’இததான் எதிர்ப்பார்த்தோம்..’ CSK அணியில் இணைந்த தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரர்!
5 கோப்பைகள் வென்று ஐபிஎல் கிரிக்கெட்டின் GOAT அணியாக வலம்வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2025 ஐபிஎல் தொடரை மறக்கவே முடியாத ஒரு சீசனாக கொண்டுள்ளது.
2023-ம் ஆண்டு கோப்பை வென்ற கையோடு கேப்டன்சிக்கு தோனி குட்-பை சொன்னபோது, அடுத்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு இளம்வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டை தற்காத்த சென்னை அணி முக்கியமான முடிவை எடுத்தது.
ஆனால் தோனி கட்டிஎழுப்பிய லெகஸியை இளம்வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டால் தொடர்ந்து காப்பாற்றி எடுத்துசெல்லமுடியுமா என்ற மிகப்பெரிய கேள்வி இருந்தது. அந்த சூழலில் 2024 ஐபிஎல் தொடரில் கெய்க்வாட் தலைமையில் 5வது இடத்தை பிடித்த சிஎஸ்கே அணி பிளேஆஃப்க்கு செல்லாமல் தொடரிலிருந்து வெளியேறியது.
அதிகஅழுத்தம் நிறைந்த ஐபிஎல் தொடரில் இளம் கேப்டனான ருதுராஜ்ஜிடம் சில குறைகள் இருந்தாலும், 2025 ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடுவேன் என தோனி சொன்னதால், சிஎஸ்கே அணி சிறப்பான கம்பேக் கொடுக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் நடப்பு ஐபிஎல் தொடரில் காலடி வைத்தது.
எப்போதும் இல்லாத படுமோசமான தோல்விகள்..
முதல் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தினாலும், அடுத்த 5 போட்டிகளில் வரிசையாக தோற்ற சென்னை அணியில் இருக்கும் பிரச்னைகள் பூதாகரமாக வெடித்தது. எந்தளவு அந்த பிரச்னை எழுந்தது என்றால், இருக்கும் பிளேயிங் லெவனை மொத்தமாக கலைக்க வேண்டும் என ரசிகர்கள் குமுறும் அளவு ஒரு மோசமான அணியாக சென்னை அணி நடப்பு ஐபிஎல் சீசனில் வலம்வருகிறது.
18 வருடத்தில் முதல்முறையாக சேப்பாக்கத்தில் மிகைக்குறைவான ஸ்கோராக 103 ரன்களை அடித்த சிஎஸ்கே, 18 வருடத்தில் முதல்முறையாக வரிசையாக 5 போட்டிகளில் தோற்றது, அதனுடன் 18 வருடத்தில் முதல்முறையாக ஒரு இன்னிங்ஸில் ஸ்பின்னர்களுக்கு எதிராக 6 விக்கெட்டுகளை இழந்த சிஎஸ்கே, 18 வருடத்தில் முதல்முறையாக சொந்த மண்ணான சேப்பாக்கத்தில் 3 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை சந்தித்தது.
அதுமட்டுமில்லாமல் சேப்பாக்கத்தில் வென்றதேயில்லை என்ற அணியான ஆர்சிபிக்கு எதிராக 17 ஆண்டுகளுக்கு பிறகு தோல்வி, டெல்லி அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு தோல்வி என ’இன்னும் என்ன கொடுமைலாம் நாங்க பார்க்கனுமோ’ என்று ரசிகர்கள் மனவேதனை படுமளவு ஒரு கிரிக்கெட்டை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிவருகிறது.
இப்படியான மோசமான சூழலில் தோனி மீண்டும் சிஎஸ்கேவின் கேப்டனாக மாறியுள்ளார். அவர் வந்தபிறகு வெற்றிப்பாதைக்கு திரும்பியிருக்கும் சென்னை அணியில் இரண்டு தரமான மாற்றங்களை செய்து ’இதைத்தான் நாங்க எதிர்ப்பார்த்தோம்’ என ரசிகர்கள் உற்சாகப்படும் 2 இளம் வீரர்களை அணியில் எடுத்துள்ளது சிஎஸ்கே.
களம்காணும் 21 வயது அதிரடி வீரர்..
சில தினங்களுக்கு முன்னதாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதிலாக மும்பையை சேர்ந்த 17 வயது வீரர் ஆயுஷ் மாத்ரேவை அணியில் இணைத்தது சிஎஸ்கே. இந்தாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபியில் சவுராஷ்டிரா அணிக்கு எதிராக சதம் விளாசிய ஆயுஸ் மாத்ரே 7 ஆட்டங்களில் விளையாடி 65.42 சராசரியுடன் 458 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. 17 வயதான ஆயுஸ் மாத்ரே 30 லட்சத்திற்கு சிஎஸ்கே அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
இந்த சூழலில் இன்று மீண்டும் ஒரு இளம் வீரரை அணியில் எடுத்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இரட்டை மகிழ்ச்சியை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளது. காயமடைந்த குர்ஜப்னீத் சிங்கிற்கு பதிலாக தென்னாப்பிரிக்காவின் டெவால்ட் பிரெவிஸை சென்னை சூப்பர் கிங்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது. சிக்ஸ் ஹிட்டிங் பேட்ஸ்மேனான இவரை முன்னாள் அதிரடி மன்னன் ஏபிடி வில்லியர்ஸ் உடன் ஒப்பிட்டு வருகிறார்கள் கிரிக்கெட் வல்லுநர்கள். 81 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள டெவால்ட் பிரெவிஸ், ஒரே டி20 இன்னிங்ஸில் 162 ரன்கள் குவித்து மிரட்டியுள்ளார். 145 ஸ்டிரைக்ரேட்டுடன் 1787 ரன்கள் அடித்திருக்கும் அவர் இதுவரை 123 சிக்சர்களை அடித்துள்ளார்.
மீதமிருக்கும் 7 போட்டியில் 6 ஆட்டங்களில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சென்னை அணி, ஒரு பவர்-பேக்டு அணியாக களமிறங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.