CSK-வின் 30 வயதை கடந்த ஹீரோக்கள்! தோனி அணியின் Success Story!

எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது சிஎஸ்கே அணியின் சொல்லப்படாத ஒரு தாரக மந்திரமாகும். அப்படி எதிர்பார்க்காத சில சிஎஸ்கே வீரர்கள் ஐபிஎல் தொடரின் ஹீரோவாக ஜொலித்த கதை பற்றி தான் இந்த தொகுப்பு விவரிக்கிறது.
Csk Daddy Army
Csk Daddy ArmyTwitter

சிஎஸ்கே அணியை பொறுத்தவரையில் அனுபவம் வாய்ந்த வீரர்களோ, அதிக விலைக்கு வாங்கப்படும் வீரர்களோ அதிகமாக இருந்ததில்லை. ஸ்குவாடில் இருக்கும் வீரர்களை மட்டுமே வைத்துக்கொண்டு சிறப்பாக செயல்படுவதில் கில்லாடியான அணி என்றால் அது சிஎஸ்கே தான் என்று சொல்லவேண்டும். சென்னை அணி எப்போதும் ஒரு வலுவான டி20 அணியாக இருந்ததில்லை, இருப்பினும் முக்கியமான சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு ஒவ்வொரு மேட்ச் வின்னர்கள் கிடைத்துக்கொண்டே இருப்பார்கள். CSK-விற்கு சென்றாலே ஒரு வீரரின் அதீத திறமை வெளிப்பட்டுவிடும் என்று சொல்லலாம். அதற்கு உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் ஆல்பி மோர்கல்-ன் 27 ரன்கள் ஓவர், ட்வைன் பிராவோவின் மும்பை அணிக்கு எதிரான 2018 ஐபிஎல் ஓபனிங் மேட்ச், ஷேன் வாட்சனின் ஐபிஎல் பைனல் சதம் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

Bravo
BravoTwitter

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தோனி, வீரர்களிடம் என்ன சொல்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்றெல்லாம் தெரியாது. ஆனால் இந்த வீரர் எல்லாம் என்ன செய்ய போகிறார் என ரசிகர்கள் எண்ணும் போதெல்லாம், அவர்கள் மேட்ச் வின்னர்களாக உருவெடுத்துள்ளார்கள். அப்படி எதிர்பாராத சில வீரர்கள் சிஎஸ்கே அணியின் ஹீரோவாக மாறிய கதையில் அம்பட்டி ராயுடு, ஷேன் வாட்சன், ராபின் உத்தப்பாவை தொடர்ந்து தற்போது ரஹானேவும் இணைந்துள்ளார்.

ஒரு திறமை ஈர்த்துவிட்டால் அவர்கள் மீது அதீத நம்பிக்கை வைப்பவர்-எம் எஸ் தோனி!

சிஎஸ்கே அணியின் கேப்டனான எம்எஸ் தோனி, 2020 ஐபில் தொடரில் “இளம் வீரர்களிடம் நான் ஸ்பார்க்கை பார்க்கவில்லை” என்று கூறுவார். அதற்கு விமர்சனங்கள் எழுந்தாலும், அது அவருடைய தீரமான நம்பிக்கையாக எப்போதும் இருந்துள்ளது. அந்த நம்பிக்கையின் பிரதிபலிப்பு தான் அம்பட்டி ராயுடு, ஷேன் வாட்சன், உத்தப்பா, ப்ராவோ, பியூஷ் சாவ்லா, இம்ரான் தாஹீர் போன்ற வீரர்கள் ஓய்வுபெற்ற போதிலும் சிஎஸ்கே அணிக்கு விளையாடினார்கள். ஏனென்றால் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டிகளில் மேற்கூறிய அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடியுள்ளனர்.

dhoni
dhoniTwitter

தோனியை பொறுத்தவரையில், எப்போதும் எதிரணியில் சிறப்பாக விளையாடும் வீரர்களிடம் போட்டி முடிந்தபிறகு பேசுவதை வழக்கமாக வைத்திருப்பார். அவருக்கு ஸ்பார்க்கோடு விளையாடும் வீரர்களிடம் பேசுவது அவ்வளவு பிடித்தமான ஒன்றாகும். அந்த அடிப்படையில் தான், ஷேன் வாட்சன், ராயுடு, உத்தப்பா, ரஹானே அனைவரும் தோனியின் விருப்ப பட்டியலில் வந்துள்ளனர். தோனியை கவர்ந்த இன்னிங்ஸ்கள்,

