சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு தமிழக வீரர் கூட இல்லை என்ற குற்றச்சாட்டு, அதிகளவில் இருந்துவரும் நிலையில், தமிழக வீரர்கள் குறித்தும், தமிழக வீரரின் திறமை குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார், சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் ஃபிளெமிங்.
அரையிறுதி வாய்ப்புக்கான முக்கியமான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடைபெற்ற அந்தப் போட்டியில், சேப்பாக்கம் மைதானத்தில் சிறப்பாக பந்துவீசிய கொல்கத்தா ஸ்பின்னர்கள், சென்னை அணியை நிலைகுலையச் செய்தனர்.
அதில் சுனில் நரைன் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், மென் இன் ஃபார்மில் இருக்கும் ருதுராஜ் மற்றும் ரஹானே இருவரையும் வெளியேற்றி, கொல்கத்தா அணியின் வெற்றிவாய்ப்பை அதிகமாக்கியவர், தமிழக வீரரான வருண் சக்கரவர்த்தி தான். 4 ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய வருண், கேம் சேஞ்சராக செயல்பட்டார். இந்நிலையில் போட்டிக்கு பிறகான செய்தியாளர் சந்திப்பில், வருண் சக்கரவர்த்தியை சிஎஸ்கே அணியில் எடுக்காதது, இன்னும் தங்கள் அணியை சோதித்துவருவதாக தெரிவித்துள்ளார் ஸ்டீபன் ஃபிளெமிங்.
“மிஸ்ட்ரி ஸ்பின்னர்” என குறுகிய காலத்திலேயே அழைக்கப்பட்டு வரும் வருண் சக்கரவர்த்தி, முதன்முதலில் சிஎஸ்கே அணியின் நெட் பவுலராக தான், தன் கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார்.
2018ஆம் ஆண்டு வரை பல வருடங்கள், சென்னை அணியின் பின்புலத்தில் செயல்பட்ட வருண், வலைப்பயிற்சியில் சில மாயாஜால சுழற்பந்தை வீசி, எம் எஸ் தோனி உட்பட அனைத்து சிஎஸ்கே பேட்டர்களையும் நிலைகுலையச் செய்துள்ளார். தொடக்கத்தில் வருண் சக்கரவர்த்தியின் திறமையை பாராட்டினாலும், சென்னை அணியால் அவரை அணிக்குள் எடுத்துவர முடியாமல் போனது.
2019 ஐபிஎல் ஏலத்தில் முதன்முதலாக வருண் சக்கரவர்த்தி பங்குபெற்றார். தன்னுடைய முதல் ஏலத்திலேயே அனைத்து ஐபிஎல் அணிகளின் கவனத்தையும் ஈர்த்தார், வருண். முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்ல் கேபிடல்ஸ் அணியும் அவருக்காக போட்டியிட்டன. 3.40 கோடி வரை சென்னை அணி டெல்லியுடன் மள்ளுக்கட்டி பின்வாங்கியது.
பிறகு டெல்லிக்கும், பஞ்சாப் அணிக்கும் ஏலத்தில் போட்டி முட்டிக்கொள்ள, வருண் சக்கரவர்த்திக்கான விலையானது 5 கோடியை தொட்டது. இந்த முறை ராஜஸ்தான் ராயல், பஞ்சாப் உடன் போட்டி போட, இறுதியில் உள்ளே வந்த கொல்கத்தா அணியானது, வருணுக்கான விலையை 8 கோடிவரை எடுத்துச்சென்றது. ஆனால் இறுதிவரை விட்டுக்கொடுக்காத பஞ்சாப் அணி, 8.40 கோடிக்கு வருண் சக்கரவர்த்தியை தங்களது அணிக்குள் முதலில் எடுத்தது. ஆனால் எதிர்ப்பார்த்த ஆட்டத்தை வருண் வெளிக்காட்டாததால், பின்னர் பஞ்சாப் அணி அவரை விடுவித்தது.
பின்னர் 2020ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் பங்குபெற்ற அவரை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸோடு போராடி 4 கோடிக்கு அணிக்குள் எடுத்தது. இந்நிலையில் 2023ஆம் ஆண்டு தற்போது, 12 கோடிக்கு வருண் சக்கரவர்த்தியை தங்களுடைய அணியில் தக்கவைத்துள்ளது, கொல்கத்தா அணி.
