‘கேன் வில்லியம்சன் வெளியே... டேவிட் மில்லர் உள்ளே’ - அதிரடிக்கு தயாராகும் குஜராத் டைட்டன்ஸ்!

குஜராத் டைட்டன்ஸ் அணியில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் வெளியேறிய நிலையில், தென்னாப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லர் இணைந்துள்ளார்.
குஜராத் அணி
குஜராத் அணிKunal Patil, PTI

கடந்த 2022-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் அறிமுகமான ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, அறிமுகப் போட்டியிலேயே கோப்பையை வென்று ஆச்சரியப்படுத்தியது. கடந்த சீசனில் சாம்பியன் பட்டத்தை அந்த அணி வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர் தான், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இடது கை பேட்ஸ்மேன் டேவிட் மில்லர்.

கடந்த ஆண்டு மொத்தம் 16 போட்டிகளில் விளையாடிய அவர், 481 ரன்கள் எடுத்திருந்தார். குஜராத் அணி கடந்த சீசனில் பேட்டிங்கில் சரியும்போதெல்லாம், தனது அதிரடி ஆட்டத்தால் வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றவர் டேவிட் மில்லர் என்றே கூறலாம்.

ஆனால், நடப்பு ஐபிஎல் தொடரில் தென்னாப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லர், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை அணிகள் கடந்த 31-ம் தேதி மோதிய போட்டியில் பங்குபெறாமல் இருந்தார். நெதர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் காரணமாக அவர் ஐபிஎல் முதல் போட்டியில் பங்குபெறாமல் இருந்தநிலையில், தற்போது குஜராத் அணியில் இணைந்துள்ளார்.

அதேநேரத்தில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன், நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ளார். அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில், பேட்டிங் செய்துகொண்டிருந்த சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர் ருதுராஜ், பந்தை சிக்சருக்கு விளாச, பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த குஜராத் அணி வீரர் கேன் வில்லியம்சன், தாவியப்படி பந்தை கேட்ச் பிடிக்க முயற்சி செய்து வலது காலை அழுத்தமாக ஊன்றிய நிலையில், கீழே விழுந்தார். இதில், அவரது வலது காலின் முழங்கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் போட்டியில் பாதியிலிருந்து வெளியேறிய அவர், பின்னர் பேட்டிங் செய்யவும் வரவில்லை.

இந்த நிலையில், கேன் வில்லியம்சன் காயம் காரணமாக நாடு திரும்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com