ஷேன் வாட்சன்

ஷேன் வாட்சன் சிஎஸ்கே அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிய போது 61 பந்துகளில் 101 ரன்களை குவித்துள்ளார். அதில் 6 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் என பறக்கவிட்டு வானவேடிக்கையே நிகழ்த்தியிருப்பார், அந்த போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்றாலும், ஷேன் வாட்சனின் அந்த ஆட்டம் தோனியை கவர்ந்தது. அதனால் சிஎஸ்கே அணியில், பவுலிங் போடவில்லை என்றாலும் பரவாயில்லை பேட்ஸ்மேனாக விளையாடுங்கள் என களமிறக்கினார் தோனி.

Watson
WatsonTwitter

அம்பட்டி ராயுடு

2013-ல் CSk vs MI அணிகளுக்கு இடையே கோப்பைக்கான இறுதிப்போட்டி நடந்தது. அப்போது சிஎஸ்கே அணிக்கு எதிராக மும்பை அணியில் விளையாடினார் அம்பட்டி ராயுடு. அந்த தொடரின் முந்தைய போட்டிகளில் எல்லாம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த ராயுடு, பைனலில் மும்பை அணி 16-3 என விரைவாகவே விக்கெட்டுகளை இழந்த போது, நிலைத்து நின்று விளையாடுவார்.

Rayudu
RayuduTwitter

அவருடைய அன்றைய ஆட்டம் மும்பை அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தது. அவர் அவுட்டாகியிருந்தால் பொல்லார்டின் விக்கெட் எளிதாகவே சென்னை அணியின் கைகளுக்கு சென்று சேர்ந்திருக்கும். போட்டியில் இம்பேக்டாக அமைந்தது ராயுடுவின் ஆட்டம் தான். அதனால் தான் சிஎஸ்கே அணி ராயுடுவை 6.75 கோடி கொடுத்து ஏலத்தில் தக்கவைத்தது.

ரஹானே

2011-ல் ராஜஸ்தான் அணியில் விளையாடிய அஜிங்யா ரஹானே, சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டி ஒன்றில், முக்கியமான விக்கெட்டுகள் எல்லாம் விழுந்த பிறகு, கடைசி வரை நிலைத்து நின்று விளையாடுவார். அந்த போட்டியில் வெற்றிபெற்றுவிடலாம் என்றே நினைத்திருந்தார் தோனி. ஆனால் அரைசதம் அடித்து பெவிலியன் நோக்கி நான் இருக்கிறேன் என்று சைகை செய்வார் ரஹானே. அந்த போட்டிக்கு பிறகு ரஹானேவிடம் சென்று பேசினார் தோனி. அன்றைய ரஹானே ஆட்டம் தோனியை பெரிதும் கவர்ந்திருந்தது.

Rahane
RahaneTwitter

உத்தப்பாவை பொறுத்தவரையில், தோனி மற்றும் உத்தப்பா இருவரும் தொடக்க காலத்தில் ஒன்றாகவே தங்களது கிரிக்கெட் பயணத்தை தொடர்ந்துள்ளனர். 2007 டி20 உலகக்கோப்பையில் தோனி தலைமையில் உத்தப்பா விளையாடியுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்துள்ளார் உத்தப்பா.

30 வயதுக்கு அதிகம் இருந்த வீரர்களால் “டாடி ஆர்மி” என விமர்சிக்கப்பட்ட சிஎஸ்கே!

இப்படி ஐபிஎல்லில் தோனியின் கவனத்தை ஈர்த்த அனைத்து வீரர்களையும் சிஎஸ்கே அணிக்குள் எடுத்துவந்து, அனைவரது அதீத திறமையையும் பயன்படுத்திக்கொண்டுள்ளார். தோனியின் நம்பிக்கையின் பேரில் சிஎஸ்கே அணிக்குள் வந்த மூத்த வீரர்கள் அனைவரும், சிஎஸ்கேவிற்கு கடைசி 2 கோப்பையை வெல்ல முழுகாரணமாக இருந்தனர்.