வருண் சக்கரவர்த்தி 2022 ஐபிஎல் தொடரில் பெரிதாக சோபிக்காத நிலையில், 2023ஆம் ஆண்டு தன்னுடைய அபாரமான பந்துவீச்சால் மிரட்டிவருகிறார். அதற்கு பெரிய காரணமாக மாறியுள்ளது, அவர் புதிதாக அவருடைய சுழலில் சேர்த்துள்ள லெக் ப்ரேக் பந்துவீச்சு தான். முந்தைய காலங்களில் எல்லாம், அவர் வேகமான மற்றும் ஷார்ப்பான கூக்ளியால் மட்டும் தான் மிரட்டி வந்தார். மேலும் அவருடைய சீம் எனப்படும் பந்து ரிலீஸ் செய்யும் பொசிசனும் க்ராஸ்ஸாகவே இருந்துவந்தது.
இந்நிலையில் தன்னுடைய தோல்வியில் இருந்து மீண்டு எழுவதற்காக, தொடர்ந்து போராடி வந்த வருண், தன்னுடைய பந்துவீச்சில் அதிகளவிலான வேரியேசனை கொண்டுவந்து மிரட்டிவருகிறார். தற்போது அப்பர் சீம் போசிசனை வைத்திருக்கும் அவர், இரண்டு பக்கமும் பந்தை வேகமாக திருப்புகிறார். விரைவாக பவுன்சாகும் கேரம் பந்துகளை வீசுவதோடு, கூக்ளியுடன் லெக் பிரேக்கையும் ஷார்ப்பாக வீசுகிறார். அவருடைய கூர்மையான லெக் பிரேக் தான், தற்போது விக்கெட்டுகளை வாரிவழங்கி வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 19 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார் வருண்.
வருண் சக்ரவர்த்தியின் பந்துவீச்சை பாராட்டி பேசியிருக்கும் ஸ்டீபன் ஃப்ளெமிங், “அவரை ஏலத்தில் வாங்க முடியாமல் போனது, இன்னும் எங்களுக்கு வேதனை அளிக்கிறது. பல ஆண்டுகளாக வலைபயிற்சியில் எங்களை சித்திரவதை செய்துவந்தார். அவருடைய திறமையை நாங்கள் உண்மையில் அறிந்திருந்தோம். ஆனால் ஏலத்தின் வழியால் எங்களால் அவரைத் தக்கவைக்க முடியவில்லை. பல்வேறு அணிகளைச் சுற்றியிருக்கும் தமிழக வீரர்களிடம் விஷயம் இருக்கிறது. அவர்களுக்கும் அவரைப் பற்றித் தெரியும் என்பதால், அவரை எடுக்க அனைத்து அணிகளும் போட்டிப்போட்டன. முடிவில் எங்களால் அவரை ரகசியமாக வைத்திருக்க முடியவில்லை” என்று கூறினார்.
மேலும், “அவர் கொஞ்சம் கொஞ்சமாக எங்களை விட்டு வெளியேறினார். இடையில் காயத்தில் இருந்தாலும் மீண்டும் வந்து எங்களுக்கு எதிராக களத்தில், மிகச்சிறப்பாக பந்துவீசினார். அவர் உண்மையில் கொல்கத்தா அணியின் ஆயுதமாக செயல்பட்டார். நரைன் போன்ற ஒரு வீரரோடு, வருணும் சேர்ந்துகொண்டால், ஆடுவது சேப்பாக்கமாகவும் இருந்துவிட்டால், நம்மால் எதுவும் செய்யமுடியாது. நாங்கள் ஆடுகளத்தின் தன்மையை புரிந்துகொள்வதில் சிக்கலை சந்தித்தோம். மேலும் நரைன் மற்றும் வருணுக்கு எதிராக எதிர்ப்பாட்டத்தை விளையாடாமல் போனோம். அதனால் தான் தோல்வியை சந்திக்க நேர்ந்தது” என்று தெரிவித்துள்ளார்.