பதிவுசெய்தது.

அடுத்த போட்டியில் குஜராத் அணி பஞ்சாப் அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com