Dhoni
DhoniTwitter

2018ஆம் ஆண்டு ராயுடு மற்றும் வாட்சன் இருவரும் ஒன்றாகவே சிஎஸ்கே அணிக்குள் நுழைந்தனர். இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு களமிறங்கிய சிஎஸ்கே அணியில் அதிகம் 30 வயதிற்கு மேலான வீரர்களே இருந்ததால், அனைவராலும் டாடி ஆர்மி என விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் டாடி ஆர்மி, எப்படி இவர்களை எல்லாம் வைத்துகொண்டு கோப்பையை வெல்ல போகிறீர்கள் என்ற அனைத்து விமர்சனத்தையும் உடைத்து கோப்பையை வென்றது சிஎஸ்கே.

அதிக ரன்கள் எடுத்த ராயுடு! ரத்தம் சொட்ட விளையாடிய வாட்சன்!

சிஎஸ்கே அணிக்குள் வந்த வாட்சன் மற்றும் ராயுடு இருவரும், 2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 555 ரன்கள் மற்றும் 602 ரன்கள் என மாறிமாறி குவித்து சென்னை அணியை பைனலுக்கு எடுத்து சென்றனர். இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணிக்கு எதிராக சதத்தை பதிவு செய்து அசத்தினார் வாட்சன். பைனலில் சதமடித்த 2ஆவது வீரர் என்ற பெருமையை தக்கவைத்து, சிஎஸ்கேவிற்கு கோப்பையை பரிசளிப்பார் வாட்சன்.

Watson
WatsonTwitter

2018ஐ தொடர்ந்து 2019 ஐபிஎல் தொடரிலும் அதே ஆட்டத்தை வெளிப்படுத்திய ராயுடு மற்றும் வாட்சன் இருவரும், சிஎஸ்கே இறுதிப்போட்டிக்கு முன்னேறியதில் பெரிய பங்கு வகித்தனர். 2019 ஐபில் பைனலில் மும்பை அணியை எதிர்கொண்ட சிஎஸ்கே அணிக்காக, கால்களில் ரத்தம் சொட்ட களத்தில் நின்று விளையாடுவார் ஷேன் வாட்சன். வெற்றிக்கு ஒரே ஒரு பவுண்டரி தான் தேவை என்ற இடத்தில் 19.4 ஓவரில் வாட்சன் அவுட்டாகி வெளியேற, 1 ரன்னில் கோப்பையை இழக்கும் சிஎஸ்கே. அப்படி ரத்தம் சொட்டும் அளவு வாட்சன் சிஎஸ்கே அணிக்காக தன்னை அர்ப்பணித்து விளையாடினார்.

2021 செமி பைனல் மற்றும் பைனலில் கலக்கிய உத்தப்பா!

உத்தப்பாவை அணியில் எடுத்த போதும், அதிக வயதான வீரர் என்ற அதே விமர்சனம் தான் சிஎஸ்கே நிர்வாகம் மீது வைக்கப்பட்டது. ஆனால் 2021-ல் சென்னை கோப்பையை கைப்பற்றுவதற்கு இம்பேக்ட் வீரராக அவர் தான் இருக்கப்போகிறார் என்று சிஎஸ்கே ரசிகர்களுக்கு தெரியாமல் இருந்தது.

Uthappa
UthappaTwitter

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் போட்டியில், ஃபேஃப் டூப்ளசி 1 ரன்னிற்கு வெளியேற களத்திற்கு வந்த உத்தப்பா 7 பவுண்டரிகள், 2 சிக்சர் என விரட்டி 10 ஓவரிலேயா போட்டியின் முடிவை உறுதிசெய்துவிடுவார். அதைத்தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான பைனலிலும் 3 சிக்சர்களை பறக்கவிட்டு உத்தப்பா தன்னுடைய பங்களிப்பை சிறப்பாக செய்திருந்தார். அந்த தொடரில் சென்னை கோப்பையை வென்று அசத்தியது.

Rahane
RahaneTwitter / Csk

இவர்களை தொடர்ந்து தற்போது சிஎஸ்கே அணிக்குள் நுழைந்திருக்கும் ரஹானே, மும்பை அணிக்கு எதிரான போட்டியில், யாரும் எதிர்பார்க்காத நிலையில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். அவருடைய அசத்தலான இந்த ஆட்டம் சிஎஸ்கே ரசிகர்களை கொண்டாட்டத்தின் எல்லைக்கே கொண்டுசென்றுள்ளது. இந்நிலையில் வாட்சன், ராயுடு, உத்தப்பாவை தொடர்ந்து ரஹானேவும் சிஎஸ்கே அணிக்கு கோப்பையை வெல்லும் வீரராக மாறுவாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com